இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்று எடுத்துக்கொண்டால் இரண்டு பெயர்களை குறிப்பிடாமல் ஒரு வரியையும் எழுத முடியாது. முதலாவது இந்தியாவின் முதல் பிரதமர் ஜவர்ஹலால் நேரு. இரண்டாவது முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங். இவருடைய ஆட்சியின்போது தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதற்கான விதையை இந்நிலத்தில் ஊன்றியவர் நேரு தான். நேருவிற்கு ஐம்பது வருடம் கழித்து கொண்டுவரப்பட்ட திட்டத்திற்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்?
சுதந்திர இந்தியா என்னும் குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகாத நிலையில் துணிச்சலான பல நடவடிக்கைகளை எடுத்தவர் நேரு. அக்காலகட்டத்தில் தொடர்ந்து ஐந்து பஞ்சங்களை இந்தியா சந்தித்ததின் விளைவாக மூன்றில் ஒருபங்கு மக்கள் இறந்தனர். உணவுத்துறையில் தன்னிறைவு அடைவதே முதல் லட்சியமாக நேருவிற்கு இருந்தது. வெறும் 171 கோடி வருவாயைக்கொண்ட இந்தியாவின் முதல் பட்ஜெட்டை வைத்துக்கொண்டு பக்ராநங்கல் எனும் மிகப்பெரிய அணையைக் கட்டும் தைரியம் நேருவிற்கு வந்ததற்குக் காரணம் அப்போதைய இந்தியா சந்தித்த வறுமையும், வேலைவாய்ப்பின்மையும் தான்.

ஐஐடி, அணுசக்தித் துறை என எதிர்கால இந்தியா பயணிப்பதற்கான ராஜபாட்டையை நேரு உருவாக்கிக்கொண்டிருந்தார். சாப்பாட்டிற்கே வழியில்லாத வேளையில் எதற்கு ஆராய்ச்சிக் கூடங்கள் ? என இடதுசாரிகளும், இந்துத்துவவாதிகளும் நேருவின் அரசை கடுமையாக விமர்சித்தனர். ஆனாலும் நேரு தன்னுடைய முயற்சியில் ஓரடி கூட பின்வாங்கவில்லை. தொழில்துறை வளர்சியின் மூலம் வேலைவாய்ப்பை உருவாக முடியும். அணைகள் கட்டுமானத்தை ஊக்குவிக்கும் மூலம் விவசாயத்திற்கான நிலப்பரப்பை அதிகரிக்கலாம் என நேரு நினைத்தார்.
இதனடிப்படையில் நகர மற்றும் கிராமப் பொருளாதாரம் ஆகிய இரண்டுமே வளர்ந்தது. ஆரம்பத்தில் பணக்காரர்களிடம் செல்லும் செல்வம் பின்னர் அவர்கள் மூலமாக ஏழைகளுக்கு, விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதனை பொருளாதார அறிஞர்கள் Trickle down effect என்கிறார்கள். அதாவது நிலவுடைமை கொண்டிருந்தவர்களிடம் அதிக பணம் செல்லும் நிலையில் அவர்கள் அதிக அளவில் விவசாயிகளை வேலைக்குச் சேர்த்துக்கொள்வார்கள். இப்படி ஏழைகளும் தங்களுடைய வேலைக்கு கூலி பெறமுடியும். வேலைவாய்ப்பும், அடித்தள மக்களிடம் பணப்புழக்கமும் (Grassroot Money circulation) இதனால் அதிகரிக்கக்கூடும் என நேரு தீர்க்கமாக நம்பினார்.

திட்டம் பாதி வெற்றிபெற்றது. பணக்காரர்கள் அதிக செல்வத்தை ஈட்டினார்கள். ஆனால் ஏழைகளிடம் அச்செல்வம் சென்றடையவில்லை. இதற்கு மிக முக்கியக் காரணம் ஏழை மக்களிடத்தில் நிலம் இல்லாதிருந்தது. நில உடைமையாளர்களிடம் இருந்த ஏராளமான நிலத்தை மீட்டு ஏழைகளுக்கு உதவும் வகையில் கொண்டுவரப்பட்டது தான் நில உச்சவரம்புச் சட்டம். பல எதிர்ப்புகளுக்கு இடையில் நேரு இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்தினார். ஆனாலும் இந்திய சமூக சூழலில் புரையோடியிருந்த ஜாதிய அமைப்பு ஏழைகளின் மீது அப்போதும் வெளிச்சம் பாய்ச்ச முடியாமல் தடுத்தது.
அதன்பின்னர் வந்த இந்திராகாந்தி தலைமையிலான அரசும், கிராமப்புற பணச் சுழற்சி என்பதை மையமாகக்கொண்டு பல திட்டங்களை கொண்டுவந்தது. அதில் முக்கியமானவை ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் (Integrated Rural Development Program) மற்றும் இருபது அம்சத் திட்டம். நகரங்களுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை கிராமங்களும் பெறத்தக்க வகையில் ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் திட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்தார். நகர்பாலிகா திட்டமும் இதனை உறுதி செய்தது.
இப்படி அடுத்தடுத்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டும், கிராமப்புறத்தில் வறுமையைப் போக்குவதற்கும், வேலைவாய்ப்பைப் பெருக்குவதற்கும் புதிய திட்டத்திற்கான தேவை இருக்கத்தான் செய்தது. கல்வித்துறையில் ஏழை கிராமப்புற மக்களுக்கான முன்னுரிமையை அதிகரித்தது அம்மக்களை நகரங்கள் நோக்கி இழுத்தது. குறிப்பாக புதிய தொழிற்சாலைகள் அதிகமாக திறக்கப்பட்ட போது திறனுள்ள பணியாளர்களுக்கான (Skilled Labors) தேவையும் அதிகரித்தது. இதனால் கிராமத்தில் இருந்த படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு காரணமாக பல நகரங்களுக்கு இடம்பெயர்ந்தார்கள். இன்று வரையிலும் அதே நிலைமைதான் தமிழகத்தில் நீடிக்கிறது.
ஆனால் கிராமப்புற படிப்பறிவில்லாத மக்களுக்கு போதுமான வேலைவாய்ப்பை உருவாக்குவது அரசுக்கு சவாலாகவே இருந்தது. குறிப்பாக பெண்களுக்கு. கிராமப்புற பணச் சுழற்சியைப் பெருக்க வேண்டுமானால் கிராமப் பெண்களிடம் பணம் சென்றடைய வேண்டும். இதனடிப்படையில் தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இத்திட்டத்தை செயல்படுத்தியது.
திறன் தேவைப்படாத வேலைகளை அவர்களுக்கு ஒதுக்கி, அதன்மூலம் கிராமப் பயன்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பணியாளர்களுக்கான வருவாய் ஆகியவற்றையும் அரசு வழங்க முடிவு செய்தது. கிராம மக்களின் சுய தேவைக்கான பணிகளான நீர்நிலைகளைத் தூர்வாருதல், பயன் தரும் மரங்கள் மற்றும் நிழல் தரும் மரங்களை வளர்த்தல், சுகாதார நடவடிக்கைகள் ஆகியவற்றை இத்திட்டத்தின் மூலம் அந்தந்த கிராம மக்களே நிறைவேற்றிக்கொள்ளலாம். அதற்கான ஊதியமும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
கிராமப்புற மக்களின் தற்சார்பு, வேலைவாய்ப்பு, அடித்தட்டு மக்களிடையே பணச்சுழற்சி, வறுமை ஒழிப்பு என நான்கு மிகப்பெரிய பலன்களை அளிக்கும் இத்திட்டம் ஆரம்பத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA) என்னும் பெயரில் துவங்கப்பட்டு பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும் பல மக்கள் இதனை 100 நாள் வேலை என்றே அழைக்கிறார்கள். இந்திய வரலாற்றிலேயே கிராமப்புற மக்கள் அதிகளவில் பயன்பெறுவது இத்திட்டத்தின் மூலமாகத்தான்.
மத்திய அரசு கொண்டுவந்த திட்டம் என்றாலும், இதன் கட்டுப்பாடுகள் முழுவதும் கிராமப் பஞ்சாயத்திடம் இருக்கிறது. ஆட்களை வேலைக்குச் சேர்த்துக்கொள்வது, பணியட்டைகள் வழங்குவது போன்றவைகள் அந்தந்த பஞ்சாயத்துக்களே மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தில் பணியாற்றும் மக்கள் நினைத்தால் அவர்களின் கிராமத்தில் பல நலத்திட்டங்களை கொண்டுவர முடியும். இத்தனை மகத்தான திட்டத்தின் செயல்பாடுகள் சில இடங்களில் தொய்வடைவதற்குக் காரணம் கிராம பஞ்சாயத்து அளவில் நடைபெறும் ஊழல்களும், பொறுப்பிலாத குடிமக்களுமே.