ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்து மனிதனை ஆச்சர்யப்படுத்துவது விண்வெளி தான். சூரியனையும், நிலவையும், கண்சிமிட்டும் பல லட்சக்கணக்கான நட்சத்திரங்களைக் குறித்த மனிதனது ஆர்வம் பல அபூர்வ சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. இத்தனையாண்டுகால ஆராயச்சியில் நிகழாத அற்புதமொன்றை ஒற்றைப் புகைப்படம் நிகழ்த்திக்காட்டியிருக்கிறது. ஆமாம். சூரியனை இத்தனை நெருக்கமாக இதுவரை எந்த தொலைநோக்கியும் புகைப்படம் எடுத்ததில்லை. ஒருங்கிணைந்த துகள்களாக சூரியன் காட்சியளிக்கிறது. கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.

பார்ப்பதற்கு கடலைமிட்டாய் போல் இருக்கிறதல்லவா? இதில் தெரியும் ஒவ்வொரு துகளும் சுமார் 1600 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டவை என்றால் சூரியனின் பிரம்மாண்டத்தை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். இன்றைய தொழில்நுட்பத்தால் இத்தனை தூரத்தில் இருந்துதான் இப்படத்தை எடுக்க முடிந்திருக்கிறது. சரி, எப்படி எந்த புகைப்படம் எடுக்கப்பட்டது?
உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி
பசிபிக் பெருங்கடலில் இருக்கும் மாய் (Maui) என்னும் தீவில் அமெரிக்காவின் தேசிய அறிவியல் முகமையின் பிரம்மாண்ட ஆய்வகம் அமைந்துள்ளது. இங்குதான் உலகில் மிகப்பரிய சூரிய தொலைநோக்கியான டேனியல் இனோய் சூரிய தொலைநோக்கி இதில் சூம் (zoom) செய்துதான் மேற்கண்ட போட்டாவைக் “கிளிக்”கியிருக்கிறார்கள் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் பிளாஸ்மா அலைகள் மற்றும் காந்தப்புல வேறுபாடு குறித்தும் இங்கே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
1612 ஆம் ஆண்டு இத்தாலிய ஆராய்ச்சியாளரான கலிலியோ தான் முதன்முதலில் சூரியனை தொலைநோக்கி மூலம் ஆராயத் தொடங்கினார். அதன்பிறகான இத்தனை ஆண்டுகளில் சூரியன் குறித்து திரட்டப்பட்ட தகவல்களைவிடவும் அதிகமான தகவல்களை இந்த டேனியல் இனோய் சூரிய தொலைநோக்கி நமக்கு வழங்கியுள்ளது. இதற்கு அது எடுத்துக்கொண்ட கால அளவு வெறும் ஐந்து ஆண்டுகள் மட்டுமே!!
சூரியனின் மேற்பரப்பில் தோன்றும் இந்த பிளாஸ்மா அலைகளின் காந்தப்புலம் மாறுபடுவதால் இவற்றின் முடுக்கம் அதிகமாகி சூரியப்புயலாக உருவெடுக்கின்றன. இப்படி ஆற்றல் குறைந்த அலைகளை நாம் சில நேரங்களில் பூமியிலிருந்தே பார்க்க முடியும். இவைதான் துருவப்பகுதிகளில் வடக்கொளிகளை தோற்றுவிக்கின்றன. சூரியனுக்கும் பருவநிலை மாற்றத்திற்கும் உள்ள தொடர்பை அறியும் நோக்கிலும் இந்த ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
வெளிப்புற சூரிய ஆய்வில் மிகவும் சிக்கலானது எனக் கருதப்படுவது இரண்டுதான். முதலாவது சூரியனின் உட்புறமான கரோனாவில் இருந்து வெடித்து வெளியேறும் வெப்ப அலைகளின் பண்புகளைக் கணக்கிடுவது. இதில் உள்ள பெரிய சிக்கல் என்னவென்றால் பல மில்லியன் டிகிரி செல்சியசில் தக்கிக்கும் கரோனாவைக் கண்காணிப்பது சற்றே சவாலான காரியம். இரண்டாவது இந்த அதீத வெப்பத்தால் ஏற்படும் காந்தப்புலம் மற்றும் அதில் ஏற்படும் மாறுபாடுகள். இந்த இரண்டையும் தீர்மானிக்க நவீன அறிவியல் திணறிக்கொண்டிருந்த வேளையில்தான் இப்புகைப்படத்தை எடுத்து ஆராய்ச்சியாளர்களின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது டேனியல் இனோய் சூரிய தொலைநோக்கி. இதனால் இனிவரும் காலங்களில் சூரியனின் மற்றைய புதிர்களும் அவிழ்க்கப்படும் என நம்பலாம்.
மேலதிக தகவல்களுக்கு கீழேயுள்ள வீடியோவைப் பார்க்கவும்.