சிறுவயதில் கொடுமைகளை அனுபவிக்கும் எல்லா குழந்தைகளும் கொடுங்கோலர்கள் ஆவது கிடையாது. ஆனால் உலகை அச்சுறுத்திய பல அரசர்கள் (எ) வில்லன்களின் சிறுவயது வாழ்க்கை மிக மோசமானதாகத்தான் இருந்திருக்கிறது. ஹிட்லர், முசோலினி, இவான் வசிலியேவிச், நீரோ என பத்தில் ஒன்பது இம்சை அரசர்களின் முன்னுரை இப்படி இருப்பது ஒரு வித திகில் உண்மை. அதீத கோபம், மூர்க்கத்தனமான முடிவுகள், அதனால் ஏற்படும் விளைவுகள் என பதைபதைக்க வைக்கும் இத்தகையவர்களின் பட்டியலில் அடுத்ததாக வருபவர் விலாட் மூன்றாம் வலேக்கியா.
தற்போது கிழக்கு ஐரோப்பிய நாடாக இருக்கும் ரோமானியா பதினைந்தாம் நூற்றாண்டில் பீட்சா துண்டுகள் போல சிதறியிருந்தது. நாட்டின் கிழக்கு பகுதி முழுவதும் ஒட்டமான் பேரரசின் பிடியில் இருந்தது. ஹங்கேரியர்கள் மேற்கில் டேரா போட்டிருந்தார்கள். இருவருக்கும் இடையில் அடிக்கடி முட்டிக்கொள்ளும். அப்போதைய காலகட்டத்தில் எப்போதும் போர்மேகம் சூழ்ந்தே காணப்பட்ட இடங்களில் இதுவும் ஒன்று. சிங்கங்கள் வேட்டையாடும் அதே காட்டில் சிறு எறும்புகளுக்கும் இடம் இருக்குமல்லவா? அப்படி இருந்தவர் தான் இரண்டாம் விலாட் வலேக்கியா. இவருக்கு மூன்றாம் விலாட் வலேக்கியா மற்றும் ராது என இரு மகன்கள் இருந்தனர். ரோமானியாவின் கீழ் ஓரத்தில் அமைந்திருக்கும் பிரதேசமான வலேக்கியாவிற்கு இவர்தான் மன்னர். துருக்கிக்கு பயங்கர விசுவாசமான ஆள் இந்த அப்பா வலேக்கியா.
இஸ்லாம் ஐரோப்பாவில் தீயென பரவிய காலம் அது. வலேக்கியா நகரம் முழுவதும் கிறிஸ்தவர்கள் தான். மன்னர் இரண்டாம் விலாட் ஐரோப்பிய சிறப்பு கிறிஸ்தவ கூட்டமைப்பில் இணையும் அளவிற்கு மத நம்பிக்கை உடையவர். பின்னர் எதற்கு துருக்கி சுல்தானுக்கு ஆதரவளிக்க வேண்டும்? காரணம் இருக்கிறது. அந்தக்காலத்தில் ஒட்டமான் பேரரசை எதிர்ப்பது என்பது சுத்தமான தற்கொலை முயற்சி. ஹங்கேரியர்களையும் நம்பித்தொலைக்க முடியாததால் தனது பரிபூரண ஆதரவை சுல்தானுக்கு வழங்கிவந்தார். ஆகமொத்தத்தில் மதமா? பதவி மற்றும் அதிகாரமா என்றால் பலரும் “மதச்சார்பின்மை” பேசியிருக்கிறார்கள் என்பதற்கு நிறையவே தலைகளை எடுத்துக்காட்டாக காட்டலாம்.
சிறப்பு கிறிஸ்தவ அமைப்பின் பிரதான நோக்கமே ஐரோப்பாவில் இசுலாமிய அதிகார பரவலைத் தடுப்பதுதான். இதில் அங்கம் வகிக்க ஒப்புக்கொண்டதால் இரண்டாம் விலாட் மீது சந்தேகம் கொண்டார் சுல்தான். அந்த நேரம் பார்த்து ஹங்கேரியர்கள் சுல்தானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். சூழ்நிலையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள என்ன வழி என யோசித்தார் விலாட். என்ன சொல்லலாம்? சமாதானக் கொடியைப் பிடிப்பது ஒன்றும் கடினமான வேலை இல்லைதான். ஆனால் சுல்தானின் முடிவுகள் வேறுமாதிரி இருந்தன.
ஒரே இரவில் வலேக்கியா சுல்தானின் வலைக்குள் விழுந்தது. தந்தை விலாட், மகன் மூன்றாம் விலாட் மற்றும் ராது ஆகியோரை சிறைபிடித்தார் சுல்தான். இப்படித்தான் துருக்கிக்கு சென்றார்கள் மூன்றாம் விலாடும் அவன் அண்ணன் ராதுவும். அரச குடும்பத்தைச் சேர்ந்த இவர்களை சிறையில் அடைத்தார் சுல்தான். சொகுசாகவே வாழ்ந்து பழகிய அண்ணனும் தம்பிக்கும் காலம் கருப்பு வெள்ளையாக தெரிந்தது. ஒரு வேளை உணவிற்கு காத்திருக்க வேண்டிய சூழல். கோபமும், துரோகமும் இவர்களுடைய இரவுகளை தின்று செரித்தன. மூவரும் பாதாள சிறையில் அடைக்கப்பட்டனர். மன்னரின் ராஜதந்திரம் அனைவரும் பொய்த்துப்போக என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார். சரியாக ஒருவருடத்தில் மன்னர் இரண்டாம் விலாடிற்கு விடுதலை அளித்தார் சுல்தான். மேலும் சுல்தான் ஒரு வாய்ப்பு கொடுத்தார் விலாடிற்கு. தன்னுடைய முழு கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பட்சத்தில் வலேக்கியாவை மீண்டும் ஆள வாய்ப்பளிக்கப்படும் என உறுதியளித்தார். கசக்கவா செய்யும் மன்னருக்கு? அப்போதே ஓகே சொல்லிவிட்டார். ஆனால் விடுதலை மன்னருக்கு மட்டுமே. மகன்களின் சிறைக்கதவுகள் திறக்கப்படவேயில்லை. இது விலாடின் முடிவில் எவ்வித மாறுபாடையும் ஏற்படுத்தவில்லை. மகன்களை அங்கேயே விட்டுவிட்டு தாயகம் திரும்பினார் அந்த கொள்கை வீரர். ராதுவும், குட்டி விலாடும் ஓரளவு நிம்மதியாக இருக்க முடிந்தது. எப்படியும் தந்தை தங்களை மீட்பார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கத் தொடங்கினர். ஆனால் அப்படியொன்று நடக்கப்போவதில்லை என அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சிறைக்கு எதிராக இருந்த மைதானத்தில் தினமும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுவது வழக்கம். தண்டனை என்றால் மரண தண்டனை மட்டுமே. அதுவும் துருக்கியர்களுக்கு மிகவும் பிடித்த தண்டனை கழுவேற்றுதல் தான். பின்னாளில் மூன்றாம் விலாடிற்கும் பிடித்த தண்டனை என்றால் அது கழுவேற்றுதல் தான். அதிகம் பேரை இப்படி கொன்றதாலேயே அவரை “விலாட் தி இம்பேலர்” ( Vlad the Impaler ) என்று குறிப்பிடுகிறார்கள். (ஆங்கிலத்தில் இம்பேல் என்றால் கழுவேற்றுதல் என்று பொருள்.)
குற்றவாளிகளை நிர்வாணமாக்கி அவர்களுடைய உடலைக் குறுக்கி தலையில் முழங்கால் படும்படி கையிற்றால் கட்டுவர். பெரிய குத்தீட்டி ஒன்றை நிறுத்தி அதன்மீது எண்ணெயை தடவுவர். பின்னர் ஈட்டியின் மேல் குற்றவாளியை அமரச் செய்வார்கள். அவர்களுடைய ஆசனவாய் வழியாக ஈட்டி உள்ளிறங்கும். ஈர்ப்புவிசையும், எண்ணெய் வழவழப்பும் ஈட்டியின் பயணத்தை சுலபமாக்கும். இறுதியாக நெஞ்சு வழியாக ஈட்டி வெளிவந்தவுடன் அப்படியே பிணத்தை விட்டுவிடுவார்கள். உடல் அழுகி, காய்ந்து காணாமல்போகும் வரை அப்படியே விடப்படும்.
ராது இந்த தண்டனைகளை காணச் சகிக்காமல் கண்களை மூடிக்கொள்வான். ஆனால் கொலைபடும் நபர்களின் வலி மிகுந்த அலறல்களை நிதானமாக ரசித்துக் கேட்டான் குட்டி விலாட். வன்மம் ஊற்றாக அவனுக்குள் கிளம்பிப் பரவியது. தினமும் இப்படியான நாட்களுக்கு இடையில் ஏராளமான கனவுகளைக் காண்பான் விலாட். மீண்டும் வலேக்கியாவிற்கு திரும்ப வேண்டும். எனது நாடு. எனது அரண்மனை. அப்பாவை நினைக்கும்போது பற்களை நறநறவென கடித்துக்கொண்டான். இப்படியே ஆறு ஆண்டுகள் கழிந்திருந்தன.
தண்டனைகள் அளித்த பயத்தினால் சுல்தானின் விசுவாசியாக மாறியிருந்தான் ராது. முன்பு அப்பா தற்போது அண்ணன். துரோகம் விலாடை விடாமல் துரத்தியது. ஆனால் அதிர்ஷ்டம் அவனுக்கு ஓர் வாய்ப்பை வழங்கும் என தீர்க்கமாக நம்பினான். நாட்டை மீட்க வேண்டும். அதற்கு வலிமை வேண்டும். கிடைத்ததை எல்லாம் உண்டான். அவ்வப்போது தன்பக்கம் வந்துவிடுமாறு பேசவரும் அண்ணனின் மூக்கை பதம்பார்ப்பது விலாடிற்கு வாடிக்கையாகிவிட்டது.
காலம் இப்படிப் பயணித்த ஓர் இரவில் தான் விலாடிற்கு வாய்ப்பு கிடைத்தது சிறையிலிருந்து தப்பிச்செல்ல. காவலுக்கு இருந்த வீரர்களின் கவனத்திலிருந்து விலகி ஓடினான். உடலில் இருந்த ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டி ஓடினான். ஒரே இரவு. விட்டுவிடாதே விலாட். இனியாவது விடியட்டும் என எண்ணிக்கொண்டான். டிரான்சில்வேனியாவின் குளிர் மிகுந்த காட்டிற்குள் விலாட் வந்துசேரும்போது நன்றாகவே விடிந்துவிட்டது.
ஏதோ ஜாலி மூடில் இருந்த சுல்தான் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சின்னப்பையனால் என்ன செய்துவிட முடியும்? என அவர் நினைத்திருக்கலாம். தனது கனவு தேசமாக மாறியிருந்த வலேக்கியாவிற்குள் நுழைந்தான் மூன்றாம் விலாட். தந்தை இறந்து போனதால் நகரம் மேய்ப்பன் இல்லாத மந்தை ஆகியிருந்தது. வாய்ப்பை வசப்படுத்தவேண்டும். வாளை உயர்த்தினார். சிம்மாசனத்தை அடைய இடைஞ்சலாக இருந்த அத்தனை தலைகளையும் சரித்தார். அதன்மீது நடந்து சென்றே அரசைக் கைப்பற்றிக்கொண்டார் மன்னர் விலாட் மூன்றாம் வலேக்கியா.
டிலாகுலா மன்னர்
இரண்டாம் விலாட் அங்கம் வகித்த சிறப்பு கிறிஸ்தவ அமைப்பில் ஒவ்வொரு படிநிலையில் இருக்கும் நபர்களுக்கும் ஒவ்வொரு விதமான பட்டம் அளிக்கப்பட்டது. அப்படி மூன்றாம் விலாடிற்கு வழங்கப்பட்டிருந்தது டிராகுல் எனும் பட்டம். இதற்கு சாத்தானின் மகன் என்பது பொருள். இதனை பின்னர் டிராகுலா என மாற்றிக்கொண்டார்கள் வந்தவர்கள். அதனால் நாமும் அப்படியே அழைப்போம்.

இழந்த நாடு தற்போது தன் கைகளில். அப்பாவைப்போல எவருடனும் சமரசம் செய்துகொள்ள கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் விலாட். சமரசம் இல்லையென்றால் சண்டைதானே? டிராகுலா எதிர்பார்த்ததும் அதைத்தான். சுல்தானிற்கு ஆதரவாக இருந்த அத்தனை பேருக்கும் குறி வைத்தார் மன்னர். சிறிய குழு ஒன்றை பயிற்சித்து தகுந்த காலத்திற்காக காத்திருந்தார். வரலாறு ஒரே இரவில் எழுதி முடிக்கப்படவில்லை தான் எனினும் மாபெரும் திருப்பம் ஒரே இரவில் நிகழ வாய்ப்பிருக்கிறது தானே? டிராகுலாவின் படை சுல்தானின் விசுவாசிகளை ஒரே இரவில் “முடித்தது”.
அத்தனை பேரையும் கழுவில் ஏற்றும்படி உத்தரவிட்டார் வலேக்கியாவின் புதிய மன்னரான டிராகுலா எனப்படும் மூன்றாம் விலாட். அரண்மனையின் வாசலில் நின்றிருந்த அதிகாரிகளைப் பார்த்து பயத்தில் உறைந்து போயினர் நகர மக்கள். ஆட்சிக்கு வந்திருந்த டிரகுலாவை ஏற்றுகொண்டனர் மக்கள். பொதுமக்களுக்கு வேறு என்னதான் வழி இருக்கிறது?
ஆறு ஆண்டுகள் அவருடைய வாழ்க்கையை புரட்டிப்போட்டிருந்தது. ஆட்சி கைக்கு வந்தவுடன் குற்றங்களுக்காக தண்டனைகள் வழங்கிவந்த டிராகுலா, குற்றவாளிகளின் வலிகளை, அலறல்களை கேட்டு பரவசமடையத் தொடங்கினார். குற்றவாளிகள் குறையத் தொடங்கியபோது தண்டிக்க ஆளில்லாததால் சரியாக வேலை செய்யாத அதிகாரிகள் பக்கம் மன்னரின் கோபம் திரும்பிய போதுதான் மக்களுக்கு விபரீதம் புரிந்தது. ஊர் முழுவதும் குத்தீட்டிகள் ஆங்காங்கே முளைக்கத் தொடங்கின. குறிப்பாக நகரில் எல்லையில் பிணந்தின்னி கழுகுகளுக்கு தினமும் விருந்து நடைபெற்றது.
காலப்போக்கில் தண்டனைக்கு பயந்து மொத்த வலேக்கியாவும் மிகுந்த எச்சரிக்கையாக இருந்தது. பொதுமக்கள் வெளியில் நடமாடவே பயந்தனர். அதிகாரிகள் வீடு வாசலை மறந்து மன்னரின் உத்தரவுகளை நிறைவேற்றினர். கொஞ்சகாலம் எல்லாம் சரியாகத்தான் போனது. மன்னருடைய மனம் சாந்தமானதாக அரண்மனைவாசிகள் பேசிக்கொண்டனர். சரியாக அடுத்த ஒருவாரத்தில் மன்னர் பெரிய அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார். ஏழை மற்றும் நோயுற்ற மக்களுக்கு விடுதி ஒன்று கட்டப்படும். இனி அவர்கள் அங்கே குடியேறலாம் என அழைப்பு விடுத்திருந்தார். விடுதியும் கட்டப்பட்டது. விருந்து நாளும் வந்தது. மன்னரே விழாவைத் தொடக்கி வைத்தார். நகரம் முழுவதும் இருந்த அனைத்து நோயுற்றவர்களும், ஏழைகளும் விடுதிக்கு வந்தாகவேண்டும் என அதிகாரிகளுக்கு ஏற்கனவே கட்டளை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் விடுதி முழுவதும் ஆட்கள் நிரம்பி இருந்தார்கள்.
கோப்பை ஒயினை மக்கள் முன்னால் தூக்கி காண்பித்து சியர்ஸ் சொன்னார் டிராகுலா. ஏழை மக்கள், வறுமையின் பிடியில் நின்றவர்கள் தங்களின் முன்பு வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான உணவுகளை அவசர அவசரமாக தின்றனர். இதற்கிடையில் விடுதியின் அத்தனை கதவுகளும் பூட்டப்பட்டது. உள்ளே இருப்பவர்கள் யாரும் வெளியே வரமுடியாது என்பதை உறுதி செய்தவுடன் விடுதிக்கு தீ வைக்கும்படி உத்தரவிட்டார் டிராகுலா. இனி என் நாட்டில் வறுமையும் இருக்காது, நோயாளிகளும் இருக்க மாட்டார்கள் என சந்தோஷமாக கத்தினார் மன்னர். சுமார் ஆயிரம் அப்பாவி மக்களின் அலறல் சப்தத்தை தாண்டி அவர் குரல் வலேக்கியா முழுவதும் கேட்டது.
குற்றவாளிகள் இல்லை, ஏழைகள் இல்லை, நோயாளி என யாரும் இல்லை. இதனை வெளியுலகத்திற்கு உணர்த்தவே ஒரு காரியம் செய்தார் டிராகுலா. ஊரின் ஒவ்வொரு வீதியிலும் பெரிய பானையில் தண்ணீர் வைக்கப்பட்டது. பானைக்கு அருகில் ஒரு தங்க தம்ளரும்!! யார் வேண்டுமானாலும் தங்க தம்ளரில் தண்ணீர் குடிக்கலாம். நம்மூர் மாதிரி தம்ளரை செயினில் தொங்கவிட கூட இல்லை மன்னர். ஆனால் நகர் முழுவதும் ஒரு தம்ளரைக் கூட யாரும் தொடவே இல்லை. யாருக்குத்தான் பயமிருக்காது? ஆனால் டிராகுலாவின் வன்மம் குறைந்தபாடில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வாளிற்கு வேலை கொடுக்கத் தவறியதே இல்லை மன்னர்.
இப்படித்தான் ஒருநாள் சுல்தானின் தூதுவர்கள் டிராகுலாவை பார்க்க வந்தார்கள். (எல்லாம் வலேக்கியாவை வளைத்துப்போடும் விஷயமாகத்தான்.) தூதுவர்கள் இஸ்லாமிய முறைப்படி தலையில் தொப்பி அணிந்திருந்தனர். இது மன்னரின் கண்களை உறுத்திவிட்டது. கழற்றும்படி அப்போதே உத்தரவிட்டார் டிராகுலா. வந்தவர்களுக்கு இவரைப்பற்றி தெரியாததால் முடியாது எனச் சொல்லிவிட்டனர். தூதுவர்களை கொல்லவும் கூடாது என்பதால் நல்லவேளையாக ஈட்டிகளுக்கு அன்று வேலையில்லாமல் போனது. ஆனால் மன்னர் சும்மா விடுகிற ஆளா? இறுதியாக ஒருமுறை தொப்பியை கழற்றும்படி சொல்லிப்பார்த்தார். தூதுவர்கள் செவி சாய்க்கவில்லை. தொப்பியில் சிறிய அளவிலான ஆணியடிக்குமாறு உத்தரவிட்டார் டிராகுலா. ரத்தம் சொட்ட சொட்ட சுல்தானிடம் போய் நின்றார்கள் தூதுவர்கள். இவனை விட்டு வைத்தது மிகப்பெரிய தவறு என சுல்தானுக்கு உறைத்தது அப்போதுதான். மிகப்பெரிய படை ஒன்று தயார் செய்யப்பட்டது.
மூக்கு மேல் வந்த கோபம்
டிராகுலாவிற்கு மூக்கு மேல் என்ன கோபமோ? அல்லது என்ன காதலோ தெரியவில்லை. எதிராளிகளின் மூக்கைத்தான் முதலில் குறி வைப்பாராம் மன்னர். இப்படி அவர் சேகரித்திருந்த மூக்குகளின் எண்ணிக்கை மட்டும் சுமார் 24,000 என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அத்தோடு இன்னொரு பயங்கர பழக்கம் ஒன்றும் இருந்திருக்கிறது இவருக்கு. தினமும் விருந்து உபச்சாரம் நடைபெறும் அரண்மனையில். மேல்மட்ட, நடுமட்ட, கீழ்மட்ட அதிகாரிகள் அனைவரும் இதில் பங்குபெற வேண்டும். (என்னே ஒரு சமத்துவம்) அதிகாரிகள் அனைவருக்கும் முன்னிலையில் மன்னர் அமர்வார்.
மது போதையில் யாராவது ஒரு அடி தவறுதலாக வைத்தாலும் முடிந்தது கதை. உடனடியாக தலை சீவப்பட்டு விடும். இதில் இன்னும் குரூரம் இருக்கிறது. இப்படி இறந்தவர்களின் ரத்தத்தை கோதுமை ரொட்டியில் தொட்டுக்கொண்டே சாப்பிடும் பழக்கம் டிராகுலாவிற்கு இருந்திருக்கிறது. இதைப்பார்த்து யாராவது முகம் சுளித்தால் அவர்களுக்கும் இதே கதிதான். இப்படி தன் வாழ்நாள் முழுவதும் கொடூர மனம் படைத்தவராகவே இருந்த டிராகுலாவை அவனது சொந்த அண்ணன் ராதுவின் மூலமாகவே தோற்கடித்தார் சுல்தான். பிடிபட்ட மூன்றாம் விலாட் என்னும் டிராகுலாவிற்கு மரண தண்டனை விதித்தார் வலேக்கியாவின் “புதிய மன்னர்” ராது. உலகில் அதிகமானோரை கழுவில் ஏற்றிய மன்னரான டிராகுலாவும் கழுவில் ஏற்றப்பட்டார். எந்த ஈட்டி அவரை சிறுவயதில் ஈர்த்ததோ? எந்த ஈட்டி அவரை மூர்க்கமான மிருகமாக்கியதோ? அதே ஈட்டியின் முனையில் அவருடைய உயிரும் பிரிந்தது.