- தனது கண்டுபிடிப்புகள் மனித உயிர்களை அழிக்க போரில் பயன்படுத்தப்படுவதை அறிந்தது உலகின் அமைதிக்கு பெரிய தீங்கு விளைத்து விட்டோம் என்கிற குற்ற உணர்வோடு இருந்த மாமனிதர்.
- இவர் கண்டுபிடித்ததோ ஆபத்தான வெடி பொருட்கள்; ஆனால், இவரது பெயரால் அமைதிக்கு உலகின் உயரிய பரிசு தருகிறார்கள்.
ஆல்பிரட் நோபல் அவர்கள் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஒரு அறிவியலாளர். வேதியாளர், பொறியாளர். டைனமைட் உள்ளிட்ட பல வெடி பொருட்களை உருவாக்கியவர். ஆயுதத் தயாரிப்பாளராகவும் இருந்தவர். உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசை நிறுவி, அதனை வழங்க தனது சொத்துக்களை அளித்தவர்.

ஆல்பிரட் நோபல் பிறப்பு
ஆல்பிரட் நோபல் அவர்கள் 1833 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி ஸ்வீடன் நாட்டில் ஸ்டாக்ஹோம் நகரில் பிறந்தார். இவருடைய தந்தை இம்மானுவேல் நோபல் ஒரு பொறியாளர். தாய் – கரோலினா அன்றியெட் நோபல். மொத்தம் எட்டு குழந்தைகள் பெற்ற இந்த தம்பதியினருக்கு ஆல்பிரட் நோபல் நான்காவது மகனாக பிறந்தார். இம்மானுவேல் ஒரு கண்டுபிடிப்பாளராக இருந்த போதும் கூட இவர்கள் குடும்பம் வறுமையில் வாடியது. இதனால் ஆல்பிரட் நோபல் மற்றும் அவரது மூன்று சகோதரர்களால் மட்டுமே குழந்தைப் பருவத்தை உயிருடன் கடக்க முடிந்தது.
ஆல்பிரட் நோபலின் நினைவாக, இவரது பெயர் நோபலியம் என்ற தனிமத்துக்கும் வைக்கப்பட்டுள்ளது!!
இளமையும் கல்வியும்
ஆல்பிரட் நோபல் இளம் வயதில் இருந்தே அவரது தந்தை போன்றே பொறியியலில், அதிலும் குறிப்பாக வெடி பொருட்களில் அதிக ஆர்வம் காட்டினார். பல தோல்விகளை சந்தித்த ஆல்பிரட் நோபலின் தந்தை 1837 ஆம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு சென்று அங்கு இயந்திர கருவிகள் மற்றும் வெடி உற்பத்தியாளராக வெற்றிகரமாக வளர ஆரம்பித்தார். கண்டுபிடிப்பாளராகிய அவர் நவீன ஒட்டு பலகையை (Plywood) கண்டுபிடித்தார். மேலும் டார்பிடோ அதாவது நீருக்கடியில் செலுத்தப்படும் ஏவுகணை சம்பத்தப்பட்ட வேலைகளை தொடங்கினார். பொருளாதார ரீதியாக அவர் வளர்ந்ததும் 1842 ஆம் ஆண்டில், அவர் குடும்பமும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வந்தது.
வசதி இருந்ததால் ஆல்பிரட் நோபலை தனியார் ஆசிரியர்கள் நடத்திய வகுப்புகளுக்கு அனுப்பி படிக்க வைத்தனர். ஆல்பிரட் நோபலும் நன்கு படித்தார். குறிப்பாக மொழி பாடத்திலும், வேதியியல் பாடத்திலும் சிறந்து விளங்கினார். ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ரஷிய மொழிகளை கற்றார். 1841-1842 ஆண்டுகளில் சுமார் 18 மாதங்கள், ஆல்பிரட் நோபல் ஸ்டாக்ஹோமில் இருந்த ஜேக்கப்ஸ் அபோலோகிச்டிக் பள்ளிக்கு படிக்க சென்றார். அவர் வாழ்நாளில் சென்ற ஒரே பள்ளியும் இது மட்டும் தான்.
ஆல்பிரட் நோபல் ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும்
1850 ஆம் ஆண்டு வேலைக்காக ஆல்பிரட் நோபல் பாரிஸ் சென்றார். அங்கு நைட்ரோகிளிசரினை கண்டுபிடித்த அஸ்கானியோ சோப்ரிரோ (Ascanio Sobrero) என்ற விஞ்ஞானியை சந்தித்தார். அவர் கொஞ்சம் அழுத்தம், வெப்பம் மாற்றங்களில் கூட வெடித்து விடும் தன்மை கொண்ட நைட்ரோகிளிசரினை பயன்படுத்துவது மிகவும் ஆபத்து என்ற போதும் ஆல்பிரட் நோபலுக்கு நைட்ரோகிளிசரின் மீது ஒரு வித ஆர்வம் ஏற்பட்டது. தன்னுடைய 18 வயதில் ஒரு வருட படிப்பிற்காக அமெரிக்க சென்றார். அங்கு அமெரிக்க உள்நாட்டு போருக்காக USS மானிட்டரை வடிவமைத்த கண்டுபிடிப்பாளர் ஜான் எரிக்சன் கீழ் வேலை செய்து அவரது வேதியியல் ஆய்வுகளை மேற்கொண்டார். 1857 ஆம் ஆண்டு ஆல்பிரட் நோபல், அவருடைய மேம்படுத்தப்பட்ட எரிவாயு மீட்டருக்கும் 1853 ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட அழுத்தமானிக்கும் காப்புரிமையை தாக்கல் செய்தார். சிறுது காலத்தில் மொத்த குடும்பமும் ரஷ்யாவில் இருந்து ஸ்வீடன் திரும்பியா நிலையில் ஆல்பிரட் நோபல் மட்டும் அவருக்கு பிடித்தபடி வெடிபொருட்களின் ஆய்வில் தன் நேரத்தை செலவழிக்க ஆரம்பித்தார். குறிப்பாக நைட்ரோகிளிசரினின் பாதுகாப்பான உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் அதிக ஆர்வம் காட்டினார். ஆல்பிரட் நோபல் 1863 ஆம் ஆண்டு ஒரு வெடி தூண்டியையும் 1865 ஆம் ஆண்டு வெடிக்கும் தொப்பியையும் வடிவமைத்தார்.

டைனமைட்
1864 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி தான் அந்த சோக நிகழ்வு நடந்தது. ஸ்டாக்ஹோம் நகரில் இருந்த ஹெலேன்போர்க் எஸ்டேட்டில் ஒரு தொழிற்சாலையில் நைட்ரோகிளிசரினை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கொட்டகையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டதால், ஆல்பிரட் நோபலின் இளைய சகோதரர் எமில் உட்பட ஐந்து பேர் மரணம் அடைந்தனர். இதனால் ஸ்டாக்ஹோமில் ஆய்வுகள் செய்ய அரசு தடை விதித்தது. ஆனால், ஆல்பிரட் நோபல் மட்டும் தலைமறைவாக இருந்து அவர் உருவாக்கிய வெடிபொருட்களின் தன்மையை மேம்படுத்த பல ஆராய்ச்சிகள் செய்தார். ஆல்பிரட் நோபல் நிலையற்ற நைட்ரோகிளிசரினை விட கையாள எளிதான, பாதுகாப்பான பொருளாகிய, டைனமைட்டை (Dynamite) 1867 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். டைனமைட்டிற்கு, அமெரிக்க மற்றும் பிரிட்டனில் காப்புரிமையும் பெறப்பட்டது. மேலும் டைனமைட் சுரங்கம் மற்றும் சர்வதேச அளவில் போக்குவரத்து நெட்வொர்க்குகளுக்கு பயன்படுத்தப்பட்டது. 1875 ஆம் ஆண்டு ஆல்பிரட் நோபல் மேலும் நிலையான, டைனமைட்டை விட அதிக சக்தி வாய்ந்த, கெலிக்னிட்டை (Gelignite) கண்டுபிடித்தார்.
வணிகங்கள்
ஆல்பிரட் நோபலின் சகோதரர்கள் லுட்விக் மற்றும் ராபர்ட் காஸ்பியன் கடலோரம் உள்ள எண்ணெய் கிணறுகளை பயன்படுத்தி மிகவும் பணக்காரராக மாறினர். ஆல்பிரட் நோபலும் இதில் முதலீடு செய்து புதிய எண்ணெய் பகுதிகளின் வளர்ச்சி மூலம் பெரும் செல்வத்தை பெற்றார். மேலும் 355 காப்புரிமைகளை சர்வதேச அளவில் வெளியிட்டார். ஆல்பிரட் நோபல் சமாதானத்தையும் அமைதியையும் விரும்புகிறவராக இருந்த போதும் கூட அவரின் மரணத்திற்கு முன்னால் 90 ஆயுத தொழிற்சாலைகள் நிறுவினார்.
ஆல்பிரட் நோபல், தனது ஒட்டுமொத்தச் சொத்தின் 94 சதவீதத்தை நோபல் பரிசுக்காக வழிங்கியுள்ளார்!!
நோபல் பரிசு
1888 ஆம் ஆண்டு ஆல்பிரட் நோபலின் சகோதரர் லுட்விக் மரணத்தை தொடர்ந்து பல செய்தித்தாள்கள் செய்தியை தவறாக வெளியிட்டன. ஒரு பிரஞ்சு இரங்கல் செய்தி “மரணத்தின் வியாபாரி இறந்துவிட்டார்” (Le Marchand De La mort est Mort) என செய்தி வெளியிட்டது. இறப்பதற்கு முன்னரே தன்னை பற்றிய மோசமான இரங்கல் குறிப்பைக் கண்ட ஆல்பிரட் நோபலின் மனம் வருத்தப்பட்டது. வரலாற்றில் இப்படியொரு மோசமான மனிதனாக தாம் இருக்க கூடாது என்று விரும்பினார். அதே சமயம் அவரது கண்டுபிடிப்புகள் மனித உயிர்களை அழிக்க போரில் பயன்படுத்தப்படுவதை அறிந்தது உலகின் அமைதிக்கு பெரிய தீங்கு விளைத்து விட்டோம் என்கிற குற்ற உணர்வோடு இருந்தார்.

ஆல்பிரட் நோபல் தன்னால் ஏற்பட்ட அழிவிற்கு பிராயசித்தம் தேடி யோசித்தார். அதன் விளைவாக தனது சொத்து முழுவதையும் பொதுச் சேவைக்காகச் செலவு செய்வது என முடிவெடுத்த ஆல்பிரட் நோபல், பல உயில்களை எழுதினார். 1895 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி, அவர் கையெழுத்திட்ட உயிலில், தனது ஒட்டுமொத்தச் சொத்தின் 94 சதவீதத்தை மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியில், மருத்துவம், அமைதி மற்றும் இலக்கியம் ஆகிய துறையில் பணியாற்றியவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதன் விளைவாக உண்டானதே இன்று உலகின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசு.
இறப்பு
இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்த ஆல்பிரட் நோபல் 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி பெருமூளை இரத்த கசிவின் காரணமாக தன் வீட்டிலேயே இறந்தார். அவரது குடும்பம், நண்பர்கள் அல்லது சக மாணவர்களுக்கு தெரியாமலேயே, அவர் நோபல் பரிசுகள் வழங்குவதற்கு தனது சொத்துக்களை விட்டுச் சென்றார்.

ஆல்பிரட் நோபல் சிறப்புகள்
அவரது விருப்பப்படி, 1901 ஆம் ஆண்டு முதல் 5 பிரிவுகளில் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வந்தன. 1969 ஆம் ஆண்டு முதல் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. நோபல் பரிசு மனித குலத்திற்கு பயன்படும் படி சிறந்த ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கும், தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கும், சமூகத்திற்கு அரும்பெரும் தொண்டாற்றுபவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மனித உயிர்களைக் கொல்வதற்காகப் பயன்படும் வெடிபொருள்களைக் கண்டுபிடித்த நோபல், இறப்புக்கு பிறகு அவர் நினைத்தபடி சமாதானத் தூதராகவே அறியப்படுகிறார். வேதியியல் கண்டுபிடிப்புகளுக்காக தன் வாழ்க்கையில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் உழைத்த ஆல்பிரட் நோபலின் நினைவாக இவரது பெயர் நோபல் பரிசுக்கு மட்டுமல்ல, நோபலியம் என்ற தனிமத்துக்கும் வைக்கப்பட்டிருக்கிறது.
அக்டோபர் 21 – ஆபத்தான வெடி பொருட்களை அறிவியல் ஆர்வத்தால் கண்டுபிடித்திருந்தாலும், அதன் தவறான பயன்பாட்டை எண்ணி வருந்தி, உலகிற்கு நன்மை அளிக்கும் கண்டுபிடிப்புகளுக்கு மட்டுமே கிடைக்கும் மிக உயரிய நோபல் பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபலின் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடுவதில் பெருமை அடைகிறது நியோதமிழ்!