
நிலவின் தென்துருவத்தை ஆராய இந்தியாவால் அனுப்பப்பட இருந்த சந்திராயன் 2 விண்கலம் கடைசி நேர தொழில்நுட்ப குளறுபடியினால் நிறுத்தி வைக்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்த விண்கலத்தில் நிலவின் தரைப்பகுதியை ஆராய ரோவர் ஒன்று இருக்கிறது. இதனை உருவாக்கிய போது நிலவின் மண் மாதிரிக்கு பதிலாக சேலம் மாவட்டத்தில் உள்ள சித்தம்பூண்டி என்னும் கிராமத்தில் இருந்து மண் எடுக்கப்பட்டு அதன்மீது ரோவர் செயல்படும் விதத்தை கணக்கிட்டிருக்கின்றனர் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள்.
ஏன் சித்தம்பூண்டி மண்?
மொத்தமாக 5000 மீட்டர் தான் இந்த ரோவரால் பயணிக்க முடியும் என்றாலும், நிலவின் தரைப்பகுதி பூமியைப்போல் இருக்காது. நிலவு ஆராய்ச்சியில் பல நாடுகள் களத்தில் இருக்கின்றன. குறிப்பாக அங்குள்ள மண்ணின் அமைப்பு ரோவரின் இயக்கத்தை எப்படி பாதிக்கும் என்பதை எந்தவொரு விண்வெளி ஆராய்ச்சி மையமும் முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்கவேண்டும். நாசாவிடம் நிலவின் மண் மாதிரி இருக்கின்றது. அவர்களுடைய நிலவு ஆராய்ச்சி அந்த மண்ணில் தான் நடக்கிறது. அவர்களிடம் இருந்து இறக்குமதி செய்யலாம் என்றால் ஒரு கிலோ 150 டாலர்கள் ஆகிறது. இஸ்ரோவின் தேவையோ 60-70 டன். இத்திட்டம் பெரும் செலவுகளை உள்ளடக்கியதால் அமெரிக்க இறக்குமதி திட்டத்தை இஸ்ரோ கைவிட்டது.
சேலத்தில் இருந்து 65 கி.மீ தொலைவில் சேலம்-திருச்செங்கோடு நெடுஞ்சாலை பகுதியில் இருக்கிறது சித்தம்பூண்டி மற்றும் குன்னாமலை கிராமங்கள். இங்குள்ள மண் நிலவு மண் போன்ற இயற்பியல் பண்புகளை பெற்றிருப்பதை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இதற்குக்காரணம் இங்குள்ள மண்ணில் இருக்கும் Anorthosite பாறைகளால் இந்த மண் உருவாக்கப்பட்டிருப்பதே ஆகும். கடந்த 2014 ஆம் ஆண்டே சித்தம்பூண்டி மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அதன்பின்னர் சுமார் 400 – 500 மீட்டர் வரை துளையிட்டு ஆராய்ச்சிக்கான மண் எடுக்கப்பட்டிருக்கிறது.

25 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தில், National Institute of Technology in Trichy, Periyar University in salem மற்றும் Indian Institute of science (bengaluru) ஆகிய பல்கலைக்கழத்தின் வல்லுநர்கள் இணைந்து எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பணியாற்றி உள்ளனர். இஸ்ரோ தலைமையிலான குழு மூலம் Anorthosite பாறை மற்றும் மண்ணை தேவையான மைக்ரோ அளவிற்கு மாற்றப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.