உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா இங்கிலாந்தை எதிர்கொண்டது. மேன்செஸ்டரில் நடந்த இப்போட்டியில் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து வீழ்த்தியிருக்கிறது. இதுவரை உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோற்றதில்லை என்ற சாதனையையும் ஆஸி. இழந்திருக்கிறது. முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆரோன் பிஞ்ச் ரன் எதுவும் எடுக்காமலும், டேவிட் வார்னர் 9 ரன்னிலும், பின்னர் பீட்டர் ஹேன்ட்ஸ்கோம் 4 ரன்னிலும், ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஆஸியைப் பொறுத்தவரை ஓப்பனிங் பேட்ஸ்மேன் இருவரும் நல்ல பார்மில் இருந்தார்கள். இருவரும் அடுத்தடுத்து அவுட்டானது ரசிகர்களை சோகம் கொள்ளச்செய்தது.
பின்னர் ஸ்மித் – கேரி இணைந்தனர். அப்போது ஆர்ச்சர் வீசிய பவுன்சர் கேரியின் தாடையைப் பதம்பார்த்தது. ரத்தம் வழிய தொடர்ந்து பேட்டிங் செய்த கேரி 46 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து ஸ்டோய்னிஸ் ரன் எதுவும் எடுக்காமலும், மேக்ஸ்வெல் 22 ரன்னிலும், கம்மின்ஸ் 6 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.ஸ்மித் மட்டும் தனியாக ஒருபுறம் அதிரடிகாட்டினர். அவருக்கு சிறிது நேரம் ஸ்டார்க் பார்ட்னர்ஷிப் கொடுத்து 28 ரன்கள் எடுத்து அவுட்டாக, மற்ற வீரார்கள் யாரும் நிலைக்கவில்லை. ஸ்மித் 85 எடுத்தார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்களை எடுத்தது. கடைசியில் நாதன் லயன் 5 ரன்னுடன் களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணியில் ஆதில் ரஷித் மற்றும் கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளும், மார்க் வுட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்தின் பேர்ஸ்டோ மற்றும் ஜேசன் ராய் களமிறங்கினர். இந்தியா – நியூசிலாந்து போலவே பவுலிங்கில் ஆஸி. மிரட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிரட்டியது என்னவோ இங்கிலாந்து வீரர்கள் தான். துவக்கம் முதலே பந்தை சிதறடித்தார் ராய். மற்றொரு முனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த பேர்ஸ்டோ 34 ரன்னில் ஆட்டமிழக்க, எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல் ஆடிய ராய் 85 ரன்கள் குவித்தார். அவரும் ஆட்டமிழந்த பின்னர் ரூட் மற்றும் மார்கன் கைகோர்த்தனர். இந்த இணை ஆஸி. பவுலர்களை நோகடித்தது. தொடர் பவுண்டரிகளாக விளாசிய இந்த இணை 32.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் வீழ்த்தி வரலாற்றுச்சிறப்புமிக்க வெற்றியை ருசித்தது இங்கிலாந்து.

இந்த வெற்றிமூலம் ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை சந்திக்கிறது இங்கிலாந்து.