தமிழகத்தில் திரைப்பாடல்களில் கண்ணதாசன் மிக உச்சியில் நின்றுகொண்டிருந்த காலம். தத்துவம், சோகம் என கவிமழை அவரது பேனாவில் இருந்து ஊற்றெடுத்து அனைவரையும் திக்குமுக்காட வைத்துக்கொண்டிருந்தது. கண்ணதாசன் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என விரல் சொடுக்கியவர்கள் நிழல்கள் பட பாடலைக் கேட்டதும் சற்றே தலை நிமிர்த்திப் பார்த்தார்கள். பொன்மாலைப் பொழுது என்னும் பாடல் மூலம் தனது வருகையை அறிவித்திருந்தார் வைரமுத்து. இசைபிரம்மா இளையராஜாவின் இசையில் வைரமுத்துவின் வரிகள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. அடுத்தவருடமே அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக அவருக்கு தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது தேடிவந்தது.

தமிழகம் மெதுவாக வடுகப்பட்டி தந்த வரலாற்று எழுத்தாளனுக்கு காது கொடுக்க ஆரம்பித்தது. 1985 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் முதல்மரியாதை வெளிவந்து வைரமுத்துவிற்கு முதல் தேசியவிருதை பெற்றுத்தந்தது. வைரமுத்து வெளிச்சத்திற்கு வந்த நேரம் இளையராஜாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு அவரை பின்னுக்குத்தள்ளியது. இனி பேனாவிற்கு வேலையில்லை என வைரமுத்து முடிவெடுத்திருந்த வேளையில் மணிரத்னம் இளையராஜாவிடம் இருந்து பிரிந்து விலகியிருந்தார். புது இசையமைப்பாளராகியிருந்த ரகுமான், கவிப்பேரரசு, மணிரத்னம் மூவரும் ரோஜாவில் இணைந்தார்கள்.
வெகுகாலம் காத்திருந்த வைரமுத்து சின்ன சின்ன ஆசை என எழுத, தேசிய விருது வாங்கியது அந்தப்பாடல். அதன்பிறகு நிகழ்ந்தவை எல்லாமே வரலாறு தான். சுழித்து ஓடும் திரைத்துறையில் பெரும் மலையென எழுந்து உயர்ந்தார். இதுவரை 7 முறை சிறந்த பாடலாசிரியருக்கான விருதை பெற்றிருக்கும் வைரமுத்துவின் எழுத்தும் மிகமுக்கியமானவையாகும்.
அவர் எழுதி ஆனந்தவிகடனில் வெளிவந்த கள்ளிக்காட்டு இதிகாசம் இந்திய இலக்கியத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் சாகித்திய அகாடமி விருதைப் பெற்றது. நாவல் வெளிவந்து எத்தனையோ ஆண்டுகள் ஆனாலும் இன்னும் பேயத்தேவர் பற்றி பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் மக்கள். அவரது வட்டார வழக்கு தமிழக்கிய வரலாற்றில் புதிய பக்கங்களைத் திறந்துவைத்தது. அதேபோல் தண்ணீர் தேசத்தில் கவிதை நடையில் காவியம் படைத்தார். இன்றும் தமிழகத்தில் எங்கு புத்தகக்கண்காட்சி நடந்தாலும் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களின் வரிசையில் வைரமுத்துவின் புத்தகங்களும் இருக்கின்றன. தமிழக திரைப்பட வரலாற்றில் வைரமுத்து என்றும் ஒரு மைல்கள். இளைய பாடலாசிரியர்களுக்கு அவர் ஒரு இலக்கு. அடைய சற்றே கடினமான இலக்கு.

தொடர்ச்சியாக 5000 த்திற்கும் மேலான பாடல்களை எழுதி, இந்தியாவிலேயே அதிகமுறை தேசிய விருதைப்பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இதனையொட்டி அவரது ரசிகர்கள் சமூகவலைத்தலங்களில் அவரின் சாதனைகளை நினைவுகூர்ந்து வருகின்றனர்.