மாலையிலிருந்து இளவரசர் முகமது பின் துக்ளக்கின் முகம் கவலையில் ஆழ்ந்திருந்தது. தோட்டத்திற்கு உலவச் சென்றவர் அப்படியே அமர்ந்துவிட்டார். பணியாட்களுக்கு இளவரசரிடம் பேசவே பயமாகத்தான் இருந்தது. இருள் வேகமாகப் பரவத் தொடங்கியது. நெற்றியைத் தேய்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த முகமது பின் துக்ளக் முடிவெடுத்தவராக சட்டென எழுந்தார். “மீர் இமார்த்தை வரச்சொல்லுங்கள்” எனக் கட்டளையிட்டவாறே அரண்மனை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவரது முகத்தில் ஒருவித திருப்தி இருந்தது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வரலாற்றை திகில் கதையாக மாற்றியிருக்கும் துரோகம் தந்த திருப்தி அது.
கட்டிடக்கலை வல்லுனர்களில் டெல்லி வட்டாரத்திலேயே மீர் இமார்த்தை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. பாரசீக மற்றும் இந்திய கட்டுமானங்கள் குறித்த ஞானம் நிரம்பிய இமார்த் அரண்மனைக்கு வருவதற்குள் நன்றாக இருட்டிவிட்டது. இளவரசரின் அறையில் வெகுநேரம் ஆலோசனை செய்த அவர், வீடு திரும்பும் போது மூட்டை மூட்டையாக தங்கக்காசுகள் அவரிடம் இருந்தன. அடுத்த சில நாட்களில் டெல்லி ஸ்தம்பித்து நின்றது.

வங்காளத்திற்கு படையெடுத்துச்சென்ற முகமது பின் துக்ளக்கின் தந்தை கியாசுதீன் துக்ளக் மாபெரும் வெற்றியுடன் நாடு திரும்பிக்கொண்டிருந்தார். அவரை வரவேற்க பிரம்மாண்ட மண்டபம் ஒன்றைக் கட்ட நினைத்தார் முகமது பின் துக்ளக். இந்த விஷயமாகத்தான் மீர் இமார்த்திற்கு தகவல் சொல்லப்பட்டிருந்தது. கலையில் கைதேர்ந்தவரான இமார்த் பிரம்மாண்ட வெற்றி மண்டபத்தை அமைத்தார். வரவேற்பு தடபுடலாக நடந்தது கியாசுதீனுக்கு. அலங்கார விளக்குகள், நவரத்தினங்கள் பதித்த விரிப்புகள் என காசை வாரி இரைத்திருந்தார் இளவரசர். இவற்றைக் கண்ட மாத்திரத்தில் சொக்கிப்போய் நின்ற மன்னர் கியாசுதீனை கை பிடித்து இருக்கையில் அமரச் சொன்னார் இளவரசர் முகமது பின் துக்ளக். அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்ட முகமது, தூரத்தில் நின்றிருந்த இமார்த்தைப் பார்த்து தலையை அசைத்த சில வினாடிகளில் அந்த விபரீதம் நடந்தது.
தனக்காக குழுமியிருந்தவர்களைப் பார்த்து கையசைத்தவாறே சிம்மாசனத்தில் கியாசுதீன் அமர்ந்த உடனே தூண்கள் சரிந்து அவர்மீது விழத் தொடங்கின. அத்தனை கச்சிதமாக துரோக வலையைப் பின்னியிருந்தார் இமார்த்! நிலை தடுமாறி கீழே விழுந்த மன்னர் தூரத்தில் மங்கலாக தன்னையே பார்த்து சிரித்துக்கொண்டிருக்கும் முகமது பின் துக்ளக்கைப் பார்த்தார்.
துரோகம் இல்லையென்றால் வரலாறு இத்தனை சுவாரஸ்யங்கள் மிகுந்ததாக இருக்காது தான். எல்லோருமே ரஜினியாக இருந்துவிட்டால்? பின்னர் ரகுவரன்களுக்கு என்னதான் வேலை? ஆனால் வரலாறு ரகுவரன்களுக்குத் தான் சாமரம் வீசியிருக்கிறது. கில்ஜி வம்சத்தை முடிவிற்குக் கொண்டுவந்த பெரும் வீரரான கியாசுதீன் துக்ளக்கை இப்படி தீர்த்துக்கட்டிய பிறகு பதவிக்கு வந்தார் முகமது பின் துக்ளக்.
இவரைப்பற்றி ஆராய்ந்த பலரும் சொல்லும் ஒரே விஷயம்” கிறுக்கு பிடித்த அரசர்” என்பதுதான். அதிகார பலத்தை கையிலெடுக்கும் பலருக்கும் இப்படியான கிறுக்கு பிடிக்கும்தான் என்றாலும் இவர் கொஞ்சம் ஓவர்டோஸ்!! இத்தனைக்கும் பல மொழிகளில் புலமை, தேர்ந்த போர் வீரர், மருத்துவர், வானவியல் என நூலகத்தில் இருக்கும் எல்லா புத்தகங்களையும் இஞ்சி போட்டுக் கரைத்து ஒரே மிடக்கில் குடித்த ஆசாமி. சொல்ல மறந்துவிட்டேனே நம்மாளுக்கு கவிதை எல்லாம் அத்துப்படி. அப்பறம் என்னதான் பிரச்சனை? கோபம். மகா கோபம். பெருங்கோபம்.
காமெடி என்னும் கண்டம்!!
மாமன்னர் முகமது பின் துக்ளக்கிற்கு நகைச்சுவை நரம்பே கிடையாது. சபைகளில் கேளிக்கை செய்யும் கலைஞர்களை உள்ளேயே அனுமதிக்கமாட்டார். சோகமான க்ளைமேக்ஸ் கொண்ட கதைகளை சொன்னால் முடிந்தது கதை. கற்பனை கதைகளுக்கும் அதே கதி தான். மொத்தத்தில் கவிஞர்களின் நிலைமை முகமது பின் துக்ளக்கின் ரொம்பவே மோசம்.
அதிரடி மன்னன்
முகமது பின் துக்ளக் ஒரு “இப்போ ராமசாமி” தான் (ரஜினி நடித்த பாபா படம் நினைவிருக்கிறதா?) என்பதற்கு பல சாட்சியங்கள் உள்ளன. நினைத்ததை நினைத்த வேகத்தில் செயல்படுத்த நினைக்கும் மன்னரின் இந்த குணம் பலரைக் காவு வாங்கியிருக்கிறது. தெற்கே ஹோய்சாலர்களின் கை ஓங்கிய நேரம், வங்காளத்திலும் அரசருக்கு எதிராக போர்க்கொடிகள் தென்படத் தொடங்கியது. தமிழகத்தில் சுதந்திர பிரகடனம் செய்யப்பட்டது. இத்தனை கலவர மேகங்கள் சூழ்ந்த வேளையில் மன்னருக்கு என்ன தோன்றியது தெரியுமா?
இமயமலையைக் கடந்து சீனாவை கைப்பற்றிவிட்டால்? இந்த உள்ளூர் எதிரிகளை சுலபமாக சமாளித்துவிடலாம் என அரசவையில் சொல்ல “திக்” என்றிருக்கிறது மந்திரிகளுக்கு. வேண்டாம் என்றால் தலை தப்பாது. சரி என்றால் வீரர்கள் கதி அதோ கதிதான். இருந்தாலும் “அருமையான யோசனை மன்னா” என்றார்கள் அனைவரும் தங்கள் தலையைத் தொட்டுப்பார்த்துக்கொண்டே. விளைவு? லட்சக்கணக்கான வீரர்கள் இமயமலையைக் கடக்கும் விபரீதத்தில் உயிரை விட்டார்கள். அதிலும் பிழைத்து ஊர் திரும்பிய வீரர்களை கோபத்தில் கொன்று தீர்த்தார் அரசர். இப்படியாக சீன படையெடுப்பு தோல்வியில் முடிவடைந்தது.
ஆனால் அரசர் அசரவில்லை. இந்தியா முழுவதையும் என் கைகளுக்குள் கொண்டுவரவேண்டும் என முழங்கினார். இதற்காக தனியாக பிரம்மாண்ட படை ஒன்றைத் தயார் செய்யுங்கள் என மந்திரிகளுக்கு உத்தரவிட்டார். ஒன்று இரண்டில்லை சுமார் நான்கு லட்சம் குதிரைகள் கொண்ட படை!! இத்தனை பெரிய படையை உருவாக்க அதிக செலவாகும் என கைகளைப் பிசைந்தவாறே தன பண்டாரம் சொல்ல,” சரி இன்றிலிருந்து வரியை அதிகமாக்குங்கள்” என ஒரே போடாகப் போட்டார் மன்னர். இது மக்களிடையே பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. பணக்காரர்கள், மத்திய தர வர்க்கத்திற்கு வந்தார்கள். ஏழைகள் இன்னும் ஏழைகள் ஆனார்கள். விவசாயம் படுத்தது. அரசாங்க குதிரை இதனால் ஆட்டம்காண ஆரம்பித்தபோது இந்தத் திட்டமும் வாபஸ் வாங்கப்பட்டிருக்கிறது.
இப்படியான அவசர முடிவுகளுக்கெல்லாம் கிரீடம் வைத்தாற்போல் ஒரு யோசனை மன்னருக்குள் உதித்தது. டெல்லிக்கு ஏழரை பிடித்த தருணம் அது. படையெடுப்புகள், பஞ்சம் என அடிக்கடி தொல்லைகள் வருதற்கு காரணம் டெல்லி தான். இந்தியாவை ஆள வேண்டுமானால் இந்தியாவிற்கு நடுவே நம் அரசு இருக்க வேண்டும். அதனால் தர்பாரை தேவகிரிக்கு மாற்றுங்கள் என உத்தரவிட்டார். (தேவகிரி இன்றைய ஹைதராபாத் பகுதியில் இருந்தது) மக்கள் அனைவரும் புதிய தலைநகருக்கு வந்தாக வேண்டும் என்ற கட்டளையும் பிறப்பிக்கப்பட்டது. டெல்லியிலிருந்து கிட்டத்தட்ட ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இருந்த தேவகிரிக்கு மக்கள் பொடி நடையாக நடக்கத் தொடங்கினர்.
பசி, குளிர் மற்றும் இயற்கை உபாதைகள் ஆகிய காரணங்களால் மக்கள் சாலையிலேயே செத்து விழத்தொடங்கினர். டெல்லியிலிருந்து கிளம்பிய மக்கள் கூட்டம் தேவகிரிக்கு வந்துசேர ஒரு மாதத்திற்கும் மேலானது. இதற்குள் தன் தவறை உணர்ந்திருந்தார் மன்னர். சோர்வும், நோயும் பீடித்த மக்களை நோக்கிப் பேசினார் அரசர். தேவகிரிக்கு தலைநகரை மாற்றும் முடிவை அரசு கைவிடுகிறது. மீண்டும் டெல்லியே நமது தலைநகராக செயல்படும். ஆகவே “மக்கள் அனைவரும் டெல்லிக்குத் திரும்புங்கள்” என அறிவித்தார். மக்கள் கதறியழுகத் தொடங்கினர்.

காகிதக் கப்பல்
சீனாவில் நாணய முறையில் மாற்றம் கொண்டுவந்துவிட்டது பற்றி மன்னர் தெரிந்து கொண்டதுமே அவசர கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. “பெரிய தலைகள்” அனைத்தும் இக்கூட்டத்திற்கு கட்டாயம் வரவேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. மன்னரின் மண்டைக்குள் இருக்கும் யோசனை என்னவென்று தெரியாமல் குழப்பத்திலும், பயத்திலும் அரசர் முன் குழுமியிருந்தனர் அதிகாரிகள். துக்ளக் சாம்ராஜ்யம் முழுவதும் இனி புதிய நாணயங்கள் அறிமுகம் செய்யப்படும் என அரசர் அறிவித்தார். அப்படியென்றால் அதுவரை என்ன நாணயம் இருந்தது?
பொதுவாகவே முந்தய காலகட்டத்தில் வெள்ளி மற்றும் தங்கம் பணமாக பயன்படுத்தப்பட்டது. பத்து வெள்ளி என்றால் பத்து கிராம் மதிப்புள்ள வெள்ளி அந்த நாணயத்தில் இருக்கும். ஆனால் முகமது பின் துக்ளக் கொண்டுவந்தது தற்போதைய பணம் போன்றது. செம்பினால் செய்யப்பட்ட நாணயங்களில் அதன் மதிப்பு பொறிக்கப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் எல்லாம் சரியாகத்தான் போனது. ஆனால் சில மாதங்களில் கள்ளப்பணம் சந்தையில் பெருகியது. குடிசைத் தொழிலாக நாணயங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் வணிகர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். கள்ளப்பணம் கஜானாவை நிரப்பியது. வழக்கம்போல கடைசியாக இந்தப் பணத்தை விட்டொழியுங்கள் என மன்னர் உத்தரவிட்டார்.
கொடூர மனம்
தனக்குப் பிடிக்கவில்லையா? கொன்றுவிடுவார் மன்னர். இதற்கு வயது வரம்போ, படித்தவர்கள், பணக்காரன் என்ற பாகுபாடோ கிடையாது. எப்படி கொல்லப்போகிறார்கள்? என்பது மட்டுமே வித்தியாசம். இதற்கும் ஒரு சாட்சி சொல்கிறேன். ஒரு முறை துக்ளக் சாம்ராஜ்யத்தில் அங்கமாக இருந்த குல்பர்காவின் ஆளுநர் பஹாவுதீன் வரி கட்ட மறுத்துவிட்டார். உடனடியாக அரசரின் படைகள் பஹாவுதீனின் அரண்மனையை முற்றுகையிட்டு மொத்த அரச குடும்பத்தையும் சிறை பிடித்து டெல்லிக்கு அழைத்துச்சென்றது.
அரசர் முன் நின்றிருந்த பஹவுதீனின் உடல் சாட்டையால் அடிக்கப்பட்டு தோல் உரிக்கப்பட்டது. இதனைப்பார்க்க வேண்டும் என பஹாவுதீனின் குடும்பம் கட்டாயப்படுத்தப்பட்டது. தன் மனைவி மற்றும் குழந்தைகள் முன்னிலையில் சவுக்கால் அடிபட்டே இறந்தார் பஹாவுதீன். ஆனாலும் முகமது பின் துக்ளக்கின் கோபம் தணியவில்லை. அடுத்த உத்தரவை பிறப்பித்தார். இந்திய வரலாற்றிலேயே ஏன் உலக வரலாற்றிலேயே இத்தனை கொடூர தண்டனையை யாரும் வழங்கியிருக்க முடியாது. இறந்த பஹாவுதீனின் உடலை பெரிய எண்ணெய் சட்டியில் இட்டு, அதனை அவருடைய மனைவி குழந்தைகளை உண்ணச் செய்திருக்கிறார். இத்தனைக்கும் பஹாவுதீன் முகமது பின் துக்ளக்கிற்கு நெருங்கிய சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை மூர்க்கத்தனமான எண்ணங்களும், முட்டாள் தனமும் நிரம்பிய அரசர் முகமது பின் துக்ளக் இறந்தற்கு மீன் தான் காரணம் என்றால் ஆச்சர்யப்படுவீர்கள். தெற்கே படையெடுத்துச் சென்றபோது மன்னர் கூடாரம் அமைத்துத் தங்கியிருக்கிறார். அருகே இருந்த ஏரியில் மீன்கள் பிடிக்கப்பட்டு சமையல் செய்திருக்கிறார்கள். இதனை உண்ட மன்னருக்கு கடும் காய்ச்சல் பீடித்துக்கொண்டது. கை பிடித்துப் பார்த்த வைத்தியர்களுக்கும் காரணம் புரியவில்லை. அத்தோடு பயணம் செய்த முகமது பின் துக்ளக் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இறுதியாக கி.பி. 1351 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் இரவில் மன்னர் இறந்துபோனார். மொத்த இந்தியாவையும் பதறச் செய்த முகமது பின் துக்ளக்கின் மோசமான ஆட்சி அத்தோடு நிறைவு பெற்றது. டெல்லி மக்கள் இனிப்புகள் வழங்கி இந்த இரவைக் கொண்டாடினார்கள்.