சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்களை ஆராய அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா Transiting Exoplanet Survey Satellite (சுருக்கமாக TESS) என்னும் செயற்கைக்கோள் ஒன்றினை ஏவியது நம் அனைவருக்கும் தெரியும். எக்சோ பிளாநெட்ஸ் எனப்படும் நமது சூரியக் குடும்பத்திற்கு அருகே உள்ள கோள்களைக் கண்டுபிடிப்பதுதான் இந்த செயற்கைக்கோளின் நோக்கமாகும். தற்போது பூமியிலிருந்து 31 ஒளியாண்டுகள் தூரத்தில் மூன்று கோள்களை இந்த TESS செயற்கைக்கோள் கண்டுபிடித்திருக்கிறது.

GJ 357 என்னும் நட்சத்திரத்தைச் சுற்றி இந்த மூன்று கோள்களும் வலம் வருகின்றன. அவை முறையே GJ 357 b, GJ 357 c மற்றும் GJ 357 d ஆகும். இந்த நட்சத்திரத்தைப் பொறுத்தவரை நமது சூரியனைக்காட்டிலும் 40 சதவிகிதம் வெப்பம் குறைவானதாகும். சூரியனுடைய நிறையில் மூன்றில் ஒருபங்கு தான் இந்தப் புதிய நட்சத்திரம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
GJ 357 b
இந்தக் குழுவிலேயே முதலில் கண்டுபிடிக்கப்பட்டது இந்த GJ 357 b கோளைத்தான். நமது பூமியைப்போன்று 22% அளவில் பெரியதாகவும், 80% அதிக நிறை கொண்டதாகவும் இக்கோள் இருக்கிறது. இதனாலேயே ஆராய்ச்சியாளர்கள் இதனை super-Earth என அழைக்கின்றனர். நமது சூரியக்குடும்பத்தில் புதன் – சூரியன் இடையேயான தூரத்தைவிட இக்கோளுக்கும் GJ 357 நட்சத்திரத்திற்கும் இடையே உள்ள தூரம் 11% அதிகமாகும். சராசரி வெப்பநிலையாக 490 டிகிரி பாரன்ஹீட் இருக்கும் இந்தக் கோள் 3.9 நாட்களில் நட்சத்திரத்தை சுற்றிவருகிறது.

GJ 357 b
தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கோள் குடும்பத்தின் வெளி எல்லையில் அமைந்திருப்பது இந்த GJ 357 b. அதன் மைய நட்சத்திரத்திலிருந்து அதிக தூரத்தில் இருப்பதால் இங்கே நீர்ம நிலையில் தண்ணீர் இருக்கலாம் என்கிறார்கள் ஆராயச்சியாளர்கள். இங்கே பூமியில் இருப்பதைப்போன்றே பாறைகள் இருக்கின்றனவாம். 55.7 நாட்களில் சூரியனைச் சுற்றுவரும் இந்தக்கோளின் சராசரி வெப்பநிலை – 64 டிகிரி பாரன்ஹீட் ஆகும். பூமியைப் போலவே இதன் வளிமண்டல அடர்த்தி அதிகமிருப்பதால் எதிர்காலத்தில் நாசா இக்கோளைப் பற்றிய ஆய்வில் இறங்கும் என்கிறார்கள் வானியல் வல்லுனர்கள்.
GJ 357 c
இந்தக்குடும்பத்தில் நடுவில் இருக்கும் இக்கோள் பூமியைப் போன்று 3.4 மடங்கு எடை அதிகம் கொண்டதாகும். 9.1 நாட்களில் அதன் நட்சத்திரத்தைச் சுற்றிவரும் இந்த கோளின் சராசரி வெப்பநிலை 260 டிகிரி பாரன்ஹீட் ஆகும்.

இந்த மூன்று கோள்களில் GJ 357 b ல் தான் நீர்ம நிலையில் தண்ணீர் மற்றும் அடர்த்தியான வளிமண்டலம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆகவே இந்த ஆய்வுக்குழு அடுத்தகட்ட ஆராய்ச்சியை அக்கோளில் மேற்கொள்ள இருக்கிறது.