கோசல நாடு விழாக்கோலம் பூண்டிருந்தது. எல்லையிலிருந்து, அரண்மனை வரை மக்கள் கையில் பூக்களோடு நின்றிருந்தார்கள். உலக வரலாற்றைப் புரட்டிப்போட்ட புத்தபகவான் அமைதியின் கனிவு நிரம்பிய கண்களுடன் வருவதைப் பார்த்ததும் மக்கள் மலர்களைத் தூவியும், வாழ்த்தொலிகளாலும் அவரை வரவேற்றனர். எல்லையில்லா பேரன்பு புத்தரின் முகத்தில் நிரம்பியிருந்ததைப் பார்த்த மக்களுக்கு கண்ணீர் கசிந்தது. சாரை சாரையாக புத்தரின் பின்னால் மக்கள் நடக்கத் தொடங்கினர்.

புத்தர் தங்குமிடம் வெண்மையான கற்களால் பதிக்கப்பட்டிருந்தது. அகிலும், சந்தனமும் சுகந்தத்தை எங்கும் பரப்பிக்கொண்டிருந்தது. திரண்டிருந்த மக்கள் கூட்டம் அலையடித்தது. முதன்மைத் தளபதியும், மந்திரியும் வருவதை கட்டியக்காரன் உறுதிப்படுத்தவே கூட்டம் இருவருக்கும் வழிவிட்டு அகன்றது. தனித்தனி ரதத்தில் வந்திறங்கினர் இருவரும். புத்தரின் பயண விசாரிப்புகள் முடிந்ததும், மந்திரியின் முகம் வாடியதைக் கண்டுகொண்டார் புத்தர்.
நான் இவ்வேளையில் வந்திருப்பது உங்களுக்கு ஏதேனும் சங்கடத்தை உருவாக்கியிருக்கிறதா? என புத்தர் கேட்க ஆடிப்போனார்கள் இருவரும். வாழ்வில் ஒருமுறையாவது தங்களைக் காண முடியாதா? என லட்சக்கணக்கான மக்கள் காத்திருக்கிறார்கள். உங்களுடைய விஜயத்திற்கு உண்மையில் கோசலம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்றார் அமைச்சர். பின்னர், தங்களுடைய உள்ளத்தில் இருக்கும் வருத்தம் தான் என்ன என்றார் புத்தர். கைகளைப் பிசைந்தவாறே அமைச்சர் சொல்லத் தொடங்கினார்.
நீங்கள் கோசலத்தின் எந்த மூலைக்கும் எந்தவித முன்னறிவிப்புமின்றி பயணிக்கலாம். ஆனால் வட திசையில் இருக்கும் காட்டிற்குள் எக்காரணம் கொண்டும் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தவே நான் இங்கு வைத்தேன் என முடித்தார். அதற்கான காரணத்தை நான் அறிந்துகொள்ளலாமா? என வார்த்தைகளால் விரட்டினார் புத்தர். தளபதியின் முகம் இருண்டது.
மேற்கண்ட உரையாடல்கள் நிகழ்ந்த அதே வேளையில் காட்டில் கோபத்தில் இருந்தான் அங்குலிமாலா. இந்தப்பெயரை கோசலத்தில் யாருமே உச்சரிக்கக்கூட மாட்டார்கள். அவனது அகன்ற தோளும், அச்சமூட்டக்கூடிய முகவெட்டும் கொண்டிருந்தது மட்டும் இதற்குக்காரணம் அல்ல. ஆரம்பத்தில் பொருட்களை மட்டுமே திருடிய அங்குலிமாலா மனிதர்களின் உயிரையும் பறித்துக்கொள்ள
ஆரம்பித்ததிலிருந்து தான் இந்த பயம் மக்களுக்குள் பரவியது. இருளைக்கண்டாலே மக்கள் அச்சத்தில் தவித்தனர். வியாபாரிகள் கோசலத்திற்குள் வரவே மறுத்தார்கள்.
காட்டிற்கும் மனிதர்களுக்கும் இடையேயான இடைவெளி பயத்தால் நிரப்பப்பட்டது. யார் அந்த அங்குலிமாலா? என்ற ஒரே கேள்விக்கு ஒவ்வொருவரிடத்தும் ஒரு பதில் இருந்தது.

தன் உடல் முழுவதும் மனிதர்களின் விரல்களால் ஆன மாலையை அணியும் வழக்கம் அவனுக்கு இருந்தது. தன்னை எதிர்க்கும் அனைவரின் கட்டை விரலை வெட்டி மாலையில் அதனை சேர்த்துக்கொள்வான். இப்படி 999 கட்டை விரல்கள் அவனது கழுத்தை அலங்கரித்தன. ஆனாலும் கணக்கை ஆயிரமாக்கத் துடித்தன அவனது கைகள். அடுத்து எதிர்ப்படும் யாரையும் வேட்டையாடாமல் விடக்கூடாது என்ற எண்ணத்தில் காட்டிற்குள் அங்குமிங்கும் அலைந்தான். அங்குலிமாலாவைப் பற்றி அனைத்தையும் கேட்டுத்தெரிந்துகொண்ட புத்தர் உடனடியாக அவனை சந்திக்க வேண்டும் எனச் சொல்ல அனைவருக்கும் தலை கிறுகிறுத்துப்போனது. புத்தர் காட்டிற்குச் செல்கிறார் என்ற செய்தி தீப்போல நகருக்குள் பரவியது. எத்தனையோ மக்கள், அரசு அதிகாரிகள், செல்வந்தர்கள் மற்றும் சீடர்கள் வேண்டாம் என வற்புறுத்தியும் புத்தர் தன்னுடைய முடிவிலிருந்து மாறவில்லை.
அங்குலிமாலாவினைச் சந்திக்க புத்தர் காட்டிற்குள் பிரவேசித்தார். அங்குலிமாலாவின் எதிரே புத்தர்
தோன்றியபோது அவருடைய கட்டைவிரலைப் பார்த்தான் அவன். உன்னிடம் இருக்கும்
அனைத்தையும் என்னிடம் தந்துவிடு என காடுகள் அதிர கர்ஜித்தான் அங்குலிமாலா.
என்னிடம் இருப்பதை நீ பெற்றால் உன்னால் என்னைத் தண்டிக்க இயலாது. என்னை மட்டுமல்ல
பரந்துவிரித்த இந்த உலகின் ஒரு உயிரைக்கூட உன்னால் கொல்ல முடியாது என அமைதியான
குரலில் சொன்னார் புத்தர். குழப்பத்தில் இருந்த அவனிடம் புத்தர் அன்பின்
மகத்துவத்தைப் பற்றிப்பேசினார். எல்லையற்ற கருணையைப் பற்றி பேசினார். இயற்கையின்
மகத்துவத்தைப் பேசினார். எத்தனை எத்தனை மனிதர்களின் இரத்தத்தில் தனியாத
அங்குலிமாலாவின் தேடல் அன்றோடு நின்றுபோனது. அவனும் பின்னாளில் புத்த பிக்குவாக
மாறி அன்பைப் போதித்தார்.

அங்குலிமாலாவைப் பற்றி ஏராளமான செய்திகள் பௌத்தம் தொடர்பான நூல்களில் இருக்கின்றன. அவனது கொடூரமான செயல்களை பக்கம் பக்கமாக விவரிக்கின்றன. ஆனால் நம்முடைய ஒவ்வொருவருக்குள்ளும் அங்குலிமாலா இருக்கிறான். பொறாமை, வன்மம் போன்றவைகளின் உருவமே அவன். நம்மில் இருக்கும் அவனை அழிக்கும் ஆயுதமே அன்பு. புத்தர் அங்குலிமாலா மூலமாக இந்த
உலகத்திற்கு எடுத்துரைத்த செய்தியும் இதுதான்.