28.5 C
Chennai
Sunday, April 14, 2024

தனது “அந்தரங்க ஆசைக்காக” ரோம் நகரத்தையே அழித்த கொடுங்கோலன் நீரோ வரலாறு!!

Date:

நமது நியோதமிழில் வெளிவரும் இம்சை அரசர்கள் தொடரில்… நான்காம் இம்சை அரசன் நீரோ!

இம்சை அரசர்கள் என்ற தலைப்பைப் படித்தவுடன் உங்கள் அனைவருக்குள்ளும் நீரோ என்னும் பெயர் அசரீரி போல கேட்டிருக்கலாம். புகழ்பெற்ற ரோம் சாம்ராஜ்யத்தை சாய்த்த பெருமைக்குரிய நீரோவின் பெயரில் பல கதைகள் இருக்கின்றன. ரோம் நகரம் எரியும் போது பிடில் வாசித்தான் நீரோ என்பதை கேட்காத காதுகள் இந்தியாவில் இருப்பதாகத் தெரியவில்லை. அதேபோல தனது சொந்த தாய் மற்றும் மனைவி(களைக்) கொன்றதாகவும் நீரோவின் மீது ஒரு கேஸ் உண்டு. இதில் எதெல்லாம் பொய்? உண்மை எவை? மொத்தத்தில் நீரோ, ஹீரோவா? வில்லனா? என்பதைத்தான் பார்க்கப்போகிறோம். சரி வாருங்கள், ரோமிற்கு கிளம்பலாம்.

உலகின் அசைக்க முடியாத வலிமையான பேரரசுகளாக திகழ்ந்த சிலவற்றுள் ரோமும் ஒன்று. கலாச்சார மற்றும் கலை வளர்ச்சியில் யாருடனும் நெருங்க முடியாத உயரத்தில் கொடிகட்டி பறந்தவர்கள் ரோம் மக்கள். மேற்குலகை நோக்கி உலகத்தின் பார்வையைத் திருப்பியதில் ரோம் அரசர்களின் பங்கு அதிகம். ரோமின் இந்த புகழ் கோபுரங்கள் அதே நாட்டின் சாம்பல் மேடுகளின் மீது கட்டப்பட்டவை. அப்படி சாம்பலாக்கியவர் தான் நீரோ.

ரோம சாம்ராஜ்யம் மேற்கில் பரவியிருந்த காலம். நீரோ என்னும் மன்னன் லூசியஸ் டொமிதியஸ் அதீனோபார்பாஸ் என்னும் சுருக்கமான பெயருடன் பிறந்தான். தனது இரண்டாம் வயதில் தனது தந்தையும், அரசருமான கினாயோஸ் டொமிதியஸ் அதீனோபார்பாஸ் மரணமடையவே ஆட்சிக் கட்டில் ஊசலாடத் தொடங்கியது. அடுத்த அரசன் யார்? என்ற குழப்பம் அதிகரித்த போது “நான் இருக்கிறேன்” என ஓடோடி வந்தவர் காலிகுலா. நீரோவின் தாயான இளைய அக்ரிபினாவின் சகோதரன் தான் இந்த காலிகுலா. “மருமகனை பார்த்துக்கொள்வதே இந்த மாமனின் வேலை” என அதிகாரத்தை கைப்பற்றினான் காலிகுலா. மலை போல குவிந்துகிடக்கும் தங்கம், அந்தப்புரத்தில் வலம்வரும் பேரழகிகள் பக்கம் காலிகுலாவின் கண்கள் சாயத் தொடங்கியது.

இதற்குள் தனது மூன்றாம் கணவராக கிளாடியசைத் தேர்ந்தெடுத்தாள் அக்ரிபினா. துரோக முடிச்சுகள் துரித கதியில் விழத் தொடங்கின. கிளாடியஸ் அரச பொறுப்பில் இருந்த காலிகுலாவை கைது செய்து, பின்னர் கதையை முடித்தான். காலிகுலா போனால் யார் அரசன்? வேறுயார்? கிளாடியஸ் தான். நீரோவைத் தனது மகனாக்கிக்கொண்டார். அக்ரிபினாவிற்கு ஒரே ஆசைதான். மகனை அரசனாக்குவது. ஆனால் அது அத்தனை எளிதில் நடக்கவில்லை. தனது ஆசைக்கு இடைஞ்சலாக இருந்த கணவனுக்கு விஷக்காளன்களை உண்ணச் செய்து கொன்றாள். இங்கிருந்துதான் ரோம் என்னும் ராஜ்யத்திற்கு ஏழரை பிடிக்கிறது.

தனது பதினேழாம் வயதில் நீரோ அரசன் ஆனான். நீரோ என்பதற்கு வெறுப்பை காதலிப்பவன் என்னும் அர்த்தமாம்.

தனது பதினேழாம் வயதில் நீரோ அரசர் ஆனான். இதே காலகட்டத்தில் தான் தனது பெயரை லூசியஸ் டொமிதியஸ் அதீனோபார்பாஸ் என்பதிலிருந்து நீரோ என மாற்றிக்கொண்டான். நீரோ என்பதற்கு வெறுப்பை காதலிப்பவன் என்னும் அர்த்தமாம். எதிரிகளை எக்காரணத்தைக்கொண்டும் உயிருடன் விடக்கூடாது, துரோகிகளை தண்டிப்பதில் கருணை காட்டக்கூடாது போன்ற “ராஜதந்திரங்களை” தனது மகனுக்கு கற்றுக்கொடுத்தாள் அக்ரிபினோ. ரோம் நகர கட்டுமானத்தை மாற்றியமைக்கவேண்டும் என்ற ஆசை நீரோவிற்கு எப்போது வந்ததென தெரியவில்லை. முழுவதுமாக தனக்குப் பிடித்த மாதிரி நகரை நிர்மாணிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தான்.

வயதாக வயதாக நிர்வாகத்தில் அக்ரிபினோவின் தலையீடு காலிகுலாவிற்கு தலைவலியைக் கொடுத்தது. அதிகாரிகளிடம் நீரோவை விட அக்ரிபினோவிற்கே செல்வாக்கு அதிகமிருந்தது. நீரோவின் கட்டளைகள் தாயின் கண்காணிப்பிற்கு பிறகே நிறைவேற்றப்பட்டன. இது நீரோவின் ஹீரோ இமேஜை பாதித்தது. தொடர்ந்து நிலைமை மோசமாகவே தாய் கற்றுக்கொடுத்த ராஜதந்திரத்தை உபயோகப்படுத்தினார் நீரோ. முதல்கட்டமாக ரோம் நாணயத்தில் இருந்த அக்ரிபினாவின் உருவத்தை நீக்கி உத்தரவிட்டார். தாய் – மகன் இடையில் இருந்த பனிப்போர் உச்சத்தை அடைந்தது இதற்குப் பின்னர்தான். அடுத்த வாரத்திலேயே அக்ரிபினோ சென்ற படகு கவிழ்க்கப்பட்டது. இந்த முயற்ச்சியில் தோல்வியடைந்தான் நீரோ. ஆனால் அடுத்தமுறை அக்ரிபினோவிற்கு தோல்வியை பரிசளித்தான் நீரோ. அக்ரிபினா மன்னனின் சேவகர்களினால் “தற்கொலை செய்யப்பட்டாள்”.

தனது பிரச்சினையை பரலோகத்திற்கு அனுப்பிவைத்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தான் நீரோ. மொத்த அதிகாரமும் தனது ஆட்காட்டி விரலில் இருக்குமாறு பார்த்துக்கொண்டான். அதிகார பலம் தரும் போதையை உலகின் வேறெந்த வஸ்துவும் தந்துவிடாது. தனக்கு பிடித்த எதிலும் உச்சம் பெறத் துடிப்பார்கள். உதாரணமாக தைமூர் தான் வலிமை பெற்றவுடன் செய்த முதற்காரியம் இந்தியாவுடன் போர்தொடுப்பதுதான். ஆனால் நீரோவிற்கு வேறு திட்டங்கள் இருந்தன.

துவக்க காலகட்டத்திலிருந்தே நீரோவிற்கு இசைமீது அலாதி பிரியம். பெரிய மண்டபம் கட்டி இசைக் கச்சேரிகளை நிகழ்த்தினான்.

துவக்க காலகட்டத்திலிருந்தே நீரோவிற்கு இசைமீது அலாதி பிரியம். பெரிய மண்டபம் கட்டி இசைக் கச்சேரிகளை நிகழ்த்தினான். இசையைக் காதுகள் அனுபவிக்கின்றன. வாய்க்கு என்ன இருக்கிறது? என யோசித்தவரின் கைகளில் ஒயின் கொடுக்கப்பட்டது. என்னதான் பெரிய இசையாக இருந்தாலும் தனியாக கேட்க முடியுமா? என்ற விபரீத யோசனை நீரோவிற்கு வந்தது. பல அழகான பெண்களின் அணிவகுப்பு அரண்மனையில் நிகழத்தொடங்கின. மண்டபங்களுக்குள் பெரிய தலைகள் செல்ல சங்கடப்படும் அளவிற்கு “கச்சேரி” அதிகமாகியது.

அணிவகுப்பு நிகழ்த்திய அழகிகளுள் பாப்பேயா சபினா என்பவளை மன்னருக்கு பிடித்துப்போனது. சபீனாவை திருமணம் செய்வதென்றால் முதல் மனைவி ஆக்டேவியாவிடமிருந்து எதிர்ப்பு இருக்கும். அது கவலையில்லை. செனட் சபை உறுப்பினர்களின் கோபத்தை வேறு சமாளிக்க வேண்டியிருக்கும். இருவரையும் சமாளிக்க ஒரு காரணத்தைக் கண்டுபிடித்தான். ஆக்டேவியாவிற்கு குழந்தைகள் இல்லை. போதாது? எதிர்கால ரோம சாம்ராஜ்யத்திற்கு அரசன் வேண்டுமல்லவா? சபீனாவை மனமுடித்துக்கொண்டான் நீரோ. அத்தோடு நிறுத்தியிருக்கலாம். புது மனைவியின் அழகில் ஆக்டேவியாவின் மீதிருந்த வெறுப்பு இன்னும் அதிகரித்திருந்தது. ஆகவே ஆக்டேவியாவை தனது நாட்டைவிட்டு பலவந்தமாக நீரோ வெளியேற்றினான். இது பொதுமக்களிடையே மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆக்டேவியாவிற்கு ஆதரவாக மக்கள் போராடத் தொடங்கினர். இன்னும் சிலர் ஆக்டேவியாவின் சிலைகளை நகருக்குள் வடித்தனர். இது நீரோவின் கோபத்தில் டன் கணக்கில் பெட்ரோல் ஊற்றியது. மக்களைக் கட்டுப்படுத்தவேண்டும். ஆக்டேவியாவும் வேண்டாம். என்ன செய்யலாம். அடுத்தநாளே ஆக்டேவியா படுகொலை செய்யப்பட்டாள். அதுவும் கொடூரமான முறையில். நீரோவின் மூர்க்கத்தனத்தை கண்ட மக்கள் பயத்தில் ஆழ்ந்து போயினர். ஆக்டேவியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த யாரும் அதன்பின்னர் பேசவில்லை. நீரோ சபீனாவோடு ஜாலியாக கச்சேரி கேட்கத் தொடங்கினார்.

இப்படியாக “சிறப்பாக” ஆட்சி செய்துகொண்டிருந்த நீரோவிற்கு இப்போது இன்னொரு சிக்கல் வந்தது. இம்முறை கடவுளின் தூதரிடமிருந்து. ஆமாம். ஏசுபெருமான் கல்வாரி குன்றிலே மரித்த காலம் தொட்டு தீயென பரவி வந்தது கிருத்துவ மதம். உலகம் முழுவதும் திரும்பிய பக்கமெல்லாம் கர்த்தரை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர். ஏசுவின் பேச்சை கேட்டவர்கள், அவருடைய கருணையை கண்ணால் பார்த்தவர்கள் இதனை உலகம் முழுவதும் பரப்ப ஆயத்தமாகினர். அப்படித்தான் ரோமிற்கு வந்து சேர்ந்தார்கள் புனித பாலும், பீட்டரும். முதலாம் கத்தோலிக்க போப்பாண்டவரான பீட்டர் பொதுமக்கள் முன்னிலையில் சிரச்சேதம் செய்யப்பட்டார். கிறிஸ்தவ ஆதரவாளர்கள் பலருக்கும் இது பேரதிர்ச்சியாக இருந்தது.

யூதர்களின் வெறுப்பையும் சம்பாதித்தார் நீரோ. அவர்களுடைய வழிபாட்டு தலங்களை இடித்து தரைமட்டமாக்கினர் நீரோவின் ஆட்கள்.

கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் யூதர்களின் வெறுப்பையும் சம்பாதித்தார் நீரோ. அவர்களுடைய வழிபாட்டு தலங்களை இடித்து தரைமட்டமாக்கினர் நீரோவின் ஆட்கள். இப்படி இரு பெரும் மதங்களைச் சேர்ந்தவர்களும் நீரோவிற்கு எதிராகத் திரும்பினர். இதிலிருந்து எப்படி மீள்வது என யோசித்துக்கொண்டிருந்த நீரோவிற்கு திடீரென ஓர் யோசனை உதித்தது. உடனே ரோமிலிருந்து 35 மைல் தொலைவில் உள்ள ஆண்டியம் மலைக்கு சென்றுவிட்டார். அங்கே அரசருக்கென பிரத்யேக மாளிகை இருந்தது. நீரோ சென்ற சில நாட்களில் ரோம் நகரத்திற்கு தீ வைக்கப்பட்டது.

யார் இந்தக் காரியத்தை செய்தார்கள்? என யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி கச்சிதமாக வேலை செய்திருந்தார்கள் நீரோவின் ஆட்கள். தனக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதற்காக முன்கூட்டியே நகரைவிட்டு சென்றிருந்தான் நீரோ. தீயின் நாக்குகள் நாலா புறத்திலும் விரவிப் படர்ந்தன. ரோம் நகரின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 70 சதவிகிதம் இந்தத் தீயினால் அழிந்தது. பிரம்மாண்ட கட்டிடங்கள், மாளிகைகள் அனைத்தும் தீக்கு சொந்தமாகின. எல்லாம் எரிந்து சாம்பலான பின்னர் நீரோ ஓடோடி வந்தான்.

வீடுகளை இழந்த மக்களுக்கு அரண்மனையில் தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்யச்சொல்லி உத்தரவிட்டார். இது நீரோவிற்கு ஓரளவு நன்மதிப்பை பெற்றுத்தந்தது. இத்தனையும் செய்தது அதற்குத்தானே. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதுதான் நீரோவின் வழக்கம். கிறிஸ்தவர்கள் அதிகமானதலேயே இந்த நெருப்பு ரோமை சீரழித்துவிட்டது என புது கதை ஒன்றை அவிழ்த்துவிட்டார் அரசர் நீரோ. இந்த ஒரே தீ இரண்டு காரியங்களை நீரோவிற்கு சுலபமாக்கியது. முதலாவது அதிவேகமாக பரவிய கிறிஸ்தவத்தை கட்டுப்படுத்த. இரண்டாவதாக தான் ஆசைப்பட்டபடி புதிய நகரை உருவாக்க. வணங்குவதற்கு சிலைதானே வேண்டும். இதோ எனது சிலையை பிரம்மாண்டமாக செய்கிறேன் என அறிவித்தார் அரசர். அமெரிக்காவின் சுதந்திர சிலையைப் போன்றே அந்தக்காலத்தில் நீரோவிற்கு சிலை எழுப்பட்டது.

nero

இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ரோம் எரியும் போது நீரோ பிடில் வாசித்தான் என்பது பாதி பொய் அல்லது ஓரளவிற்கு உண்மை. ஏனெனில் ரோம் பற்றி எரியும்போது நீரோ ஆண்டியம் நகரில் இருந்தார். இது தற்போது Anzio என்று அழைக்கப்படுகிறது. அத்தோடு நீரோவின் காலகட்டத்தில் பிடில் கண்டுபிடிக்கப்படவே இல்லை!! (வயலின் தான் ரோமர்களால் பிடில் என்று அழைக்கப்பட்டிருக்கிறது.) ஆமாம்! வயலின் என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டதே பதினோராம் நூற்றாண்டில் தான். வேண்டுமென்றால் ரோம் நகர தீ விபத்தின்போது நீரோ ஆண்டியம் அரண்மனையில் இசைக்கச்சேரி கேட்டுக்கொண்டு இருந்திருக்கலாம். அதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

அரசரின் ஆசை மனைவி சபீனா இறந்தது பற்றி சொல்லிவிட்டேனா? இல்லையா? சரி, பார்த்துவிடலாம். இந்தப்பழம் புளிக்கும் என சபீனாவை நீரோ ஒதுக்கியபோது கர்ப்பமாக இருந்தாள் சபீனா. எப்படியும் சிக்கலை சரிகட்டிவிடலாம் என்றிருந்த சபீனாவின் நம்பிக்கை கோட்டைகள் நாளாக நாளாக சரியத் தொடங்கின. சபீனா மீதான நீரோவின் வெறுப்பு அதிகமாகிக்கொண்டே வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சபீனாவின் மரணத்தைப் பயன்படுத்திக்கொண்டான் நீரோ. மரணத்தை நிகழ்த்தியவர் சாட்சாத் நீரோவே தான். சபீனா இறக்கும்போது அவள் நிறைமாத கர்ப்பிணி.

மறுபடியும் நீரோவிற்கு எதிராக மக்கள் களத்தில் குதித்தனர். இம்முறை மொத்த அரசாங்கமும் மக்கள் பக்கம் இருந்தது. தனது கட்டளைகளுக்கு இனி வேலையில்லை எனத் தெரிந்த அடுத்த வினாடி நாட்டை விட்டே ஓடிப்போனார் நீரோ. சேவகர்கள் சூழ, தங்க விரிப்பில் நடந்த நீரோ காட்டிற்குள் தஞ்சம் புகுந்தான். அவனுக்குத் துணையாக அவனது குரூரம் மட்டுமே இருந்தது.

செனட் சபையில் நீரோவிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன. அத்தனைக்கும் சேர்த்து மரணதண்டனை விதித்தார் நீதிபதி. தண்டனையை நிறைவேற்ற தனிப்படை அமைக்கப்பட்டது. எங்கேயோ காட்டிற்குள் பதுங்கியிருந்த நீரோவை அவர்கள் கைது செய்யக் கிளம்பினர். ஆனால் நீரோ தனது மரணத்தைக்கூட தானே தீர்மானித்துக்கொள்ள விரும்பினான். காவலாளிகள் தன்னை நெருங்கிய அதே நாளில் தன கழுத்தை தானே கொய்து இறந்துபோனான்.

நீரோவின் இத்தனை கொடூர செயல்களுக்கும் காரணம் சந்தேகமே இல்லாமல் அக்ரிபினோ தான். சும்மாவா சொன்னார்கள் தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை என?

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!