ஹோமி ஜஹாங்கிர் பாபா அவர்கள் ஒரு இயற்பியல் விஞ்ஞானி. இந்தியாவின் அணுசக்தி துறைக்கு வித்திட்டவர். இந்திய அணுசக்தி ஆராய்ச்சியின் தந்தை. அணு வெடிப்பு, ஐசோடோப்புகளின் உற்பத்தி, யுரேனியத்தை சுத்திகரித்தல் ஆகியவை குறித்து முதன் முதலாக இந்தியாவில் ஆய்வு செய்தவர். ஐந்து முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்.

பிறப்பும் கல்வியும்
ஹோமி ஜஹாங்கிர் பாபா அவர்கள், 1909 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி மும்பையில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை பெயர் ஜஹாங்கிர் பாபா. அவர் ஒரு பிரபலமான வழக்கறிஞ்சராக இருந்தார்.தாயார் பெயர் மெஹ்ரென். மும்பையில் பள்ளி படிப்பை முடித்த ஹோமி பாபாவிற்கு கணிதம் மற்றும் இயற்பியல் துறையில் அதிக நாட்டம் இருந்தது. இருப்பினும் தந்தையின் விருப்பத்திற்கேற்ப 1927 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்தார். 1930 ஆம் ஆண்டு இயந்திரவியலில் பொறியியல் பட்டம் பெற்றார்.
ஹோமி பாபாவின் முயற்சியால் தான் இந்தியாவில் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்பட்டது!!
ஹோமி பாபா ஆராய்ச்சிகள்
1931ஆம் ஆண்டு முதல் கேவெண்டிஷ் ஆய்வுக்கூடத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்த ஹோமி பாபா, இயற்பியல் துறையில் காமா கதிர்களை குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு அதற்கான அறிக்கையை 1933 ஆம் ஆண்டு சமர்ப்பித்தார். இதன் மூலம் அணு இயற்பியலில் டாக்டர் பட்டம் பெற்றார். அவரின் ஆராய்ச்சி சாதனைக்காக ஐசக் நியூட்டன் படிப்புதவி அவருக்கு கிடைத்தது. இதனால் மேலும் மூன்று ஆண்டுகள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. இந்த சமயத்தில் ஜேம்ஸ் சாட்விக்கின் நியூட்ரான்கள் பற்றிய ஆராய்ச்சி ஹோமி பாபாவிற்கு அணு இயற்பியலில் இன்னும் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது.அதே நேரம் உலகப் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர்களான நீல்ஸ் போர், ஃபெர்மி, பாலி ஆகியோரின் தொடர்பும் அவருக்குக் கிடைத்தது. அவர்களுடைய ஆராய்ச்சியிலும் முக்கிய பங்காற்றிய ஹோமி பாபா 1935 ஆம் ஆண்டு எலெக்ட்ரான் பாசிட்ரான் சிதறல் குறித்த தனது கணக்கீடுகளை வெளியிட்டார். அவரது இந்த ஆராய்ச்சியை பெருமை படுத்தும் விதமாக பிற்காலத்தில் இந்த துறை Bhabha scattering என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1937ஆம் ஆண்டு ஹோமி பாபா, வால்டர் ஹைட்லர் என்ற ஜெர்மனிய இயற்பியலாளருடன் இணைந்து அண்டக்கதிர் பற்றிய ஆராய்ச்சிகள் செய்தார். இதன் மூலம் மீசான் என்ற அடிப்படை துகளையும் கண்டறிந்தார். 1937ல் அவர் எழுதிய Cascade Theory of Electron Showers என்ற ஆய்வுக் கட்டுரை அவருக்கு உலகப் புகழைச் சேர்த்தது.ஹோமி பாபா 1932 முதல் 1954 வரை 22 ஆண்டுகளில் சுமார் ஐம்பது ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். குவாண்டம் கோட்பாடு உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் ஹோமி பாபா.
இந்திய அணு ஆராய்ச்சி
1939 ஆம் ஆண்டு மீண்டும் இந்தியா திரும்பிய ஹோமி பாபா 1940 ஆம் ஆண்டு பெங்களூரில் சர்.சி.வி.ராமன் தலைமையில் இருந்த இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்தில் பணியாற்றினார். விஞ்ஞான முன்னேற்றமே இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்று நம்பி அதற்காகக் கடுமையாக உழைத்தார். ஹோமி பாபாவின் முயற்சியால் இந்தியாவின் முதல் அணுசக்தி மையமான டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் 1945 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
ஆசியாவின் முதல் அணு உலை மும்பையில் இயக்கப்பட்டதற்கு வழி செய்தவர் ஹோமி பாபா!!
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, அணு ஆற்றலின் முக்கியத்துவத்தை இந்திய அரசுக்கு விளக்கினார். அப்போதைய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவும் ஹோமி பாபாவின் திறமையை புரிந்துகொண்டு அவருக்கு ஆராய்ச்சிகள் செய்ய முழு அனுமதி அளித்தார். இதன் மூலம் ஹோமி பாபா இந்திய அணுசக்தி துறையை மேம்படுத்தினார். 1948 ஆம் ஆண்டு இந்திய அணு ஆற்றல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டு அதன் முதல் தலைவராக ஹோமி பாபா பொறுப்பேற்றார். இது 1967 ஆம் ஆண்டு பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அவரது தெளிவான திறமையான வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவிப்பினால் ஆசியாவின் முதல் அணு உலை மும்பையில் உள்ள டிராம்பேயில் 1956 ஆம் ஆண்டு இயக்கப்பட்டது.
அணு ஆயுத தயாரிப்பு குறித்து முதல் முறையாக ஆக்கப்பூர்வமாகவும், அமைதியாகவும் ஜெனிவாவில் நடந்த ஐ.நா மாநாட்டில் விளக்கினார். அணு ஆயுதத்தை அமைதிப்பணிக்காகவும் பயன்படுத்தலாம் என எடுத்துரைத்தார். தொடர்ந்து அணுகுண்டு வெடிப்பு சோதனைக்கான ஆரம்பக்கட்ட முயற்சிகளை இந்தியாவில் பல விஞ்ஞானிகளின் துணையுடன் மேற்கொண்டார். விக்ரம் சாராபாயுடன் இணைந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்திலும் பணியாற்றினார்.
இறப்பு
1966 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி ஒரு சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்று கொண்டிருந்த போது அவர் பயணித்த விமானம் சுவிட்சர்லாந்து பகுதியில் விழுந்து நொறுங்கியதில் ஹோமி பாபா அகால மரணமடைந்தார்.

ஹோமி பாபா சிறப்புகள்
இன்று இந்தியாவில் இருக்கும் பல அணு உலைகள், அணு ஆற்றல் நிலையங்கள் எல்லாம் இவர் முயற்சியால் தோன்றியவையே. இந்தியா அணு ஆற்றலிலும், அணு ஆயுத சோதனையிலும் சிறந்து விளங்க வித்திட்டவர் ஹோமி பாபா. 1974 ஆம் ஆண்டு பொக்ரான் முதல் அணுசக்திச் சோதனையின் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனாவைத் தொடர்ந்து உலகளவில் அணு ஆயுத சோதனையில் ஆறாவது நாடாக இடம் பெற்று இந்தியா உயர்ந்ததற்கு அடிப்படை காரணம் ஹோமி பாபா ஆரம்பித்து வளர்த்த கண்டுபிடிப்புகளும் ஆராய்ச்சி முயற்சிகளும் தான். அவரின் ஈடு இணையற்ற திறமையை பாராட்டி இந்திய அரசு 1954 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது அளித்து சிறப்பித்தது. இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டார் ஹோமி பாபா. 1941 ஆம் ஆண்டு மெம்பர் ஆஃப் ராயல் சொஸைட்டி விருதும், 1942 ஆம் ஆண்டு ஆடம்ஸ் விருதும் பெற்றார்.
அக்டோபர் 30 – தன் வாழ்நாள் முழுவதையும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கே அர்ப்பணித்து, நம் இந்திய நாட்டில் விஞ்ஞான முன்னேற்றத்தை ஏற்படுத்திய டாக்டர் ஹோமி பாபாவின் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடுவதில் பெருமை கொள்கிறது நியோதமிழ்!