டி20 போட்டிகள் கோலோச்சும் இந்தக்காலத்தில் காலத்தட்டை திருப்பிச்சுற்றி டெஸ்ட் போட்டிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக உலகக்கோப்பை ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம். கிரிக்கெட்டின் ஆதி வாசனை நிரம்பிய, மாபெரும் தோள் வலிமையும், தளராத தன்னம்பிக்கையும் வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் தான் வீரர்களின் உண்மையான திறமை ஒளிந்திருக்கிறது. லிமிடட் ஓவர் போட்டிகளைப் பொறுத்தவரை ஒரு தவறான ஓவர் அல்லது பந்து உங்களின் கைகளில் வெற்றியின் மலரை வைக்கலாம். அல்லது தோல்வியின் இருட்கதவை திறக்கலாம். ஆனால் டெஸ்ட் போட்டியின் வெற்றி என்பது ஐந்து நாள் தவம். ஒவ்வொரு நொடியையும் வெற்றியின் வருகைக்காக புதிய திட்டங்களுக்காக செலவிட வேண்டும். இதனையெல்லாம் கருத்தில்கொண்டே ஐசிசி இந்த உலகக்கோப்பை டெஸ்ட் தொடரை அறிவித்திருக்கிறது.

எப்படி நடைபெறும்?
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் 9 இடங்களில் உள்ள அணிகளான இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டிஸ், பங்களாதேஷ் அணிகள் இந்த தொடரில் மோதுகின்றன. ஆகஸ்ட் 2019 முதல் ஜீலை 2021 வரை தலா 6 டெஸ்ட் தொடர்களில் ஒவ்வொரு அணியும் பங்கேற்கும். இதில் 3 டெஸ்ட் தொடர்கள் சொந்த மண்ணிலும் மற்ற 3 டெஸ்ட் தொடர்கள் அந்நிய மண்ணிலும் நடைபெறும். இதற்கான அட்டவணைகளை ஏற்கனவே ஐசிசி வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு டெஸ்ட் தொடரிலும் அந்த இரு அணிகளும் விளையாடும் போட்டிகளின் எண்ணிக்கையை வைத்து வெல்லும் அணிக்கு அதிகபட்சமாக 120 புள்ளிகள் வழங்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது. இதன்மூலம் டெஸ்ட் சேம்பியன்ஷிப் முடிவில் அதிகபட்சமாக 720 புள்ளிகளை வெல்லும் அணி முன்னிலை பெறும். அதிக புள்ளிகளுடன் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டியில் முதல் இரண்டு இடம்பிடித்த அணிகள் பலப்பரீட்சை நடத்தும். டெஸ்ட் சேம்பியன்ஷிப் தொடர் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடரில் இருந்து துவங்குகிறது. வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி இரு அணிகளும் களம் காண்கின்றன.
புள்ளிகள் வழங்கப்படும் விதம்
ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கும் 120 புள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு தொடரில் அணிகள் 2 டெஸ்ட் போட்டியில் மோதி ஒன்றில் வெற்றி பெற்றால் 60 புள்ளிகள் , போட்டி சமனில் முடிந்தால் 30 புள்ளிகள், முடிவு இல்லை என்றால் 20 புள்ளிகள் வழங்கப்படும். அதேசமயம் ஒரு தொடரில் அணிகள் 3 டெஸ்ட் போட்டியில் மோதி ஒன்றில் வெற்றி பெற்றால் 40 புள்ளிகள், போட்டி சமனில் முடிந்தால் 20 புள்ளிகள், முடிவு இல்லை என்றால் 13.3 புள்ளிகள் வழங்கப்படும்.

இந்தியா பங்கேற்க இருக்கும் தொடர்கள்
ஜீலை – ஆகஸ்ட் 2019: இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் (மே.இ.தீவுகளில் நடைபெறுகிறது) இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்.
அக்டோபர் – நவம்பர் 2019: இந்தியா – தென்னாப்பிரிக்கா (இந்தியாவில் நடைபெறுகிறது) 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்.
நவம்பர் 2019: இந்தியா – வங்கதேசம் (இந்தியாவில் நடைபெறுகிறது) இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்.
பிப்ரவரி 2020: இந்தியா – நியூசிலாந்து (நியூசிலாந்தில் நடைபெறுகிறது) 2 டெஸ்ட் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்.
டிசம்பர் 2020: இந்தியா – ஆஸ்திரேலியா (ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது) 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்.
ஜனவரி – பிப்ரவரி 2021: இந்தியா – இங்கிலாந்து (இந்தியாவில் நடைபெறுகிறது) 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்.