உயர் பதவிகளில் இருப்போர் மற்றும் வசதி படைத்தவர்கள் மானிய விலையில் கிடைக்கும் பொருட்களை குடும்ப அட்டைகளை உபயோகித்து பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு வெகுகாலமாகவே வைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் போலி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழவே, மாநிலத்தில் உள்ள அனைத்துக் குடும்ப அட்டைகளையும் ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஜூலை 11-ம் தேதி மாநில உணவுத்துறை அமைச்சர் தலைமையில் அனைத்து மாவட்ட வழங்கல் துறை அலுவலர்கள், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது.

சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மாவட்ட வாரியாக உள்ள முன்னுரிமைக் குடும்ப அட்டைகள், முன்னுரிமை அல்லாத குடும்ப அட்டைகள், அந்தியோதயா அன்னயோஜனா திட்ட அட்டைகள் குறித்து முழுமையான தணிக்கை செய்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிடப்பட்டது. எந்தெந்த அட்டைக்கு என்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்களையும் தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி கீழே குறிப்பிட்டுள்ள 10 விதிமுறைகளில் ஒன்று இருந்தாலும் அவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்படமாட்டாது.
கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட அட்டைகளில் 70 சதவிகிதம் தமிழக அரசின் புதிய பரிந்துரையின் அடிப்படையில் மானிய விலையில் பொருட்கள் வாங்க தகுதியில்லாதவை எனத் தெரியவந்துள்ளது.
வருமான வரி செலுத்தும் நபரை குறைந்தது ஓர் உறுப்பினராகக் கொண்ட குடும்பம், தொழில் வரி செலுத்துவோரை உறுப்பினர் களாகக் கொண்ட குடும்பம், 5 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்துள்ள பெரு விவசாயியைக் கொண்ட குடும்பம், மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளில் பணி யாற்றும் அல்லது ஓய்வு பெற்றவர்களை உறுப்பினராகக் கொண்ட குடும்பம், 4 சக்கர வாகனத்தைச் சொந்தப் பயன்பாட்டுக்கு வைத்துள்ள குடும்பம், ஏசி வைத்திருக்கும் குடும்பம், 3 அல்லது அதற்கும் மேல் அறைகளைக் கொண்ட கான்கிரீட் வீடுகள் உள்ள குடும்பம், வணிக நிறுவனங்களைப் பதிவு செய்து செயல்படுத்தும் குடும்பம், அனைத்து ஆதாரங்களில் இருந்தும் பெறப்படும் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் மேல் உள்ள குடும்பம் என மொத்தம் பத்து வரையறைகள் உள்ளன. இதில் இடம்பெறும் எந்த குடும்பத்திற்கும் குடும்ப அட்டை கிடையாது.

இந்த ஆய்வுப்பணியின் முதற்கட்டமாக மதுரை மாவட்டத்தில் குடும்ப அட்டை சரிபார்ப்பு நடந்தது. கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட அட்டைகளில் 70 சதவிகிதம் தமிழக அரசின் புதிய பரிந்துரையின் அடிப்படையில் மானிய விலையில் பொருட்கள் வாங்க தகுதியில்லாதவை எனத் தெரியவந்துள்ளது. மத்திய அரசு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தைக் கொண்டுவந்தால் தடை செய்யப்படும் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை மிக அதிக அளவு உயரும் என்கிறார்கள் ஆய்வில் ஈடுபட்டுவரும் அதிகாரிகள்.