யானைகளில் ஆப்பிரிக்க யானைகளுக்கென்று பல விசேஷ குணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் அதன் பிரம்மாண்ட தந்தம். ஆசிய யானைகளுக்கு ஆண் இனத்திற்கு மட்டுமே தந்தங்கள் உண்டு. ஆனால் ஆண் – பெண் என்ற பாகுபாடெல்லாம் ஆப்பிரிக்காவில் கிடையாது. இரண்டு இனங்களுக்குமே தந்தம் உண்டு. அந்தப்பெருமை தான் அதன் உயிர்களுக்கே ஆபத்தாக முடிந்துவிடுகிறது. ஆப்பிரிக்காவின் கபான், கேமரூன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளில் ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை அதிகம். சமீப காலமாக யானை வேட்டையை சில ஆப்பிரிக்க நாடுகள் அங்கீகரித்திருப்பது யானை வேட்டையை எளிதாக்கியிருக்கிறது.

அதிரவைத்த புகைப்படம்
போட்ஸ்வானா நாட்டில் தந்தம் கடத்தப்படுவது குறித்து ஆவணப்படம் எடுக்க வந்த ஜஸ்டின் சுலிவென் (Justin Sullivan) என்பவர் எடுத்த இப்புகைப்படம் உலகமெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அருகிலிருந்த காட்டுப்பகுதியில் யானைகள் வேட்டையாடப்படும் என வனக் காவலர்கள் தெரிவிக்கவே டிரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேட்டையாடப்பட்ட யானையின் சடலத்தை புகைப்படம் எடுத்துள்ளார் சுலிவென்.

யானை ஒருபுறமும், அதன் வெட்டப்பட்ட தும்பிக்கை மற்றொருபுறமும் கிடந்தது. நான்கு வளர்ந்த இந்த யானையின் தும்பிக்கையை ரம்பம் கொண்டு அறுத்து எடுப்பார்கள் என வனக்காவலர்கள் சொல்வதைக் கேட்கவே கஷ்டமாக இருந்தது என்றார் சுலிவென். ஆண்ட்ரி ஸ்டெனின் சர்வதேச பத்திரிகை புகைப்படப் போட்டியில் (Andrei Stenin International Press Photo) கலந்துகொள்ள இந்த யானையின் புகைப்படம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

பொதுவாக ஆப்பிரிக்க யானைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று ஆப்பிரிக்க புதர் யானைகள். மற்றொன்று ஆப்பிரிக்க காட்டு யானை. இதில் ஆப்பிரிக்க புதர் யானைகள் தான் தரையில் வாழும் உயிரினங்களிலேயே மிகப்பெரியதாகும். 12 அடி சராசரி உயரமும், 7 டன் எடையும் கொண்ட இந்த யானைகளை வேட்டையாட தடைவிதிக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு தந்தம் விற்பனைக்கு சர்வதேச அளவில் தடை விதிக்கப்பட்டாலும், கடந்த பத்தாண்டுகளில் 7 லட்சம் யானைகள் தந்தங்களுக்காக கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறது ஒரு ஆய்வு. தற்போதைய நிலையில் 2 ஆயிரம் ஆப்பிரிக்க புதர் யானைகள் மட்டுமே இருக்கின்றன. இந்த நிலை நீடித்தால் அடுத்த தலைமுறைக்கு நாம் ஆப்பிரிக்க யானைகளை இணையத்தில் மட்டுமே காண்பிக்க முடியும்.