சென்னை மற்றும் மதுரை இடையே பயணிக்கும் தேஜஸ் விரைவு ரயில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் கன்னியாகுமரியில் துவங்கிவைக்கப்பட்டது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 130 முதல் 200 கிமீ வரை செல்லக்கூடிய இது அதிநவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு முழுவதும் சென்னையிலுள்ள எழும்பூரிலேயே தயாரிக்கப்பட்டதாகும். இந்த ரயில் வாடிக்கையாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

அறிமுகம் செய்யப்பட்டது முதல் மூன்று மாத காலத்திற்குள் 10.21 லட்சம் மக்கள் இந்த தேஜஸ் ரயிலைப் பயன்படுத்தியுள்ளனர். இதன்மூலமாக 17.7 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. வியாழன் தவிர வாரத்தின் மற்ற அனைத்து நாட்களிலும் இந்த ரயில் சேவை அளிக்கப்படுகிறது. மொத்தமுள்ள 13 பெட்டிகளில் ஒரு பெட்டி உயர்தர குரூட்டப்பட்ட பெட்டியாகும். இதில் 57 பயணிகள் பயணிக்கலாம். மற்ற குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் தலா ஒரு பெட்டிக்கு 78 பேர் இருக்கலாம். இருக்கைகக்ளின் பின்புறம் டிவி, இலவச இணைய வசதி மற்றும் செல்போன் சார்ஜர் ஆகிய சிறப்பு வசதிகள் இந்த தேஜஸ் ரயிலில் கொடுக்கப்பட்டுள்ளன.
வியாழன் தவிர்த்து ஏனைய நாட்களில் மதுரையில் இருந்து மதியம் 3.30 க்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு சென்னையை வந்தடையும். அதேபோல சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.30 க்கு மதுரையை வந்தடைகிறது. மார்ச் இரண்டாம் தேதி முதல் ஜூன் 27 வரை மதுரையில் இருந்து சென்னைக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் 96408 பேரும், சிறப்பு பெட்டியில் 5768 பேரும் பயணித்துள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

கட்டணத்தைப் பொறுத்தவரை சிறப்பு பெட்டியில் ஒருவருக்கு உணவுடன் சேர்த்து 2295 ரூபாயும், உணவின்றி 1940 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. அதேபோல் சாதாரண குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் உணவுடன் ஒருவருக்கு 1195 ரூபாயும், உணவில்லாமல் 895 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் தனியார் பேருந்தில் சென்னையில் இருந்து மதுரை வரை பயணிக்க 500 முதல் ஆயிரம் வரை செலவாகும் நிலையில் இந்த தேஜஸ் ரயிலை மக்கள் விரும்புவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.