புற்களால் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் கிராம மக்கள் – 600 வருடங்களாக தொடரும் பாரம்பரியம்!!

0
162
bridge 2

பெரு நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் இருக்கிறது கூஸ்கா என்னும் பிராந்தியம். ஸ்பானிஷ் காலனியாதிக்கத்தின் எச்சமாக பார்க்கப்படும் இங்கே தான் இன்கா பேரரசு இயங்கிவந்தது. ஆண்டிஸ் மலைத்தொடரின் அடிவாரத்தில் இருக்கும் இந்த நகரத்தின் வழியே புகழ்பெற்ற அபோரிமாக் நதி ஓடுகிறது. இந்த நதிக்கரையினை ஒட்டித்தான் இன்கா பேரரசு வலிமையுற்றிருந்தது. இந்த நதியின் குறுக்கே தான் 600 வருடங்களாக பாலம் கட்டிவருகிறார்கள் அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள். இதில் ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால் இந்தப்பாலம் முழுவதும் புற்களால் கட்டப்படுகிறது. இதன் தொன்மை கருதி யுனெஸ்கோ அமைப்பு கடந்த 2013ம் ஆண்டு உலக புராதான சின்னமாக இந்தப்பாலத்தை அறிவித்தது.

bridge 3

புதுப்பாலம் 

அப்பகுதிகளில் மட்டுமே விளையும் உயரமான புற்களைக் கொண்டு கயிறு தயாரித்து அதனைக்கொண்டு இந்தப்பாலம் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பழைய பாலம் துண்டிக்கப்பட்டு, புதுப்பாலத்தை அமைக்கிறார்கள் இந்த ஊர் மக்கள். மொத்தம் மூன்றே நாட்கள் மட்டுமே இந்த கட்டுமானப்பணி நடைபெறும். முதல்நாள் ஆண்கள் எல்லாம் கூடி, புற்களால் நெய்யப்பட்ட சிறு கயிறுகள் அனைத்தையும் ஒன்றாக்கி பெரிய கயிறாக மாற்றுவார்கள். இதற்காக ஒவ்வொரு குடும்பமும் கயிற்றை வழங்க வேண்டும். குறிப்பாக பெண்கள் இந்த கயிறு தயாரிக்கும் பணியை மேற்கொள்கிறார்கள்.

Bridge 1

கயிறு உறுதியாக இருக்க இந்தப் புற்களை நன்கு அடித்து, பின் தண்ணீரில் ஊற வைத்து, அதன் பின்னே நெய்வார்கள். இதன்மூலம் அதிக நாட்களுக்கு இந்தப்பாலமானது அதிக நாள் தாங்கும் தன்மை கொண்டதாக மாறுகிறது. இந்த பாலம் கட்டும் பணி நடக்கும் மூன்று தினங்களும் உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டு அங்கேயே சமையல் செய்வார்கள். இந்த பணியில் எந்த நவீன கருவிகளும் பயன்படுத்துவது இல்லை.

bridge 2

ஏற்கனவே இருக்கும் பழைய பாலத்தினை ஆற்றுநீரில் விட்டுவிடுவார்கள். கயிறு எளிதில் மட்கும் என்பதால் அவை ஒவ்வொரு வருடமும் எளிதில் அகற்றப்பட்டு புதுப்பாலம் அமைக்கப்படுகிறது. நவீன அறிவியல் அகன்று கிளை பரப்பி நிற்கும் இவ்வேளையிலும் முழுவதும் இயற்கையை மட்டுமே நம்பி களத்தில் இறங்குகிறார்கள் இம்மக்கள்.