ஸ்விட்சர்லாந்து நாட்டைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் நெஸ்ட்லே நிறுவனம் தான் சாக்கலேட் ஏரியாவின் ரூட்டுத் தல. மாறிவரும் வாடிக்கையாளர்களின் விருப்பம் மற்றும் சுற்றுச்சூழல் அக்கறையுடன் தனது புதிய சாக்கலேட் ஒன்றை நேற்று வெளியிட்டிருக்கிறது. அதென்ன புதுமையான சாக்லேட் என்கிறீர்களா? அதில் இனிப்புக்கென தனியாக சர்க்கரை சேர்க்கப்படவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்க்கரை இல்லையென்றால் அதெப்படி சாக்லெட்டாக இருக்க முடியும்? அங்குதான் புதிய யுக்தி ஒன்றினை கடைபிடித்திருக்கிறது நெஸ்ட்லே. அதாவது கொக்கோ பழத்திலிருந்தே இனிப்புகான மூலத்தை அந்த நிறுவனம் எடுத்து அதைவைத்து சாக்லேட் தயாரித்திருக்கிறது.

சாக்லேட் தயாரிக்க பயன்படுத்தப்படும் அதிமுக்கிய மூலப்பொருளான கொக்கோ பழத்தினை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடுகள் ஐவரி கோஸ்ட், கானா, நைஜீரியா மற்றும் இந்தோனேஷியா. சாக்லேட் மட்டுமல்லாது பல குளிர்பான தயாரிப்பிலும் முக்கியமாக காப்பி தயாரிப்பிலும் இவை முக்கிய பங்காற்றுகின்றன. இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும் காய்களுக்குள் கொக்கோ விதைகள் இருக்கும். இதனைக்கொண்டே சாக்லேட் தயாரிக்கும் பணிகளை நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. ஆனால் விதைகளை சுற்றியிருக்கும் சதைப்பகுதியை தூக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால் நெஸ்ட்லே அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறது.
பொதுவாக தூக்கி எறியப்படும் இந்த சதைப்பகுதியை பவுடராக மாற்றி அதிலிருக்கும் fructose ரக இனிப்புப் பொருளைக்கொண்டு சாக்லேட் தயாரித்திருக்கிறது நெஸ்ட்லே நிறுவனம். இந்த செய்முறைக்கு தனியாக காப்புரிமை பெற்றிருக்கிறது இந்த நிறுவனம். இந்த மாற்றத்தால் சாக்லேட்டின் சுவையில் எந்த மாற்றமும் இருக்காது எனத் தெரிவித்துள்ளது. சாதாரண சர்க்கரையில் சுக்ரோஸ் எனப்படும் இனிப்புப்பொருள் இருக்கும். இது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதோடு ஒப்பிடும்போது ஃபிரக்டோஸ் ஆபத்தில்லாதது என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஏன் இந்த மாற்றம்?
நெஸ்ட்லே நிறுவனத்தின் இந்த திட்டத்திற்கு பின்னால் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இருக்கிறது. ஆமாம் மாண்டலேஸ் இன்டெர்நேஷனல் (Mondelez International) என்னும் நிறுவனம் சாக்லேட் மற்றும் மைக்கா ஆகியவற்றைத் தயாரிக்கும் கூட்டமைப்பு கடந்த வருடம் கொக்கோ சாகுபடி செய்யும் விவசாயிகளின் வாழ்க்கை தரம் மிக மோசமாக இருப்பதாகவும், அதனை மேம்படுத்த முன்னணி நிறுவனங்கள் கைகோர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது.

இதன்படி மேற்கண்ட யோசனையை முன்னெடுத்தது நெஸ்ட்லே நிறுவனம். இதன்மூலம் அவ்விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். காலநிலை மாற்றமும் கொக்கோ பயிரிடுதலில் கடும் விளைவுகளை ஏற்படுத்திவரும் இந்த நிலையில் நெஸ்ட்லேயின் இந்த முடிவை மாண்டலேஸ் நிறுவனம் வரவேற்றிருக்கிறது. நெஸ்ட்லேயின் இந்த புதிய சாக்லேட் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஜப்பானில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.