தனிமை ஒருவனை என்னவெல்லாம் செய்துவிடும்? என்பதற்கு ஆதாரமாகவே உலக வரலாறு நான்காம் இவான் வாசிலியேவிச்சின் பெயரை வரவு வைத்திருக்கிறது. ஏழு மனைவிகளின் கொலை, எதிரிகளைத் துன்புறுத்த கட்டப்பட்ட பாதாள நரகம், அங்கே கொடுக்கப்பட்ட “பகீர்” ரக தண்டனைகள் என இவான் வாசிலியேவிச் என்னும் அரசர் “இவான் தி டெரிபிள்” என அழைக்கப்பட காரணமாக இருந்தது அவரது தனிமை தான். இதுவே பின்னாளில் அவரை மனநோயாளி ஆக்கியிருக்கிறது. இத்தனை சிக்கல்களுக்கும் பிள்ளையார்சுழி போட்டது இவானின் தந்தை மூன்றாம் வாசிலியின் மரணம் மிகச்சாதாரணமாய் இருந்தது.
கிபி 1530 ஆம் ஆண்டு பிறந்த இவானுக்கு மூன்று வயதாகும்போதே தந்தையை இழந்தார். மன்னர் இறந்துவிட்டதால் இவானை அரசனாக்கினார் அவரது தாயார் எலீனா கிளின்ஸ்கையா. நிர்வாக பொறுப்புகள் அனைத்தையும் தனது நேரடி கண்காணிப்பில் வைத்துக்கொண்ட எலினாவிற்கு அரண்மனை எங்கும் எதிர்ப்புக்குரல்கள் கிளம்பத் தொடங்கின. அது 1535 ஆம் ஆண்டு. யாரும் எதிர்பாராத வகையில் எலீனா கொல்லப்பட்டாள். எட்டு வயது குழந்தையாக இருந்த இவான் தன் வாழ்நாளில் எந்தவொரு தருணத்திலும் மறக்கவே முடியாததாக இருந்த கருப்பு நாட்களுக்கு தன்னையே தயார் செய்துகொண்டான்.
எலீனா அடக்குமுறைவாதியாக இருந்தாலும் இவானுடைய விஷயத்தில் தெளிவாகவே இருந்திருக்கிறார். சொல்லப்போனால் தன்னுடைய முடிவை அவர் கணித்திருந்திருக்கிறார். அதனாலேயே இவானை ஒரு அரசராக்க தனி ஒரு குழுவை முன்கூட்டியே அமைத்தார். எலினாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அமைப்பு இவான் அரசராகும் வரையிலும் நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டது. அதே நேரத்தில் இவான் அரண்மனைக்குள்ளேயே சிறை வைக்கப்பட்டான். ரஷியாவின் குளிர் காலங்களை தனது மூடிய அறைக்குள் கழித்தான் இவான்.
தன்னை யாராவது கொன்றுவிடுவார்கள் என்ற பயம் இவானுக்குள் மெல்ல முளைத்தது. தனக்கு அளிக்கப்படும் ஒரு வேளை உணவையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கத் தொடங்கினான். சொந்த அரண்மனைக்குள் இப்படி இருப்பது இவானுக்கு ஆத்திரமூட்டுவதாக இருந்தது. கிட்டத்தட்ட அதே நேரத்தில்தான் கடவுளின் நெருக்கத்தை உணர்ந்த்திருக்கிறான் இவான். தன்னுடைய நிலையிலிருந்து மீட்கும்படி இறைவனை நோக்கி பிரார்த்திக்கத் தொடங்குகிறான். “எந்தளவிற்கு பிரார்த்தனை வலி மிக்கதாக இருக்குமோ அந்த அளவிற்கு பயனும் இருக்கும்” என்பதை ஏதோவொரு புத்தகத்தில் இவான் படித்த அந்த இரவு அவனுக்குள் பல மாற்றங்கள் நிகழ்ந்தது. இவானின் நடவடிக்கைகளும் மாறத்தொடங்கின. ஆசையாக வளர்த்த நாய் மற்றும் பூனையை அரண்மனை மேல்தளத்திலிருந்து கீழ்நோக்கி எறிவது இவானுக்கு பிடித்த பொழுதுபோக்காக மாறியது இந்தக் காலகட்டத்தில் தான்.
அடுத்தநாளும் வழமையாக பிரார்த்தனை செய்தான் இவான். ஆனால் இப்போது கொஞ்சம் வித்தியாசமாக தரையில் மண்டியிட்டு, தலையை தரையில் வேகமாக முட்டிக்கொண்டே பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். சில நேரங்களில் தலையிலிருந்து ரத்தம் வழியும். ஆனாலும் பிரார்த்தனை ஓயாது. அப்படி என்ன பிரார்த்தனை? தன்னை மன்னராக்கவேண்டும் என்பதுதான். இப்படித்தான் தன்னை வணங்கவேண்டும் என கிறிஸ்து எப்போது சொன்னார் எனத் தெரியவில்லை. ஆனால் அவருடைய கோரிக்கைகளுக்கு கூடிய விரைவிலேயே செவிசாய்த்தார் அவர்.
விதியை மாற்றிய விருந்து
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மாஸ்கோவை வண்ணமயமாக்கிக் கொண்டிருந்தன. தேர்ந்தெடுக்கப்பட்ட சபை உறுப்பினர்கள் அனைவரும் இவானை விருந்துக்கு அழைத்தனர். அரச பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் வயது இவானுக்கு வந்துவிட்டதாக அறிவித்தார் தலைமை மந்திரி. கிரீடம் இவானுடைய தலையில் வந்தமர்ந்தது. அப்போது இவானுக்கு வயது பதினாறு. ராணுவ அதிகாரிகளுக்கு புது அரசரை அறிமுகப்படுத்தி வைத்தனர் சபையினர். விருந்து நிகழ்ச்சிகள் துவங்கின.
ராணுவ தளபதிக்கு முதல் கட்டளையை அறிவித்தார் இவான். தேர்ந்தெடுக்கப்பட்ட சபையின் உறுப்பினர்கள் அனைவரையும் கொன்றுவிடும் படி சொல்லியிருந்தார் அரசர் இவான். மின்னல் வேகத்தில் கட்டளை நிறைவேற்றப்பட்டது. ஒரே இரவிற்குள் தன்னைத் தண்டித்த அனைவரது தலைகளையும் வேட்டை நாய்களுக்கு உணவாக அளித்த பின்னரே உறங்கச் சென்றார்.
கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக அரண்மனைக்குள்ளேயே முடங்கிக்கிடந்த இவானுக்கு சிறகு முளைத்தது போலிருந்தது. அவசர அவசரமாக தேவாலயத்திற்குள் நுழைந்தார். தன்னுடைய பாணியில் நன்றி தெரிவித்தார். ரஷிய மக்கள் புது மன்னரை எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டனர்.
திருமணங்கள்
இவானுக்கு இருந்ததாக சொல்லப்படும் பாரனோயா என்னும் மனநோய் உச்சத்தை அடைந்தது மனைவி அனஸ்தீஷியாவின் மரணத்தின்போதுதான். குழந்தைப் பருவத்திலேயே கொடும் தனிமையை சந்தித்த இவான் சிறிதுகாலம் மகிழ்ச்சியாக இருந்தது அவரது மனைவியினால் மட்டுமே. தொடர் நோய்கள் அனஸ்தீஷியாவை வாட்டின. இரவெல்லாம் வலியினால் முனகும் மனைவியின் குரல் இவானை வேதனைப்படுத்தியது. ஆனால் காலம் அனஸ்தீஷியாவிற்கு கருணை காட்டவில்லை. அடுத்த சில வாரங்களில் அவள் மரணமடைந்தாள்.
கடவுளின் இச்செயல் குறித்து சிந்திக்கத் தொடங்கிய இவான் கடைசியாக வந்தடைந்தது கடவுள் இரக்கமற்றவர் என்னும் நிலையைத்தான். அடுத்தடுத்து ஏழு திருமணங்களை செய்துகொண்டார் இவான். ஆனால் எதுவுமே நிலைக்கவில்லை. அனஸ்தீஷியாவைத் தவிர யாரையுமே அவரால் நேசிக்க முடியவில்லை. இது அவருக்கு புரிவதற்குள் அனைத்து மனைவியரையும் கொலைசெய்திருந்தார் இவான். அவருடைய மன நோயினைத் தீவிர மோசமாக்கியது அவரது இல்லற வாழ்க்கைதான்.
நரகம்
இவான் பழங்கால அரசர்கள் மற்றும் விவிலியத்தில் குறிப்பிடப்படும் தண்டனைகள் குறித்து படிப்பதில் ஆர்வம் மிக்கதாய் இருந்தார். தனக்குள் இருந்த அரக்கன் வளர்வதை அறியாமலேயே அடுத்த முடிவை எடுத்தார் இவான். தாமே நேரிடியாக ஒரு காவலாளிகள் கூட்டத்தை உருவாக்கினார். இவர்களுக்கு ஒப்பெர்ச்சினிக்கி எனப்பெயரிட்டார் இவான். கருப்பு குதிரைகள் மற்றும் கருப்பு நிற அங்கிகள் அணிந்த இவர்கள் கொஞ்சமும் ஈவு இரக்கமற்றவர்கள். அப்படியான ஆட்களைத்தான் இவானும் தேடித் தேடிக்கண்டுபிடித்தார். இவர்கள் அனைவருக்கும் இவானே தலைவராக இருந்தார்.
அதிகாலை மூன்று மணிக்கு இந்த வீரர்கள் தேவாலயத்தில் கூடுவார்கள். காலை உணவு வரை இப்பிரார்த்தனை தொடரும். அதன்பின்னர் குதிரைகள் ஒவ்வொன்றாகக் கிளம்பும். நாடு முழுவதும் இவர்கள் பயணித்தபடியே இருப்பார்கள். குற்றவாளிகளைக் கண்டுபிடித்து இவானின் முன்னால் கொண்டுபோய் நிறுத்தவேண்டும். இதுதான் இவர்களது தலையாய கடமை. ஒவ்வொரு மாலையும் இப்படி கைது செய்யப்பட்டு அழைத்துவரும் குற்றவாளிகளை தேவாலயத்தின் கீழே கட்டப்பட்டிருந்த பெரிய அறைக்குள் அடைத்து வைப்பர்.
இவான் வந்தவுடன் தண்டனை அளிக்கும் படலம் ஆரம்பமாகும். விவிலியம் பழைய ஏற்பாட்டிலிருக்கும் பல கொடூர தண்டனைகளை இவான் இங்கே வழங்கியிருக்கிறார். கால் மற்றும் கைகளை வெட்டி ஊனமாக்குவது, கண்களை தோண்டி எடுப்பது என விதவிதமாக தண்டனைகள் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார் இவான். இத்தண்டனைகளை தன் முன்னாலேயே நிறைவேற்றுப்படி உத்தரவிடுவதுதான் இவானின் வழக்கம்.
பிளவு
ஒருபுறம் கிறிஸ்தவ பேராயர்கள் இவானுக்கு எதிராக குரல் எழுப்பி வந்தனர். குறிப்பாக நாவ்கராட் பகுதியில் இருந்த மக்கள் தனக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நினைத்த இவான் உலக வரலாற்றில் மிக மோசமான படுகொலைக்கு தயாரானார். நாவ்கராட் பகுதியில் இருந்த சுமார் 15,000 மக்களை உடனடியாக கைது செய்தது இவானின் சிறப்பு காவலாளிகள் படை.
இரத்த சரித்திரம்
கைது செய்யப்பட்ட கிறிஸ்துவ பெரியோர்களுக்கு உடனடியாக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. அதிகம் சிரமப்பட்டது பொதுமக்கள் தான். ஒவ்வொருநாளும் ஒவ்வொருமாதிரியாக மக்களுக்கு தண்டைனைகள் தரப்பட்டன. வால்கா நதியில் குழந்தைகள் மற்றும் பெண்களை கை,கால்களை கட்டிய நிலையில் வீசப்பட்டனர். இளம்பெண்கள் ரகசிய அறைகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர். கிளர்ச்சியில் ஈடுபட்டதாக சொல்லப்பட்ட அனைத்து மக்களையும் தனியாக அடைத்தனர். அவர்கள் அனைவரும் பிரம்மாண்ட வாணலியில் அடுத்தநாள் இடப்பட்டு பொரிக்கப்பட்டு வேட்டை நாய்களுக்கு உணவாக இடப்பட்டனர். இப்படியாக உலக வரலாற்றில் மறக்க முடியாத இம்சை அரசனாக இருந்த இவானின் கடைசிக்காலம் கருனையற்றதாக இருந்தது.
இத்தனையும் செய்த இவானின் கடைசிக்காலம் இன்னும் மோசமாக இருந்தது. அதீத குற்ற உணர்ச்சியினால் கடுமையாக பாதிக்கப்பட்டார். தனக்குப்போட்டியாக வந்துவிடுவானோ என்ற பயத்தில் சொந்த மகனையே குத்திச் சாய்த்தார். தன்னால் கொல்லப்பட்டவர்களின் பெயர்களை உச்சரித்தபடியே இருந்தார். எப்படி இவானின் வாழ்வு தனிமையில் துவங்கியதோ அதேபோல தனிமையிலே முடிந்தும் போனது. 1984 ஆம் ஆண்டு மனசிதைவு அவரைக் கொன்றது. அன்பு என்ற ஒன்று மட்டும் இவானுக்கு கிடைத்திருந்தால் வரலாறு வேறுவிதமாய் அவனை சித்தரித்திருக்கும் என்கிறார்கள் வரலாற்று ஆராய்ச்சியளர்கள்.