உலகளவில் பெரும் உயிரிழப்புகளையும், கட்டுப்படுத்தமுடியாத பரவலையும் கொண்டிருக்கும் சில நோய்களை உலக சுகாதார நிறுவனம் உலகப் பெருநோயாக அறிவிப்பது வழக்கம். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை கண்ணீரிலும், வலியிலும், துயரத்திலும் ஆழ்த்திய எபோலா நோய் இன்னும் அங்கே முழுமையாக அகற்றப்படவில்லை. காங்கோ குடியரசில் மட்டும் இந்நோய் பாதிப்பால் 1,600 மக்கள் இறந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்காவில் 2014 – 2016 ஆம் ஆண்டுகாலத்தில் இந்நோயினால் இறந்த மக்களின் எண்ணிக்கை 11,000 ஆகும்.

கடந்தவாரம் உலக சுகாதார மையத்தின் ஆண்டு ஆய்வுக்கூட்டம் ஜெனிவாவில் நடைபெற்றது. இம்மாநாட்டில் காங்கோ குடியரசில் பரவிவரும் எபோலாவை சர்வதேச அளவில் தனிக்கவனம் செலுத்தவேண்டிய நோயாக அறிவிக்க திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மேலும், மாதக்கணக்காக மூடப்பட்டிருக்கும் பல ஆப்பிரிக்க நாடுகளின் எல்லைகளைத் திறக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நோயின் வீச்சைத் தடுக்க போதுமான நிதி இல்லாமல் சுகாதார நிர்வாகம் திண்டாடி வருகிறது. இதனை ஈடுகட்ட வசதிமிக்க தொழிலதிபர்களிடம் நிதியுதவி வேண்டுவதாக அமைப்பு அறிவித்துள்ளது.
ஆப்பிரிக்காவில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர 98 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என கணக்கிடப்பட்டாலும், சுகாதார நிர்வாகத்திடம் 54 மில்லியன் டாலர்களை வைத்து தடுமாறுகிறது. இதனால் வசதிபடைத்தவர்களின் உதவியைக் கோரியிருக்கிறது நிர்வாகம்.

எபோலா என்ன செய்யும்?
எபோலோ நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துவக்கத்தில் திடீர் காய்ச்சல், தசை வலி மற்றும் தொண்டை வறண்டு போதல் ஆகியவை ஏற்படும். உடனடி சிகிச்சைகள் எடுக்கப்படாவிட்டால் டயரியா, இரத்த வாந்தி மற்றும் உடம்பிலிருந்து துவாரங்கள் வழியாக ரத்தம் வெளியேறத் தொடங்கும். இந்நோய் பாதிக்கப்பட்டவர்களின் சுவாசம், எச்சில் மற்றும் ரத்தம் போன்றவற்றின் மூலம் எபோலா பரவுகிறது. காற்றில் வெகுவேகமாக பரவும் தன்மை கொண்டதால் மிகக்குறைந்த நேரத்தில் ஏராளமான மக்களின் இறப்பிற்கு எபோலா காரணமாக அமைகிறது. இதனைத் தடுக்கவே உலக சுகாதார மையம் கடுமையாகப் போராடி வருகிறது.