நார்வேயில் இருந்து உணவு கிடைக்காமல் நரி ஒன்று தனியாக கனடா வரை பயணித்திருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 76 நாட்கள் தொடர்ச்சியாக பயணித்து 3506 கிலோமீட்டர் தூரத்தை அந்த நரி கடந்துள்ளது. இதற்கு மிகமுக்கிய காரணம் எது தெரியுமா? காலநிலை மாற்றம் தான். எப்படி என்கிறீர்களா? விரிவாக பார்க்கலாம்.

நார்வேயில் இருக்கிறது போலார் இன்ஸ்டிட்யூட் என்னும் ஆராய்ச்சி நிறுவனம். சென்ற வருடம் மார்ச் மாதம் இங்குள்ள ஷ்வல்பார்டு தீவில் நரி ஒன்றின் மீது GPS ட்ராக்கிங் சாதனம் ஒன்றைப்பொருத்தி சுதந்திரமாக விட்டிருக்கின்றனர். போதுமான உணவு கிடைக்காமல் அந்த நரி மேற்கு திசையில் பயணித்திருக்கிறது. நாட்கள் ஆக ஆக அதன் வேகம் அதிகரித்திருக்கிறது. ஒரு நாளைக்கு சுமார் 46 கி.மீ தூரம் பயணித்திருக்கிறது இந்த நரி. சில நாள்களில், 150 கி.மீ தூரத்துக்கும் மேல் பயணித்திருக்கிறது. யாரோ நரியை படகில் எடுத்துச் செல்கிறார்கள் என ஆராய்ச்சியாளர்கள் முதலில் நினைக்கும் அளவிற்கு இருந்திருக்கிறது நரியின் வேகம். ஆனால் அந்தப்பகுதியில் படகுகளே இல்லாதது பின்னர் தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து போலார் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான ஈவா பியூலி (Eva Fuglei) இதுகுறித்து பேசும்போது, “பொதுவாக இப்பகுதியில் கோடைக்காலத்தில் விலங்குகளுக்கு உணவுத்தட்டுப்பாடு இருப்பதில்லை. ஆனால் பனிக்காலம் மிகுந்த சிரமங்களை ஏற்படுத்தி விடுகிறது. இதன் காரணமாகவே இந்த நரி இதுவரை தனது வாழ்நாளில் பார்த்தேயிராத இடங்களுக்கு பயணித்திருக்கிறது” என்றார்.

இந்த நரிகளின் பயணம் பாதிப்படைந்ததற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது, உருகிவரும் ஆர்க்டிக் பனி தான். இதனால் பனிக்காலத்தில் உணவு அதிகம் கிடைக்கும் ஐஸ்லாந்து பக்கம் பயணிக்க முடியாமல் தவிக்கின்றன இந்த நரிகள். இது இப்படியே சென்றால், பனிக்காலத்தில் ஷ்வல்பார்டு தீவு தனித்துவிடப்படும், இதனால் உணவுக்கு வழி இருக்காது என்பது நிதர்சனம். இந்தப் பெண்நரியைப் பொறுத்தவரை, சில மாதங்களுக்கு முன் ட்ராக்கர் செயல்பாடு நின்றுள்ளதால், கனடாவில் அது எந்த மாதிரியான சவால்களைச் சந்திக்கப்போகிறது என யாருக்கும் தெரியாது. ஆனால், உணவுப்பழக்கம் தொடங்கி பல விஷயங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்தால் மட்டுமே அதனால் அங்கு உயிர்பிழைக்க முடியும் என்கின்றனர் இந்த ஆராய்ச்சியாளர்கள்.