உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு பல்வேறு வகையான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. தோனியின் ஓய்வு, விராட்டின் கேப்டன்சி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தேர்வு என ஏகப்பட்ட வதந்திகள் கிளம்பின. ஆனால் அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் வாரியம் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்திய அணியை அறிவித்திருக்கிறது.

கோலி மற்றும் தோனி
லிமிட்டட் ஓவர் போட்டிகளுக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல் வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் பிசிசிஐ வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு கோலியே கேப்டனாக இருப்பார் எனத் தெளிவுபடுத்தியிருக்கிறது. அதேபோல தோனி ஓய்வு குறித்து அறிவிக்க வேண்டும், கிரிக்கெட் வாரியம் இதுகுறித்து அவரிடம் பேசவேண்டும் என சேவாக் மற்றும் கம்பீர் ஆகிய வீரர்கள் கருத்துக்கூறி வந்தனர். தோனி ஓய்வை அறிவிக்கவில்லை என்றால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்ற தகவலும் தோனி ரசிகர்களை ஆத்திரமூட்டியது.

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தோனி தனது விருப்பத்தின் பெயரிலேயே இரண்டுமாத ஓய்வில் சென்றுள்ளார். ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருக்கும் தோனி, இந்த இரண்டு மாத ஓய்வைத் தனது துணை ராணுவக் குழுவுடன் செலவிட உள்ளார். இந்தத் தகவலை செலெக்ஷ்ன் கமிட்டிக்கு ஏற்கெனவே தெரிவித்துவிட்டார். கோலியிடமும் இதுகுறித்து முன்பே தெரிவிக்கப்பட்டுவிட்டது.
இளைஞர்களுக்கு வாய்ப்பு
ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் நவ்தீப் சைனி, கலீல் அஹமது, ராகுல் சாஹர், வாஷிங்டன் சுந்தர் மற்றும் தீபக் சாஹர் போன்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

கையில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய ஷிக்கர் தவன் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் அவர் விளையாட இருக்கிறார். டெஸ்ட் அணியைப் பொறுத்தவரை ரஹானே, புஜாரா, அஸ்வின், விருத்திமான் சஹா, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோருக்கு வெகுநாட்கள் கழித்து வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
டெஸ்ட் அணி வீரர்கள்
விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட், சஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ்.
ஒருநாள் அணி வீரர்கள்
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், கேதர் ஜாதவ், ஷமி, புவனேஷ்வர் குமார், கலீல் அஹமது, நவ்தீப் சைனி.
டி-20 அணி வீரர்கள்
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், க்ருணல் பாண்ட்யா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், புவனேஷ்வர் குமார், கலீல் அஹமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி ஆகியோர் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.