இங்கிலாந்தில் நடைபெற்றுவந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நேற்றோடு முடிவடைந்திருக்கின்றன. எதிர்பாராத திருப்பங்களும், ஆரவாரமும் கண்ணீரும் கலந்த இந்த தொடரின் சிறந்த வீரர்கள் கொண்ட அணியை சர்வதேச கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. அதில் இந்தியாவின் கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆகியோருக்கு இடம் வழங்கப்படவில்லை.

ஐசிசி அணியில் இடம்பிடித்த வீரர்கள்
ஜேசன் ராய் (இங்கிலாந்து) – 443 ரன்கள்
ரோகித் சர்மா (இந்தியா) – 648 ரன்கள்
கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) – 578 ரன்கள்
ஷாகிப் அல் ஹசன் (வங்க தேசம்) – 606 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டுகள்
ஜோ ரூட் (இங்கிலாந்து) – 556 ரன்கள்
பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) – 465 ரன்கள் மற்றும் 7 விக்கெட்டுகள்
அலெக்ஸ் கேரி (ஆஸ்திரேலியா) – 375 ரன்கள், 20 ஆட்டமிழப்புகள்
மிர்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) – 27 விக்கெட்டுகள்
ஜோஃப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து) – 20 விக்கெட்டுகள்
பெர்குசன் (நியூசிலாந்து) – 21 விக்கெட்டுகள்
பும்ரா (இந்தியா) – 18 விக்கெட்டுகள்
ரோஹித் மற்றும் பும்ராவிற்கு வாய்ப்பு
ஐசிசியின் இந்த அணியில் இந்தியாவிலிருந்து ரோஹித் ஷர்மா மற்றும் ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகிய இருவர் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் ரோகித் சர்மா (648 ரன்கள்) முதலிடம் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஒரு ரன் வித்தியாசத்தில் முதலிடத்தை தவறவிட்டார். பும்ரா சிறப்பாக பந்துவீசி 18 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் அவருக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்படிருக்கிறது.

கோலி அவுட் ஏன்?
இங்கிலாந்தின் ஜேசன் ராயும், இந்திய கேப்டன் விராட் கோலியும் சமமாக 443 ரன்கள் எடுத்திருந்த போதிலும் ராய்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது பேட்டிங் சராசரி. 7 போட்டிகளில்மட்டுமே விளையாடி 443 ரன்களை எடுத்த ஜேசன் ராயின் பேட்டிங் சராசரி 63.29. அதேவேளையில் 9 போட்டிகளில் விளையாடி 443 ரன்கள் எடுத்த கோலியின் பேட்டிங் சராசரி 55.38 தான். இரண்டாவது அரையிறுதி போட்டியில் மிக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி ஒரு ரன்னில் வெளியேறியது. அன்று தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தால் நிச்சயம் இந்தியா வெற்றி பெற்றிருக்கும்.
தோனியின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள்
உலகக்கோப்பை போட்டிகளில் மிகமெதுவாக ஆடுகிறார் என்று இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மீது முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். நியூசிலாந்து அணியுடனான அரையிறுதி போட்டியிலும் தோனியின் ஆட்டம் வழக்கத்தை விட பொறுமையாகவே இருந்தது கண்டனங்களை குவித்தது.

வில்லியம்சன் கேப்டன்
ஐசிசி அறிவித்திருக்கும் இந்த பிளேயிங் லெவனில் நியூசிலாந்து கேப்டனான கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு உலகக்கோப்பையில் 578 ரன்கள் எடுத்ததோடு மட்டுமல்லாமல் நியூசிலாந்து அணியை இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக வழிநடத்தி இறுதிப்போட்டி வரை எடுத்துச்சென்றார். அதனால் அவருக்கு இந்த சிறப்பு வழங்கப்பட்டிருக்கிறது.