ஒருகாலத்தில் கிரிக்கெட் ஜாம்பவான்களாக இருந்த அணிகளையெல்லாம் மிரட்டிப்பார்த்த அணி ஜிம்பாப்வே. ஆப்பிரிக்காவின் ஒரு குட்டி தேசத்தில் இருந்து திரண்ட இளைஞர் பட்டாளமாக இருந்த அணி. இப்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறிய கதையாக இருந்த இடம் தெரியாமல் போனது. ICC நடத்தும் சர்வதேச போட்டிகளில் பங்குபெற நடத்தப்படும் தகுதிச்சுற்று ஆட்டங்களில் கூட அந்த அணிக்கு தோல்வியே கிடைக்கிறது. இதற்கு மிக மக்கிய காரணமாக சொல்லப்படுவது ஜிம்பாப்வே அரசின் தலையீடு. இதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்கனவே கண்டித்திருந்தாலும், ஜிம்பாப்வே அரசு கேட்பதாகத் தெரியவில்லை.

இதனால் அந்த அணியை தடை செய்வதாக அறிவித்துள்ளது ஐசிசி. ஜிம்பாவே கிரிக்கெட் வாரியத்தில் இருக்கும் அரசின் தலையீட்டின் காரணமாகத்தான் இந்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும் அந்த கிரிக்கெட்டிற்கு அளித்துவந்த நிதியையும் நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. இந்த தடையின் காரணமாக ஜிம்பாப்வே அணியால் இனி ஐசிசி நடத்தும் போட்டிகளில் பங்கேற்க முடியாது. இதனிடையே அந்த அணி வீரர்கள் சமூக வலைத்தளங்களில் ஐசிசியின் இந்த முடிவிற்கு வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ஜிம்பாப்வே அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியுடன் தோல்வி தழுவி 2019 உலகக்கோப்பைக்குத் தகுதி பெற முடியாமல் போன போது ஏற்பட்ட வேதனையை விட இது பயங்கரமானது என்கின்றனர் ஜிம்பாப்வே வீரர்கள்.

அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா,” அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் கடும் மன உளைச்சலில் இருக்கின்றனர். எல்லோருடைய வார்த்தைகளிலும் மன விரக்தியும், சோகமும் மிகுந்து காணப்படுகிறது என்றார். இதனிடையே தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ராசா,” ஜிம்பாப்வே அணியில் இருக்கும் வீரர்களின் சர்வதேச கிரிக்கெட் கனவு இத்தனை சீக்கிரம் பொய்த்துப்போகும் என எதிர்பார்க்கவில்லை. எங்களால் இதை ஜீரணிக்க முடியவில்லை. இந்த அதிர்ச்சியிலிருந்து வெளியேற பலகாலம் ஆகும்” என்றார்.