இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி நடப்பு உலககோப்பை தொடருக்குப் பிறகு ஓய்வு பெறுவார் என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தோனி மீது சமீப போட்டிகளில் வைக்கப்பட்ட விமர்சனங்கள் காரணமாக இருக்கும் என சமூக வலைதளங்களில் மக்கள் விவாதித்துகொண்டிருக்கின்றனர்.

தோனியை இந்தியாவின் ரட்சகன் என்றே சொல்லலாம். கங்குலிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியை மிகத்திறம்பட வழிநடத்தியவர் என்றால் சந்தேகமே இல்லாமல் தோனி தான். உள்நாட்டு போட்டிகள் என்றாலும் சரி, ஓவர்சீஸ் போட்டிகள் என்றாலும் சரி பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். தோனி களத்தில் இருக்கும் வரை எந்த இலக்கும் எட்டக்கூடியதே. எப்படியான சிக்கலான சூழ்நிலையிலும் அணிக்கு எது தேவையோ அதைமட்டுமே செய்து கோப்பயை தட்டித்தூக்கும் மனவலிமை தோனிக்கு உண்டு. சர்வதேச போட்டிகள் மட்டுமல்லாமல் ஐ.பி.எல் போட்டிகளில் தோனியின் மாஸ் பல மடங்கு எகிறியது. சென்னை மைதானத்தில் காயின் கூட தோனியின் பேச்சைத்தான் கேட்கும். அப்படி ஒரு வெற்றி விகிதத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றிருக்கிறது.

ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் அல்லவா? சமீப காலங்களில் தோனியின் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. பாண்டியாவிற்கு பின்னால் களமிறங்கும் தோனியால் கடைசி ஓவர்களில் முன்னைப்போல் ரன்குவிக்க முடியவில்லை. குறிப்பாக நடப்பு உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டியில் தோனி பேட்டிங் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி” தோனிக்கு என்ன செய்யவேண்டும் என யாரும் சொல்லித்தரவேண்டியதில்லை. அவர்மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம்” என்றார்.
இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு பிடித்த வீரர்கள் எல்லா மேட்சிலும் சதம் அடிக்கவேண்டும். இல்லையென்றால் வசைபாட ஆரம்பித்துவிடுவார்கள். அந்த வீரருக்கு வயதும் ஆகிவிட்டால் அவ்வளவுதான். சிறிய தடுமாற்றம் கூட அவர்களது ஓய்விற்கான காரணமாக பேசப்படும். கிரிக்கெட்டின் கடவுள் எனப்பட்ட சச்சினையே இப்படி கடைசிக் காலத்தில் சங்கடப்பட வைத்தவர்கள் பலர். அதிலும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்ததிற்கு பின்னர் இதன்வேகம் அதிகரித்திருக்கிறது. அதற்குத்தான் இப்போது தோனியும் இரையாகி இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வாரியமோ அல்லது தோனி தரப்பிலிருந்தோ இதுவரை எந்த தகவலும் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடாத நிலையில் பிடிஐ நிறுவனம் இந்த செய்தியை தனது தளத்தில் பதிவிட்டுள்ளது.