நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசிக்கும்போது “எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பிற்கு வரி கிடையாது” என்று அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். அந்த வார்த்தையினால் பலன்பெற இருக்கிறது ஹூண்டாய் நிறுவனம். தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், கோனா எஸ்யுவி என்னும் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு இறக்கியிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவின் பவர்பஃபுல் எலெக்ட்ரிக் கார் என்றால் அது ஹூண்டாயின் இந்த கோனா எஸ்யூவி தான்.

கடந்த ஆண்டு தென்கொரிய சந்தையை தெரிக்க விட்ட இந்தக்காருக்கு வட அமெரிக்க சிறந்த எஸ்யூவி காருக்கான விருது வழங்கப்பட்டது. எலெக்ட்ரிக் கார்கள் தயாரிப்பிற்கு இந்திய அரசு வரி விலக்கு அளிப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள இந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
என்ன ஸ்பெஷல்?
பேட்டரி மூலம் இயங்கும் இந்தக்கார் 0-100 கிலோமீட்டர் வேகத்தை 9.7 வினாடியில் எட்டும் ஆற்றல் படைத்தது. ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 452 கிலோமீட்டர் (281 மைல்கள்) வரை இதில் பயணிக்கலாம். வெறும் 57 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 80 சதவிகிதம் பேட்டரி நிரம்பிவிடும். அதோடு சார்ஜ் செய்வதற்கான வசதியை வாடிக்கையாளர்களின் வீடுகளில் ஏற்படுத்தித்தர ஹூண்டாய் நிறுவனம் முன்வந்துள்ளது. மேலும் எலெக்ட்ரிக் சார்ஜிங் சென்டர்களை நியூ டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் பெற்றுள்ளது. விலையைப் பொறுத்தவரை 25 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இரண்டாவது
தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் தயாராக இருக்கும் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையும் கோனா எஸ்யூவையே சாரும். முதலாவது இந்தியாவின் மஹிந்திரா நிறுவனம் E20 ப்ளஸ் என்னும் காரை வெளியிட்டு வருகிறது. ஆனால் ஹூண்டாயின் இந்த பிரம்மாண்டத்தோடு ஒப்பிடுகையில் மஹிந்திராவின் E20 சுமார் வகை தான். இதன் அதிகபட்ச வேகமே மணிக்கு 50 கிலோமீட்டர் மட்டுமே. அதேபோல் ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் இந்தக்காரால் அதிகபட்சமாக 87 கிலோமீட்டர்தான் பயணிக்க முடியும். ஆகவே ஹூண்டாயின் கோனா எஸ்யூவி தான் தற்போதைக்கு இந்தியாவின் சக்திவாய்ந்த கார்.