இன்னும் பத்தாண்டுகளில் இந்த உலகத்தை கலங்கடிக்க இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று கழிவுப்பொருள் மேலாண்மையாகத்தான் இருக்கும். உலகில் பெரும் நாடுகள் கூட இந்த விஷயத்தில் சறுக்குகின்றன. ஐரோப்பிய நாடுகளின் குப்பைகக்கூடமாக ஆப்பிரிக்கா மாறியிருக்கிறது. மட்கும் குப்பைகள் குறித்து சிக்கல் இல்லை. ஆனால் பிளாஸ்டிக் என்னும் பெரும்பூதத்தின் ஆயுள் மில்லியனில் கணக்கெடுக்கப்படுவதுதான் இங்கே ஆபத்தாக பார்க்கப்படுகிறது.

பிளாஸ்டிக்கை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக். மற்றொன்று மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக். ஆனால் இந்த மறுசுழற்சிக்கு உகந்த பிளாஸ்டிக்கை மூன்று அல்லது நான்கு முறை தான் சுழற்சிக்கு உட்படுத்த முடியும். அதன்பின்னர் அதன் இயற்பியல் பண்புகள் அனைத்தையும் அது இழந்துவிடும். அவற்றை மீண்டும் மறுசுழற்சி செய்ய முடியாது. குப்பைதான். அதுவும் மிகநீண்ட ஆயுளைக்கொண்ட குப்பை. ஆனால் அதிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் எடுத்து அசத்துகிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த பேராசிரியர் சதீஸ் குமார்.
இயந்திரவியல் துறையில் பேராசிரியராக இருக்கும் சதீஷ் குமாருக்கு இந்த யோசனை கடந்த 2013 ஆம் ஆண்டு வந்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குறித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றை படித்த மாத்திரத்தில் அவருக்குள் இந்த மாற்று சிந்தனை உதித்திருக்கிறது. இந்தப்பணிகளுக்கான வேலைகளை அப்போதே துவங்கிவிட்டார் சதீஷ். தற்போது அதில் முழு வெற்றியடைந்திருக்கும் அவர் தயாரிக்கும் பெட்ரோல் மற்றும் டீசலை சுற்றுப்புறத்தில் இருக்கும் சிறிய நிறுவனங்களுக்கு ரூபாய் 40 க்கு வழங்குகிறார்.

செயல்முறை
பிளாஸ்டிக் என்பது ஒரு பாலிமர் ஆகும். பல மோனோமர்கள் இணைந்து பாலிமரை உருவாக்குகிறது. (அணுக்கள் இணைந்து மூலக்கூறுகளை உருவாக்குவதை கற்பனை செய்துபாருங்கள்) இப்படி பல மோனோமர்கள் இணைந்து பாலிமரை உருவாக்கும் செயல் பாலிமெரிசேஷன் எனப்படுகிறது. இந்த இணைப்பை அதிக வெப்பத்தைப் பயன்படுத்தி பிரித்தால் மோனோமர்கள் எரிபொருளாக மாற்றம் அடையும் இதனைத்தான் சதீஸ் செய்கிறார்.

பெரிய சேம்பர்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக்குகள் 350 முதல் 400 செல்சியஸ் வரை சூடேற்றப்படுகின்றன. இந்த நிகழ்வானது முழுவதும் காற்று இல்லாத வெற்றிடத்தில் நடைபெறுகிறது. இதன்பின்னர் உருகிய திரவம் வடிகட்டப்பட்டு பிரிக்கப்படுகிறது. சிறிதளவு எரிவாயுவும், கரியும் இறுதியில் கிடைக்கும். இந்த செயல்முறையால் எந்தவித மாசுபடும் இல்லை என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சதீஷின் நிறுவனத்திற்கு சான்றிதல் அளித்துள்ளது. வாகனங்களில் இவை இதுவரை உபயோகித்து பார்க்கவில்லை எனினும் சிறு மற்றும் குறு நிறுவனங்களின் எரிபொருள் தேவையை இந்த பெட்ரோல் மற்றும் டீசல் பூர்த்தி செய்யும் என்கிறார் சதீஷ். தற்போது லிட்டர் பெட்ரோல் 40 ரூபாய்க்கு இவருடைய நிறுவனம் விற்பனை செய்துவருகிறது.

500 கிலோ பிளாஸ்டிக்கை கொண்டு 400 லிட்டர் வரை நம்மால் பெட்ரோல் எடுக்க முடியும் என்கிறார் சதீஷ். அவருடைய நிறுவனமான ஹைட்ராக்ஸி நாள்தோறும் சுமார் 200 பிளாஸ்டிக்கைக் கொண்டு 200 லிட்டர் பெட்ரோலை உற்பத்தி செய்துவருகிறது. தனது நிறுவனத்தை தேசிய நடுத்தர, சிறு மற்றும் குறு நிறுவனங்களின் கூட்டமைப்பில் இணைத்திருக்கிறார். ஹைதராபாத்தை மையமாகக்கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் கூடிய விரைவில் நாடு முழுவதும் பரவ அரசு ஆவண செய்யவேண்டும் அப்போதுதான் எதிர்காலம் வசந்தகாலமாக இருக்கும்.