நாடோடியாகத் திரிந்த மனிதனின் கால்கள் ஓய்வைப்பற்றி சிந்தித்த போதுதான் பல அரிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, பருவகாலங்கள் மீதான புரிதல் என அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு மனிதகுலம் தயாரானது. ஊர்கள் உருவாகின. கையில் செல்வம் அதிகமானவுடன் சமூகத்திற்கு தன்னைத் தலைவனாகக் காட்டிக்கொள்ளும் “பாரம்பரிய பழக்கம்” அப்போதுதான் துவங்கியிருக்க வேண்டும். ஒவ்வொரு கூட்டத்திலும் இப்படியான தலைவர்கள் முளைத்தனர்.
அதே நேரத்தில் தன்னைவிட சிறந்தவன் ஒருவனால் ஆளப்படவேண்டும் என்ற எண்ணம் பெரும்பான்மையான மனிதர்களுக்கு எப்போதுமே உண்டு. இது தலைவர்களின் உருவாக்கத்தை அதிகப்படுத்தியது. கி.மு, கி.பி என எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். வரலாற்றில் இங்குதான் மன்னராட்சி முறையின் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றிருக்கிறது.
மக்களாட்சிக்குப் பழகிவிட்ட நமக்கு மன்னராட்சி என்பது ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம் வகைக் கதைகள் மட்டுமே. கதையைப் பொறுத்தவரை இரண்டு ராஜாக்கள் தான் சாத்தியம். ஒன்று நல்ல ராஜா மற்றொன்று கெட்ட ராஜா. ஆனால் காலம் யாரையும் நல்லவர் – கெட்டவர் என்ற சட்டகத்திற்குள் அடக்கியதில்லை. சொல்லப்போனால் ஒருவருக்குள்ளே இருக்கும் நல்ல / கெட்ட குணங்களின் விகிதங்களே அவரைப்பற்றிய ஓரளவு தெளிவான முடிவிற்கு நம்மை வரவைக்கின்றன. சில சமயங்களில் இந்த விகிதங்கள் நம்மைக் குழப்பியும் விடும். இவரு நல்லவரா கெட்டவரா என நாயகன் பாணியில் கேள்வி கேட்கத் தோன்றும்.
கல்வியிலும், கலையிலும் ஈடற்ற புலமையுடைய முகமது பின் துக்ளக் யாராலும் நினைத்துப்பார்க்க முடியாத கோர முகத்தைத் தாடிக்குள் ஒளித்து வைத்திருக்கிறார். ஆப்கான் முதல் கங்கை வரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சரித்திரத்தில் மோசமானவராகக் காட்டப்படும் அவுரங்கசீப் முகலாய மன்னர்களிலே கட்டுப்பாடான ஆள் என்பதையும் ஒப்புக்கொள்கிறார்கள் ஆராயச்ச்சியாளர்கள். நம்மூர் மட்டுமல்ல உலகம் முழுவதும் பல ஆட்சியாளர்கள் இப்படி இருந்திருக்கிறார்கள். மரணமே தன்னை அன்டக்கூடாது என்பதற்காக மருத்துவர்களை எல்லாம் ஓ.டி பார்க்கவைத்த சீன அரசர், இரண்டாம் உலகப்போருக்கு வழிகோலிய ஹிட்லருக்கு இருந்த தீர்க்க இயலாத பயம் என இப்படியான உத்தமர்களைப்பற்றிய தொடர்தான் இது.
சரித்திரம் என்பதே கையில் இருக்கும் சாட்சியங்களை வைத்து வரையப்படும் புனையோவியம் தான். சில சாட்சியங்கள் ஒட்டுமொத்தமாக நமக்குக் கற்பிக்கப்பட்ட அத்தனை விஷயங்களையும் தகர்க்க கூடியதாக இருக்கலாம். அல்லது அப்படி நாம் கற்ற வரலாற்றுக் கதைகளை சிதைக்கும் வகையிலான ஆதாரங்கள் இனிமேல் கிடைக்கலாம். ஆனால் பல்வேறு காலங்களாக பல வகையான ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு தொகுத்து சேகரிக்கப்பட்ட ஆவணங்களின் மூலமாக தொன்மங்களின் துல்லியம் சமகாலத்தில் அதிகரித்திருக்கிறது. இப்படி தொகுக்கப்பட்ட வரலாற்றின் பக்கங்களில் இருந்து சுவாரஸ்யமான ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைக் குறித்து பேசப்போகிறோம். இம்சை அரசர்கள் நிரம்பிய அரண்மனைக்கு உங்களை வரவேற்கிறேன்.