28.5 C
Chennai
Saturday, February 24, 2024

ஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை அரசன் அலாவுதீன் கில்ஜி வரலாறு!

Date:

நமது நியோதமிழில் வெளிவரும் இம்சை அரசர்கள் தொடரில்… முதல் இம்சை அரசன் அலாவுதீன் கில்ஜி!

1296 ஆம் ஆண்டு. டெல்லியின் குளிர் உச்சத்தைத் தொட்டிருந்தது. அரண்மனை வளாகத்தின் அத்தனை வாசல்களும் மாலையிலேயே மூடப்பட்டிருந்தன. பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என கட்டியக்காரன் ஏற்கனவே அறிவித்திருந்தான். அரண்மனை சகஜ நிலைக்குத் திரும்பும் வரையிலும் யாரும் அரண்மனையைவிட்டு வெளியே செல்ல எத்தனிக்க கூடாது என்பது அந்த அறிவிப்பில் இருந்தது. அரச பரம்பரையினர் தப்பிச்செல்ல ரகசிய வழிகள் தயார் நிலையில் இருந்தன. எதற்கு இந்த ஏற்பாடு என்ற குழப்பத்தில் இருந்தனர் மக்கள். அரசாங்க அதிகாரிகள் அவர்களுக்கு நெருங்கியவர்கள் என யாரிடம் கேட்டாலும் பதிலில்லை. பலரைக் காணவில்லை. அப்போது கொம்புகள் ஊதும் சப்தம் பலமாய் கேட்டது. திடீரென அகழி திறக்கப்பட்டு வெளியே சென்றிருந்த குதிரைப்படை வீரர்கள் அரண்மனைக்குள் நுழைந்தனர்.

குதிரைகளின் குளம்படி சத்தமும், அவற்றால் எழுந்த புழுதியும் குழப்பத்தை அதிகரித்தன. லாயத்தில் இருக்கும் மற்றய குதிரைகளுக்கும் தயாராக இருக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாமன்னர் ஜலாலுதீன் கில்ஜி இன்னும் அரண்மனை வந்துசேரவில்லை. தெற்கே படையெடுத்துச்சென்ற தன் மருமகன் அலாவுதீனை வரவேற்கச் சென்றவர் இன்னும் அரண்மனை திரும்பவில்லை. அதற்குள்ளாக படைகள் தயாராவது பதற்றத்தை அதிகரிக்கச் செய்தது. ஒருவேளை மருமகனை எதிர்த்து வாள் உயர்த்தப் போகிறாரா ஜிலாலுதீன்? அல்லது படையெடுப்பில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து டெல்லியைக் கைப்பற்ற நினைத்து காய் நகர்த்துகிறாரா அலாவுதீன்? அதேநேரத்தில் தர்பாரில் புதிய மன்னர் தேர்ந்தெடுக்கபட்டுக்கொண்டிருந்தார். டெல்லி கலவரத்திற்குத் தயாராகியது.

இந்த குழப்பத்திற்கு விடை கண்டுபிடிக்க வேண்டுமானால் நாம் கங்கை ஆற்றில் பயணிக்கும் ஜிலாலுதீன் கில்ஜியை சந்திக்க வேண்டும். அடிமைகள் சாம்ராஜ்யத்தின் மிக முக்கிய மன்னரான பால்பனின் முக்கிய தளபதிகளில் ஜிலாலுதீனும் ஒருவர். இவர் ஒட்டுமொத்த டெல்லிக்கும் சுல்தானாக மாறியது ஒரு வேடிக்கை கதை. பால்பன் இறந்தபிறகு அவரது பேரன் கெய்கூபாத்தை அரசராகத் தேர்ந்தெடுத்தனர் மந்திரிகள் அனைவரும். கண்டிப்பிற்கும், ஒழுங்கிற்கும் பெயர்போன பல்பனின் பேரன் ஆட்சிக்கட்டிலை அந்தப்புரத்திற்கு மாற்றிக்கொண்டார் கொஞ்ச நாட்களில். அரேபியாவில் இருந்து தினமும் பெண்கள் வரவழைக்கப்பட்டனர். இதனைக்கேட்டு கோபமடைந்த “தளபதி” ஜிலாலுதீன் டெல்லிமீது படையெடுத்தார். அந்தப்புரத்தில் “ஆராய்ச்சியில்” இருந்த மன்னரின் தலை அடுத்த ஒருமணிநேரத்தில் உடம்பைவிட்டு அகன்றது. இப்படி எளிமையாக டெல்லி சுல்தானாக தன்னை அறிவித்துக்கொண்டார் ஜிலாலுதீன்.

ஒருபுறம் மங்கோலியர்களின் படையெடுப்பு, ராஜபுத்திரர்களின் செல்வாக்கு தக்காணத்தில் அதிகரிப்பு என சூழ்ந்த சிக்கல்களை திறம்பட சமாளித்தார். வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் “அடே ஜலாலுதீனா, தங்கமான மனுஷன் அவர்” என்கின்றனர். ஆனால் வரலாற்றுக்கே உரிய வினோதம் மாமன்னர் வாழ்க்கையிலும் நடந்தது. தனது தங்கை மகனான அலாவுதீனை மன்னரே நேரடிக் கண்காணிப்பில் வளர்த்து வந்தார். புத்திக்கூர்மையும், போர் முறைகளில் தேர்ச்சியும் பெற்ற அலாவுதீனுக்கு தனது மகளைத் திருமணம் செய்துகொடுத்தார். தற்போதைய குஜராத் பக்கத்தில் உள்ள கிராமங்களை மருமகனுக்கு அளித்தார். ஆனால் அலாவுதீனின் எண்ணங்கள் வேறுமாதிரி இருந்தன.

படைகளைத் திரட்டினார் அலாவுதீன். உங்கள் மாப்பிள்ளை மால்வாவை நோக்கி படையெடுக்கிறார் என்று மந்திரி சொன்னவுடன் கேள்விக்குறியாக முகத்தை வைத்துக்கொண்ட மன்னர், அலாவுதீன் போரில் வெற்றிபெற்று திரும்பும்போது ஆச்சர்யக்குறியானார். கவர்னர் அந்தஸ்தில் இருப்பவர்கள் மன்னரிடம் அனுமதி பெறாமல் மற்ற நாட்டின்மீது படையெடுக்கக் கூடாது. இந்தவிதியை அலாவுதீன் மீறி மால்வாவைக் கைப்பற்றினார். ஜலாலுதீன் மருமகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் அவர் ஆளுமைக்கு உட்பட்ட நகரங்களின் எண்ணிக்கையை அதிகரித்தார். இது அலாவுதீனுக்கு சவுகர்யமாய் அமைந்தது. அப்போதே மன்னர் கண்டித்திருந்தால் பின்னாளில் தேவகிரி படையெடுப்பு நடைபெற்று இருக்காது.

வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த தேவகிரி கோட்டையை கைப்பற்றி நாடு திரும்பும் அலாவுதீனை வரவேற்கத்தான் தனி படகில் காத்திருந்தார் ஜிலாலுதீன். நகரங்களை மட்டுமே ஆண்டு அலுத்துப்போன அலாவுதீனின் கண்கள் தூரத்தில் தெரியும் டெல்லியை ஆர்வமாகப் பார்த்தன. பொறாமைத் தீ அவரது உடலெங்கும் பரவியது. “சபாஷ் அலாவுதீன்” என தன்னை கட்டியணைத்த மாமனாரின் வயிற்றில் கத்தியால் துளையிடும் அளவிற்கு பொறாமை அவரை ஆக்கிரமித்திருந்தது. என்ன நடக்கிறது என்று பயத்தில் உறைந்த ஜிலாலுதீனின் தலையை சீவினான் அலாவுதீனின் அடியாள் ஒருவன்.

இப்படியான சூழ்நிலையில் தான் டெல்லி அரண்மனைக் கதவுகள் சாத்தப்பட்டன. மன்னரின் மரணச்செய்தி மதில் சுவர்களைத் தாண்டி அரண்மனைக்குள் பரவியது. இத்தனை குழப்பத்திற்கு மத்தியில் ஜிலாலுதீனின் தாய் மிகப்பெரிய தவறொன்றைச் செய்தார். பத்து வயதே நிரம்பிய தனது மகன் ருக்னுதீனை மன்னராக அறிவித்தார். தலையில் இருக்கும் கிரீடத்தை வைத்து விளையாடிக்கொண்டிருந்த புது மன்னர் ருக்னுதீனின் கண்கள் அடுத்தநாள் காலையில் தோண்டி எடுக்கப்பட்டன. ஆமாம். அலாவுதீனின் படைகள் சுலபமாக அரண்மனையை தங்கள் வசம் கொண்டுவந்தனர். முதல் வேலையாக  ருக்னுதீனின் வாழ்க்கையை இருட்டாக்கினர். மாமியார், மற்றும் உறவினர் அனைவரையும் சிறையில் தள்ளிவிட்டு விசிலடித்துக்கொண்டே கிரீடத்தை தனது தலையில் வைத்துக்கொண்டார் அலாவுதீன். டெல்லி இனி எனது கோட்டை எனக் கர்ஜித்த அவரது குரலில் பயங்கரம் இருந்தது.

அலாவுதீன் கில்ஜி வரலாறு
Credit: Wikibio

துரோகச் சுடர்

ஆரம்பத்தில் ஹிட்லர் கூட நல்லவராகத்தான் இருந்திருக்கிறார். அதிகார பலம் வந்தவுடன் தான் பல தலைவர்களுக்கு கிறுக்கு பிடித்து விடுகிறது. அப்படி அலாவுதீனுக்கு கிறுக்கு பிடித்தது எப்போதென்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் அது முற்றியது முதன்மைத் தளபதி ஜாபர்கான் மரணத்தின்போதுதான். மங்கோலியர்களை இரண்டுமுறை எதிர்த்து வெற்றிபெற்ற மாபெரும் வீரரான ஜாபர்கானை மக்கள் கொண்டாடுவது அரசருக்கு (இப்போது அலாவுதீன் தான் அரசர்) எரிச்சலாக இருந்தது. தனக்கு போட்டியாக இன்னொருத்தனா எனக் குழப்பத்தில் இருந்த அலாவுதீனுக்கு இனிப்புச் செய்தியாக இருந்தது ஜாபர்கானின் மரணம். மூன்றாம் முறை மங்கோலியர்களை எதிர்த்து நடைபெற்ற போரில் வீர மரணம் அடைந்திருந்தார்.

கண்ணீருடன் இச்செய்தியை மந்திரி சொல்ல, போர் என்றால் அப்படித்தான் என முகத்தை திருப்பிக்கொண்டாராம் அரசர். தனது வெற்றிக்காக போரிட்டு மரணமடைந்த தளபதியின் மீதே அரசருக்கு இத்தனை காண்டு என்றால் மற்றவர்களின் நிலைமை பற்றி கொஞ்சம் யோசித்துவிட்டு அடுத்த பாராவிற்கு போகவும்.

ரத்த ஆறு

பார்க்கப்போனால் இந்த மங்கோலியர்கள் அப்போதைய காலகட்டத்தில் சடுகுடு ஆடி பல மன்னர்களின் தூக்கத்திற்கு வேட்டு வைத்திருக்கிறார்கள். எப்போதும் மங்கோலியர்களின் படையெடுப்பு இருக்கும் என்ற அச்சத்துடன் இருந்தார்கள் ஆட்சியாளர்கள். இதனாலேயே சாதாரண, மங்கோலியாவை பூர்வீகமாகக் கொண்ட மக்களை அப்போதைய அரசுகள் கடுமையாக நடத்தினார்கள். தீவிர கண்காணிப்பில் அம்மக்கள் இருந்தார்கள். அலாவுதீன் ஆட்சியிலும் இப்படித்தான் டெல்லியில் மங்கோலிய மக்கள் இருந்தார்கள். அனைவரும் இஸ்லாத்தை சேர்ந்தவர்கள். இந்தியாவிற்குள் வந்தபிறகு தங்களது மதத்தை மாற்றிக்கொண்டதால் இவர்களை புதிய முஸ்லீம் என்று அழைக்கப்பட்டார்கள்.

ஒருநாள் மாலையில் உப்பிரிகையில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மன்னர் தற்செயலாக மங்கோலியர்களின் குடியிருப்பை பார்த்தார். அருகிலிருந்த மந்திரி “மங்கோலியர்கள் எப்போது தாக்குவார்கள் எனச் சொல்லவே முடியாது” என்றார் நேரம் பார்த்து. உடனடியாக அனைவரையும் கொன்றுவிடுங்கள் என உத்தரவிட்டார் அரசர். பயந்துபோன மற்ற அமைச்சர்கள் எவ்வளவோ முயன்று பார்த்தும் பயனில்லை. ஒரே நாள் இரவில் அத்தனை மங்கோலிய மக்களையும் தீர்த்துக்கட்டினார்கள் அலாவுதீனின் வீரர்கள். இப்படி அவர்கள் கொன்றது 30,000 பேரை! அதுவும் ஒரே இரவில்!

நானே கடவுள்

இந்த யோசனை இந்தாளுக்கு எப்படி வந்தது என்றே தெரியவில்லை. ஒருநாள் சபை கூடியதும் ஆட்சி செய்பவன் கடவுளுக்கு இணையானவன் இல்லையா? என்றார் அவையோரைப் பார்த்து. வரப்போகும் வில்லங்கம் பற்றித் தெரியாமல் அனைவரும் தலையை ஆட்டித் தொலைத்தனர். அப்படியென்றால் என்னை கடவுளின் தூதர் என்று அழைக்க வேண்டும் என்று ஒரே போடாகப்போட்டார் மன்னர். அடிமைகளின் வாழ்க்கை எப்போது சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறது? அப்படியே ஆகட்டும் கடவுளின் தூதரே என்று கோரஸ் பாடிவிட்டார்கள் மங்குணிகள். ஆனால் பின்னாளில் டெல்லி மக்களின் விருப்பத்திற்குரிய அலா உல் முல்க் என்னும் துறவி, மன்னரின் ” பித்தத்தை” போக்கியதாகச் சொல்கிறார்கள்.

விதி வலியது 

தன்னை ஆளாக்கிய ஜலாலுதீனைக் கொன்றது, அவரது குழந்தைகளின் கண்களை தோண்டி எடுத்தது, அப்பாவி மக்களைத் துன்புறுத்தியது என பாவ மூட்டைகளில் பாரம் ஏற்றிக்கொண்டிருந்த அலாவுதீனுக்கு எமனாக வந்தது மாலிக் கபூர் என்னும் திருநம்பி. சுல்தானின் படைகள் குஜராத்தை வீழ்த்தியதும் அனைத்து செல்வங்களும் டெல்லிக்கு பயணப்பட்டன. அத்தோடு வந்து சேர்ந்தவன் தான் மாலிக் கபூர். உடலளவில் வேறுபாடுகள் இருந்தாலும் அசாத்திய போர் வியூகங்களை அமைப்பதில் கபூர் கில்லாடி. இது மன்னரின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

மாலிக் கபூர் தலைமையில் புதிய படை ஒன்று உருவானது. ராஜஸ்தான், தெலுங்கானா, மைசூர், மதுரை என சென்ற இடங்களில் எல்லாம் வெற்றிக்கொடி கட்டியது இந்தப்படை. குஷியில் குதித்தார் மன்னர். அளவுக்கு மீறிய பரிசுகள், தகுதிக்கு மீறிய பதவிகள் தந்து கபூரை மகிழ்வித்தார். ஆனால் ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் அல்லவா?

இத்தனை வசதிகள் இருந்தும் கபூரின் கண்கள் அரியாசனத்தை குறிவைத்தன. டெல்லியைக் குறிவைத்த அலாவுதீனின் கண்களைப் போன்றே. நாளுக்குநாள் அரண்மனையில் கபூரின் செல்வாக்கு அதிகரித்தது. அதற்கு மற்றொரு காரணம் மன்னருக்கு வந்த வியாதிகள். மன்னருக்கு பக்கத்தில் எப்போதும் வைத்தியர்கள் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மருந்து மட்டுமே உணவு என்ற நிலைக்கு மன்னர் வந்தவுடன் கபூர் கச்சிதமாக காய் நகர்த்தினான். மன்னருக்கு கொடுக்க வேண்டிய மருந்தில் விஷத்தைக் கலந்தான். வாழ்நாள் முழுவதும் யாராலும் கணிக்க முடியாத மன்னராக இருந்த அலாவுதீன் கில்ஜி தனது கடைசி கோப்பை ” மருந்தை” உட்கொண்ட கொஞ்ச நேரத்தில் இறந்து போனார்.

ஜலாலுதீன் கில்ஜிக்கு செய்த துரோகமா? இல்லை தவறாக எடுக்கப்பட்ட ராஜாங்க முடிவுகளா? என எது காரணம் என்று தெரியவில்லை. ஆனால் அவரது வாரிசுகளின் மரணம்கூட திகிலூட்டுபவையாக இருந்தது மட்டும் உண்மை. அளவுக்கு மீறிய அதிகார பலம் எப்படியெல்லாம் ஒருவனை வீழ்த்தும் என்பதற்கான உதாரணம் அலாவுதீன் கில்ஜி.  

இத்தனை கொடூரங்கள் நிரம்பிய அலாவுதீனுக்கு எல்லாம் அப்பன் ஒருவர் இருந்திருக்கிறார். அடுத்த அத்தியாயத்தில் நீங்கள் அவரைத்தான் சந்திக்க இருக்கிறீர்கள். காத்திருங்கள்!!

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!