கடந்தவாரம் கலிபோர்னியாவில் உள்ள மாண்டேரி விரிகுடா கடற்கரையில் வழக்கம்போல் கடல் சிங்கங்கள் மீன்களை வேட்டையாடிக்கொண்டிருந்தன. ஆனால் தங்களுக்குப்பின்னால் திமிங்கிலம் ஒன்று வருவதை அவை கவனிக்கத்தவறி இருக்கின்றன. ஹம்பக் ரக திமிங்கிலம் ஒன்று கடல் சிங்கங்கள் மிதந்து கொண்டிருந்த பகுதியில் நீர்பரப்பிற்கு வெளியே வந்து தனது வாயை அகலத் திறந்துள்ளது. அப்போது சிங்கம் ஒன்று திமிங்கிலத்தின் வாயில் சிக்கியது. இதனை வனவிலங்கு புகைப்படக் கலைஞர் புகைப்படம் எடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட அப்புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
ஜூலை 23 ஆம் தேதி சேஸ் டக்கர் (Chase Dekker) மாண்டேரி கடலில் திமிங்கிலங்களை புகைப்படம் எடுப்பதற்கான சிறப்பு படகு ஒன்றில் பயணித்திருக்கிறார். Sanctuary Cruises என்னும் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த படகில் திமிங்கிலங்கள் அதிகம் உலவும் பகுதிக்கு சேஸ் பயணிக்கும் போதுதான் இந்த அரிய காட்சியை அவர் பார்த்துள்ளார்.
திமிங்கிலத்தின் கீழ் தாடையிலிருந்து அதன் தொண்டைக்கு வழுக்கிச் செல்லும் நிலையில் இருந்திருக்கிறது கடல் சிங்கம். உடனே அதனை புகைப்படம் எடுத்திருக்கிறார் டக்கர். மேலும் நிச்சயம் அந்த கடல் சிங்கம் தப்பித்திருக்கும் என்று சமூக வலைதளங்களில் டக்கர் தெரிவித்திருக்கிறார். திமிங்கலம் நீருக்குள் செல்லும் போதும் அதன் வாய்ப்பகுதி திறந்தபடியே இருந்ததால் கடல் சிங்கத்திற்கு ஒன்றும் ஆகியிருக்காது என்றார் டக்கர்.

நேஷனல் ஜியோகிராபி அளித்த தகவலின் படி, ஹம்பக் ரக திமிங்கிலங்களின் உணவுக்குழாய் அதிகபட்சமாக 15 அங்குலம் தான் விரியும். ஆகவே சுமார் 1000 கிலோ எடையுள்ள கடல் சிங்கத்தை திமிங்கலம் விழுங்குவதற்கு வாய்ப்பே இல்லை என டக்கர் குறிப்பிட்டுள்ளனர். சிறியவகை மீன்கள் ஒன்றாக இணைந்து பந்துபோல சில நேரங்களில் மாறும். பிளாங்கடான்களைத் தின்ன அவை இப்படி ஒன்றினையும். அந்தக்கூட்டத்தை விழுங்கத்தான் திமிங்கிலம் முயற்சித்திருக்கிறது. அதே நேரத்தில் கடல் சிங்கமும் போட்டியிட்டது தான் இந்த வினோத செயலுக்குக் காரணம் என்கிறார் டக்கர்.