குளிர் வீதிகளில் உறைந்திருந்தது. பாலிதீன் பையின் வழியாக பார்ப்பது போல் பனி எங்கும் வியாபித்திருந்தது. கைகளை தேய்த்து கன்னத்தில் வைத்துக்கொண்டார். வயிறு முழுவதும் பசி நீக்கமற நிறைந்ததால் தூக்கம் தொலைந்துபோனது. எப்போது விடியும்? யாருக்குத் தெரியும்? விடிந்தால் மட்டும் என்ன நடந்துவிடப்போகிறது? வேலை கிடைத்துவிடுமா? ஒரு வேளை உணவு? எல்லாமே அவனுக்கு கேள்விகள் தான். எதற்கும் பதிலில்லை. அல்லது அதற்கான காலமில்லை. இப்படி மாற்றுத்துணி கூட இல்லாமல் வியன்னாவிற்கு வந்த ஹிட்லர் சிந்திக்காமல் இரவு அவரைக் கடந்ததில்லை.
மார்பகப்புற்றுநோயால் இறந்துபோன அம்மாவின் ஞாபகங்கள் அவ்வப்போது வரத்தான் செய்தது. கடந்தகால கவலைகளையும், எதிர்காலம் குறித்த அச்சங்களையும் விடுவித்து நிகழ்காலத்தை மட்டுமே யோசிக்க வைக்க அவருக்கு உதவியாக இருந்தது பசி. பரிபூரணமான பசி. தான் பிறந்த ஊரான பிரானாவில் இருந்து நாட்டின் தலைநகரான வியன்னாவிற்கு வந்த நாட்கள் முதலாகவே அவரது நாட்கள் இப்படித்தான் கழிந்தன. தினக்கூலியாக, பெயிண்டராக என எப்படியெல்லாம் சம்பாதிக்க முடியுமோ அப்படியெல்லாம் உழைத்தார். அப்படியிருந்தும் ஒருநாளைக்கு ஒருவேளை உணவை மட்டுமே அவரால் வாங்க முடிந்தது. தங்குவதற்கு இடம்தேடி அலைவது இராண்டாவது கஷ்டம். ஒருகாலத்தில் மிகப்பெரிய ஜெர்மனியை தன்னுடைய உள்ளங்கையில் வைத்திருக்கப்போகும் ஆள் என்பதைத் தெரியாமலேயே அவருக்கு இடம்கொடுக்க மறுத்தனர் பலர்.
யூத வெறுப்பின் விதை
வியன்னாவில் எத்தனை கடினமாக உழைத்தும் பொருளீட்ட முடியாத ஹிட்லருக்கு ஆச்சர்யமாக இருந்தது நாட்டில் யூதர்களுக்கு இருந்த செல்வாக்கு. இரண்டாவது அவர்களிடம் இருந்த பெரும்பணம். அதுவும் உண்மைதான். அப்போதைய ஐரோப்பா முழுவதிலும் யூதர்கள் பெரும் செல்வந்தர்களாக இருந்தார்கள். பெரும்பாலும் முதலாளி வர்க்கம் தான். கையில் பணமிருந்தால் அரசாங்கத்தின் கதவுகள் தானாக திறக்குமல்லவா? அப்படித்தான் ஆஸ்திரியாவின் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தினார்கள் யூதர்கள்.

ஆஸ்திரியாவின் பூர்வகுடிகள் அனைவரும் யாரவது யூதரிடத்தில் வேலைசெய்பவர்களாக இருந்தது அவருக்கு கோபத்தை அளித்தது. நாட்டின் குடிமகன்கள் உணவிற்கும், இருப்பிடத்திற்கும் கஷ்டப்படும்போது யூதர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை சலுகைகளை அளிக்கிறது அரசு? நினைத்த மாத்திரத்தில் எதையும் சாதிக்க முடிந்த யூதர்களை வெறுக்கத் தொடங்கினார் ஹிட்லர். தன்னுடைய மொத்த கஷ்டங்களுக்கும் யூதர்கள் தான் காரணம் எனத் தீர்க்கமாக நம்பத் தொடங்கினார்.
பறிபோன பார்வை
ஆஸ்திரியாவின் பழம்பெருமை வாய்ந்த வரலாற்றைப் படிப்பதிலும் பேசுவதிலும் ஆர்வம் கொண்டவராய் இருந்த ஹிட்லர் தானும் நாட்டிற்காக ஏதாவது செய்யவேண்டுமெனத் துடித்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் முதல் உலகமகா யுத்தத்தில் குதித்தது ஜெர்மனி. பவேரியா ரெஜிமெண்டில் தன்னையும் இணைத்துக்கொள்ளுமாறு அரசுக்கு கடிதம் எழுதினார் ஹிட்லர். வேலையும் கிடைத்தது. சுலபம் தான். தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டுசேர்க்க வேண்டும். ஆத்மார்த்தமாக செய்தார். தன்னுடைய தேசத்திற்கு செய்யும் பணியாகவே அதனைக் கருதினார். போரின் ஆரம்ப காலகட்டத்தில் தாக்குதலில் காலில் காயமேற்பட்டதை ஹிட்லர் கொண்டாடினார் என்றே சொல்லவேண்டும். தாய்நாட்டிற்காக ரத்தம் சிந்தும் வாய்ப்பு கிடைத்தற்காக. அத்தனை பிரியம். அத்தனை வெறுப்பு.
1918 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் நாள் பிரெஞ்சு படைகள் நடத்திய தாக்குதலில் சிக்கிக்கொண்டார் ஹிட்லர். எதிரி வீரர்கள் வீசிய குண்டுகள் புகையைக் கக்கின. பார்வை மங்கி கீழே விழுந்தவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள் ஜெர்மானிய வீரர்கள். கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. இழந்த பார்வையை மீண்டும் பெற சில நாட்கள் ஆனது. ஆனால் கூடவே வேறொரு பிரச்சினையும் சேர்ந்து வந்தது. அவரை வாழ்நாள் முழுவதும் வாட்டிய நரம்பு நோய் அது. ஹிஸ்டீரியா என நாமகரணம் சூட்டப்பட்ட அந்நோயால் அவருடைய நரம்புமண்டலம் கடுமையாக பாதிப்படைந்தது. கோபம் தலைக்கேரும்போதேல்லாம் அவருடைய உடம்பு நடுங்கத் தொடங்கும். கை, கால் என நடுக்கம் பரவி மயக்கம் வரை நீடிக்கும். இதற்காக தனியே மருந்துகள் உட்கொள்ளத் தொடங்கினார். அபின் கலந்த கண் மருந்து, போதை மாத்திரைகள்…. உடம்பு நடுங்கத் தொடங்கியது.
மூலதனம்
அரசியல் பின்புலமோ, பொருளாதார வசதியோ இல்லாத புதுமுகமான ஹிட்லரை நோக்கி மக்கள் தங்களது பார்வையைத் திருப்ப காரணம் அவருடைய பேச்சு. உலக வரலாற்றில் அவர் அளவிற்கு பேச்சுத்திறமை கொண்ட தலைவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். எரிமலையாக சீறியடிக்கவும் அவருக்குத் தெரிந்தது. போலவே கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக்கொண்டு அழுகைக்கிடையேவும் அவரால் பேச முடிந்தது. இதனைத் தீர்மானிப்பது வந்திருக்கும் மக்களைப் பொறுத்தது. இடத்திற்குத் தகுந்தபடி தன்னுடைய ஸ்டைலை மாற்றிக்கொள்வார். ஆரம்பத்தில் சாதாரணமாக துவங்கும் பேச்சு பின்னர் டாப் கியரில் எழும்பி அலையாக அனைவரையும் விழுங்கும். பேச்சின் இடையே இருகைகளையும் மக்களின் முன்னால் நீட்டி தன்னால் முடிந்த உச்ச சந்தத்தில் பேசுவார். கைகளில் லேசான நடுக்கம் இருக்கும். மக்கள் இமைக்காமல் ஹிட்லரையே பார்ப்பார்கள். தசைகளை இறுக்கம் கொள்ளச்செய்யும் அளவிற்கு பேசுவார். இப்படி தொடர்ந்து பல மணிநேரம் அவரால் பேசமுடிந்திருக்கிறது. ஹிட்லர் என்றொரு ஆள் இருக்கிறார் என்பதை ஜெர்மானியர்கள் தெரிந்துகொள்வதற்கு ஊடகமாக இருந்த அப்பேச்சு தான் அவருடைய ஆகச்சிறந்த பலம். கூட்டங்கள் நாடுமுழுவதும் நடந்தன. காலை, மாலை, இரவு என சாத்தியமுள்ள அனைத்து நேரங்களிலும் பேசினார். அவர் பேசியது ஒன்றைத்தான். “ஜெர்மனி ஜெர்மானியர்களுக்கே. யூதர்களும், கம்யூனிசவாதிகளும் ஒடுக்கப்பட வேண்டியவர்கள்.”

அதிரடி என்னும் வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்தவர் ஹிட்லர். ராணுவத்திலிருந்து உளவாளியாக ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் இணைந்தவர் பின்னர் நாஜி கட்சியைத் துவங்கி ஜெர்மனியின் அதிபராகும் வரை எல்லாமே தடாலடி முடிவுகள் தான். ஆனால் துல்லியமான திட்டங்கள். ஆண்டாண்டுகளாக மூளையில் அடைகாத்த விஷயங்கள். தகுந்த நேரத்திற்காக காத்திருந்த முடிவுகள். திறந்திருந்த கதவுகளை நாசூக்காக மூடவும், தனக்காக திறக்காத கதவுகளை உடைக்கவும் ஹிட்லருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
யூதனே வெளியேறு
ஆட்சியின் முதல்நாளே யூதர்களுக்கு எதிரான அடக்குமுறை சட்டத்தை உருவாக்கினார் ஹிட்லர். அனைத்து அரசு பொறுப்புகளில் இருந்தும் யூதர்கள் வெளியேற வேண்டும். யூதர்கள் தங்களது தொழில்களை மேற்கொள்ள கூடாது. யூதர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளவும் கூடாது. ஆடிப்போனார்கள் அனைவரும். நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஜெர்மனியில் இருந்த அத்தனை யூதர்களின் ஜாதகமும் ஹிட்லரின் கைக்கு வந்தது. அடுத்த காயை நகர்த்தினார்.
ஜெர்மனியில் இருந்த அனைவரும் மூன்று தலைமுறைகளுக்கு அதாவது ஒருவருடைய அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா என மூன்று வம்சத்தினரும் ஜெர்மானியர்களாக இருக்க வேண்டும். இல்லையன்றால் நட அகதி முகாமிற்கு. இப்படி வெளியேற்றப்பட்டவர்களை அடைப்பதற்காகவே பிரம்மாண்ட முகாம்களைக் கட்டியது ஹிட்லரின் அரசு. Concentration Camps என அழைக்கப்பட்ட இந்த முகாம்கள் பற்றி நீங்களே கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு மனிதனை உச்சபட்சமாக எந்தளவிற்கு கொடுமைப்படுத்த முடியுமோ அவ்வளவும் அங்கே நடக்கும். ஒவ்வொரு நாளும் கைதிகளை கொல்வதற்கு புதிய ஐடியாக்களை அளிக்கும் ராணுவ வீரனுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன.
தினந்தோறும் ஆயிரத்தின் மடங்குகளில் கொலைகள் நடந்தன. யூதர்களுடைய உடைமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு ஜெர்மானியர்களுக்கு வழங்கப்பட்டது. பிணங்களை புதைக்க இடம்கிடைக்காமல் எரித்தார்கள். பிணம் விழும் வேகத்தில் அவர்களால் எரிக்கவும் முடியாததால் காடுகளில் கொண்டுபோய் போட்டார்கள். ரத்தத்தை உறைய வைக்கும் தண்டனைகள், மனதை உலுக்கும் மரணங்கள் என நாட்கள் கழிந்தன. ஹிட்லர் சந்தோஷமாகச் சிரித்தார். ஹிட்லரின் 12 வருட ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை 65 லட்சம். மனிதகுல வரலாற்றில் செங்கிஸ்கானுக்கு அடுத்தபடியாக அதிகமக்களைக் கொன்றது சந்தேகமே இல்லாமல் ஹிட்லர் தான். அதுவும் எவ்வித உறுத்தலும் இல்லாமல் கொலைகளை ஆதரித்திருக்கிறார். இத்தனை பெரிய வன்மம் எப்படி அவருக்குள் கட்டமைக்கப்பட்டது? சிறுவயதில் வறுமையில் இருந்தது இத்தனை மூர்க்க சிந்தனைகளின் பிறப்பிடமாக இருக்குமா? இந்தக் கேள்விகளுக்கு மருத்துவர்கள் வேறொரு பதிலை அளிக்கிறார்கள்.
மனப்பிறழ்வு
அமெரிக்காவைச் சேர்ந்த நார்மன் ஓஹ்லர் என்னும் எழுத்தாளர் பிளிட்சிடு (Blitzed) என்னும் நூலை எழுதியிருக்கிறார். ஹிட்லர் எடுத்துக்கொண்ட போதைப்பொருட்கள் மற்றும் அவருடைய உடம்பில் அதனால் ஏற்பட்ட விளைவு பற்றி அங்குலம் அங்குலமாக அலசுகிறார் அதில். அதன்படி ஹிட்லருக்கு போதை மாத்திரைகளை அறிமுகப்படுத்தியது அவருடைய மருத்துவரான தியோடர் மொரேல் தான். ஆரம்பத்தில் அதாவது 1936 ஆம் ஆண்டு விட்டமின் மற்றும் குளுக்கோஸ் ஊசிகளை தினசரி ஹிட்லருக்கு அளித்த மொரேல் பின்பு ஸ்டீராய்ட் மற்றும் ஹார்மோன் ஊசிகளை அவருக்கு அளித்திருக்கிறார். இந்த ஹார்மோன் மருந்து பன்றிகளின் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்டவை. ஆரம்பத்தில் ஹிட்லர் இதனால் புத்துணர்வாக இருந்திருக்கிறார். ஆனால் நாளாக நாளாக உடம்பு ஆட்டம் காணத்துவங்கியது. ஏற்கனவே ஹிஸ்டீரியா ஒருபுறம் இப்போது போதை மருந்துகள் வேறு. ஹிட்லர் திரும்ப முடியாத பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தார்.
ஹிட்லரின் மருத்துவர்களை பின்னாளில் விசாரித்தபோது அவருக்கு Border Personality Disorder என்னும் மனநோய் இருந்திருக்கிறது. தன்னுடைய கருத்தில் பிடிவாதமாக இருப்பது, எந்த நிலையிலும் தான் நினைத்ததை சரி என்று வாதிடுவது, அதற்காக எந்த விலையையும் கொடுப்பது என அந்நோயை வரையறுக்கிறார்கள் மருத்துவர்கள். யூதர்களைக் கொள்வதை தவறென்ற எண்ணமே அவருக்கு வராமலிருந்ததற்கு காரணம் அவருடைய இந்நோய் தான்.
வற்றாத வதந்திகள்
ஹிட்லரின் வாழ்க்கையில் பல விஷயங்கள் இன்றும்கூட மர்மமாகவே இருக்கின்றன. அதிலொன்று ஹிட்லர் ஓரினசேர்க்கையாளர் என்பது. இதுகுறித்து தன்னுடைய ஜெர்மனி நேஷனல் வைஸ் (German’s National Vice) என்னும் புத்தகத்தில் முக்கிய குறிப்புகளுடன் எழுதியிருக்கிறார் பிரபல யூத வரலாற்று ஆசிரியரான சாமுவேல் இக்ரா. சிறுவயதில் வியன்னாவில் பாலியல் தொழிலாளியாக ஹிட்லர் இருந்ததாக நூலின் பக்கங்கள் நகர்கின்றன. ஆனால் ஹிட்லர் ஓரினசேர்க்கையாளர்தான் என நிரூபிக்கும் படியான எவ்வித உறுதியான தகவல்களும் அதிலில்லை. அதேநேரத்தில் ஹிட்லருடைய வரலாற்றை எழுதிய பெரும்பாலானோர் அவரை ஓரினச்சேர்க்கையில் விருப்பம் கொண்டவராகவே எழுதியிருக்கின்றனர்.

தன் தாயைப்போலவே தனக்கும் புற்றுநோய் வந்துவிடக்கூடும் என தன வாழ்நாள் முழுவதும் பயந்திருக்கிறார் ஹிட்லர். மாதம் ஒருமுறை டாக்டர்களை அழைத்து பரிசோதனை செய்துகொள்வது அவருடைய வழக்கமாக இருந்தது. இறக்கும்வரை அவருடைய இப்பயம் அவரைவிட்டு அகலவில்லை. மென் உணர்வுகளுக்கு எப்போதுமே தன்னை உட்படுத்திக்கொள்ளாத ஹிட்லருக்கு மூன்று காதலிகள் இருந்திருக்கிறார்கள். முதல் உலகப்போர் முடிந்த காலகட்டத்தில் மிமி ரெய்டர் என்ற பெண்ணையும், ஜெர்மனியின் சான்சிலராக பதவியேற்ற காலத்தில் கெலி ராபல் என்பவரையும் காதலித்திருக்கிறார். கடைசியாக ஈவா பிரவுனை.
ஹிட்லரின் மீதான இன்னொரு மர்மம் அவருடைய அந்தரங்கம் குறித்தது. தன்னுடைய காதலிகளை உடலளவில் பல சித்ரவதைகளை செய்து அதனை ரசிக்கும் பழக்கம் அவருக்கு இருந்திருக்கிறது. நேரடியாக இதுகுறித்து மூவருமே பேசவில்லை. ஆனால் ஈவா பிரவுனைத் தவிர மற்ற இருவரையும் சுவடே தெரியாமல் அழித்தார் ஹிட்லர். இருவருமே மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டது இந்த சந்தேகத்தை இன்னும் வலுவாக்குகிறது.
ஹிட்லர் யூதரா?
ஹிட்லருடைய தந்தையின் பெயர் பலராலும் அலாய்ஸ் ஹிட்லர் என்றே சொல்லப்பட்டு, எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அவருடைய உண்மையான பெயர் அலாய்ஸ் ஷிக்கேல்கிரபர். அவருடைய தாய்வழிப்பெயர் அது. அலாய்ஸ் ஹிட்லருக்கு தன்னுடைய தந்தை யார் எனத் தெரியாது. (ஹிட்லரின் தாத்தா!!) அலாய்ஸ் ஹிட்லரின் அம்மா யூத குடும்பம் ஒன்றில் வீட்டுவேலை செய்தபோது கர்ப்பமாகியிருக்கிறாள். காரணம் யூத குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அவருடைய அம்மா தன் வாழ்நாளில் எப்போதுமே வாய்திறக்கவில்லை. இது ஹிட்லரின் வாழ்நாளில் மறக்கமுடியாத குற்றவுணர்ச்சியாக இது இருந்தது. யூதர்களை அடியோடு வெறுத்த ஹிட்லரே யூதர் என்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நகைமுரண்.
கடைசித் தோட்டா
போலந்தில் தொடங்கி பிரான்ஸ் வரை ஐரோப்பாவையே ஆட்டம்காணச் செய்த ஹிட்லரின் படைகள் 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் வாக்கில் தோல்வியை சந்தித்தன. ஏற்கனவே சோவியத்திடம் தோல்வி. இப்போது பிரிட்டனும், அமெரிக்காவும் நேரிடையாக களத்தில் குதித்திருக்கிறார்கள். தான் இருந்த ரகசிய பதுங்குகுழிக்குள் கடைசி வரை பல்வேறு திட்டங்களை வகுத்துப்பார்த்தார் ஹிட்லர். ம்ஹூம். எதுவும் பலனளிக்கவில்லை. உலகில் எவருக்கும் அஞ்சாத நாஜி வீரர்கள் முதன்முதலாக பயந்தார்கள். நமக்குகூட மரணம் வருமா?
ஹிட்லர் ராணுவ அதிகாரிகளிடம் தன்னுடைய புதிய திட்டங்களைக் குறித்து பேசினார். பழைய ஹிட்லர் இவரில்லை என அவர்கள் புரிந்துகொண்டார்கள். தப்பித்து ஓடிவிடுங்கள் என சிலர் ஆலோசனை சொன்னார்கள். எதையுமே அவர் கேட்கவில்லை. என்றைக்கு கேட்டிருக்கிறார். ஈவா பிரவுனின் கண்ணீரைத் துடைத்து வா திருமணம் செய்துகொள்ளலாம் என்றார். விளையாட்டா? இல்லை சமாதான வார்த்தைகளா என பார்த்த ஈவாவை கட்டிக்கொண்டார். பதுங்குகுழிக்குள் இருந்தபடியே எளிதாக ஈவாவை திருமணம் செய்துகொண்டார் ஹிட்லர். பெர்லின் அடுத்தநாள் விழுந்துவிடும் என்பது தெளிவானது.
இனி தப்பிக்க முடியாது. சண்டையிடவும் முடியாது என்பதை உணர்ந்த ஹிட்லர் தன்னுடைய அறைக்குச் சென்றார். ஈவாவிற்கு சயனைடு மாத்திரை ஒன்றை பரிசளித்தார். தன்னுடைய கைத்துப்பாக்கியை நெற்றியில் வைத்து அழுத்தினார். உலகத்தை தன்னுடைய கரங்களால் ஆட்டுவித்த ஹிட்லர் செத்துப்போனார். அவருடைய கடைசி ஆசையின்படி அவருடைய மருத்துவ குறிப்புகள், கோப்புகள், அரசாங்க உத்தரவுகள் எரிக்கப்பட்டன. ஹிட்லரின் உயிரைக்குடித்த அதே குண்டு இரண்டாம் உலகபோருக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. அவரிருந்த இடம் மொத்தமுமாக அழிக்கப்பட்டது. அப்போது கொளுத்திய தீயின் ஜுவாலையில் இன்றும் குளிர்காய்கின்றன அவரைப்பற்றிய மர்மங்கள்.