உலககோப்பையை இங்கிலாந்தில் கொண்டுபோய் வைத்தாலும் வைத்தார்கள் எந்த மேட்சில் என்ன நடக்கும் என யாராலும் கணிக்க முடியவில்லை. லீக் போட்டிகளில் மழை காரணமாக பல போட்டிகள் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன. ஆனால் நேற்று நடந்த அரையிறுதி போட்டியிலும் மழை தனது வேலையைக் காட்ட வேறு வழியின்றி இன்று அப்போட்டி தொடரும் என நடுவர்கள் அறிவித்தார்கள்.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் அரையிறுதிப் போட்டி ஓல்ட்டிராபோர்ட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. பும்ரா மற்றும் புவனேஸ்வர் பந்தை தொடாமல் இருப்பதே சிறப்பு என ஆடிக்கொண்டிருந்த நியூஸி ஒப்பனர்களை இருவரும் கலங்கடித்துக்கொண்டிருந்தார்கள். மார்டின் கப்திலை புவனேஸ்வர் வெளியேற்ற அந்த அணியில் ரட்சகன் வில்லியம்சன் களத்திற்கு வந்தார். நிக்கோலசிடம் பொறுமையாக விளையாடு என வில்லியம்சன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஜடேஜா நிக்கோலசின் ஸ்டம்பை பதம் பார்த்தார். அடுத்து பல வருடங்களாக விளையாடி வரும் டைலர் வில்லியம்சனுடன் கைகோர்த்தார். இருவரும் நிதானம் காட்டினர். ஆனால் ரன் ரேட் அமீபா வேகத்தில் இருந்தது. கொஞ்சம் அதிரடியாக விளையாட நினைத்த வில்லியம்சனை 67 ரன்களுக்கு வெளியேற்றினார் சஹால்.

காலின் டி கிராண்ட்ஹோம் வந்து 16 ரன்களுடன் திருப்திபட்டுக்கொண்டார். அடுத்த பேட்ஸ்மேனாக டாம் லேதம் உள்ளே வர மழையும் கூடவே வந்தது. புவனேஸ்வர் குமார் 47 வது ஓவரின் முதல் பந்தை வீசி முடித்தவுடன் மழையும் பேட்டிங் செய்ய வந்ததால் போட்டி தடைபட்டது. டைலர் 67 ரன்களுடனும், லேதம் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 20 ஓவர்களாக இந்தியாவிற்கு சேஸிங் அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை முழுநேரமும் விளையாடியதால் நாளை இதே மேட்ச் தொடரும் என அறிவிக்கப்பட்டது.
மழையால் ஆட்டம் பாதிக்கப்படவில்லை எனில் டக் வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் முறைக்கு வேலையில்லை. ஆனால் இன்று (புதன்கிழமை) மழை பெய்யும் பட்சத்தில் எந்தவொரு கட்டத்திலும் டக் வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் முறை கணக்கீடு முக்கிய பங்கு வகிக்கும். இன்றும் மழை பெய்து நியூசிலாந்து ஆட்டத்தை துவக்க முடியவில்லை எனில் இந்தியா 20 ஓவர்கள் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 148 ரன்கள் எடுக்க வேண்டியதிருக்கும். இன்றும் இந்திய அணி 20 ஓவர்கள் பேட்டிங் செய்ய இயலாமல் போனால் ஆட்டம் கைவிடப்படும். அப்படி ஒரு சூழல் உருவானால் ரவுண்ட் ராபின் சுற்றில் நியூசிலாந்தை விட இந்தியா அதிக புள்ளிகள் எடுத்திருப்பதால் நேரடியாக இறுதி போட்டிக்குத் தகுதி பெறும்.

ரசிகர்கள் தங்களுக்கான டிக்கெட்டை இன்றும் எடுத்துவரவேண்டும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று இந்தியா நியூசிலாந்தை வெற்றிகரமாக சேஸ் செய்யுமா? வருணன் அதற்கு வழிவிடுவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.