மத்திய ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் தான் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு கட்டணமாக பிளாஸ்டிக் பாட்டில்கள் ஏற்றுக்கொள்ளப்பப்படுகின்றன. இதனால் இங்கு வாழும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஏனெனில் நைஜீரியா உலகின் மிகவும் ஏழை நாடுகளில் ஒன்றாகும். 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி அதிக பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படும் நாடுகளில் நைஜீரியா 11 வது இடத்தில் இருக்கிறது. சுகாதார குறைபாட்டால் பொதுமக்கள் அதிகளவு பாதிப்பிற்குள்ளாகும் நாடுகளில் நைஜீரியா முன்னிலையில் இருக்கிறது.

உலகில் வறுமையின் தாய்நாடாக அழைக்கப்படும் நைஜீரியாவில் சுமார் 87 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். மொத்த மக்கட்தொகையில் பாதிக்கும் அதிகமானோர் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளனர். இவர்களின் ஒருநாளைய சம்பளம் வெறும் 1.90 அமெரிக்க டாலர்கள் தான். வேலைவாய்ப்பு இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் கணிசமான மக்கள் அருகிலிருக்கும் நாடுகளுக்கு பஞ்சம் பிழைக்க சென்றுவிடுகின்றனர். இவர்களின் படிப்பறிவின்மை, வாட்டும் வறுமை ஆகியவற்றை பல சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர். இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாங்கித் தருவதாக கூறி அழைத்துச்சென்று வெளிநாடுகளில் அடிமைகளாக விற்கப்படுகிறார்கள். குறிப்பாக இங்குள்ள பெண்கள் பலர் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் அடிமைகளாக இருக்கிறார்கள்.
வறுமை ஒருபுறம் என்றால் இங்கு தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகள் நைஜீரிய மக்களுக்கு மற்றொரு வகையில் ஆபத்தை விளைவிக்கிறது. இதனைக்கட்டுப்படுத்தும் விதமாகவே Africa Cleanup Initiative (ACI) என்னும் அமைப்பு பள்ளிகளுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஒப்பந்தத்தின்படி மாணவர்களின் கல்விக்கட்டணத்திற்கு பதிலாக பள்ளிகள் பிளாஸ்டிக் பாட்டில்களை வசூலித்துக்கொள்ளலாம். ஒவ்வொரு 200 கிலோ பிளாஸ்டிக்குக்கும் 4,000 நைராக்கள் (naira) வழங்கப்படுகிறது. அதாவது 11 அமெரிக்க டாலர்கள். இதனால் நைஜீரிய பெற்றோர்கள் குழந்தைகளின் கல்விச்செலவை எளிதாக சமாளித்துக்கொள்கின்றனர்.

ACI அமைப்பு மட்டும் தனியாக நைஜீரிய தலைநகர் லாகோஸில் ஐந்து பள்ளிகளை நடத்திவருகிறது. இங்கு சுமார் 1000 குழந்தைகள் மறுசுழற்சி முறையில் கல்வி கற்கின்றனர். பள்ளிகளில் இவ்வாறு சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை Wecyclers என்னும் மறுசுழற்சி நிறுவனம் பெற்றுக்கொள்கிறது. இதனைப் பயனுள்ள முறையில் மீண்டும் உபயோகப்படக்கூடிய பிளாஸ்டிக் பொருளாக மாற்றுகிறது. இப்படி மேலும் சில தனியார் நிறுவனங்களும் நைஜீரியாவின் வறுமை, படிப்பறிவின்மை, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை ஆகிய மூன்றின் மேலும் போர்தொடுத்து வருகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் நைஜீரியாவும் உலக அரங்கில் மகத்தான மாற்றத்தின் அங்கமாக இருக்கும் என தீர்க்கமாக நம்பலாம்.