தகுதிச்சுற்றில் அனாசயசமாக விளையாடி உலகக்கோப்பை அட்டவணையில் எட்டாவது அணியாக ஆப்கானிஸ்தான் இணைந்துகொண்ட நேரம். இங்கிலாந்திற்கு புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆப்கன் கிரிக்கெட் வாரியம் கூடி அஸ்கார் ஆப்கனை கேப்டன் பதவியிலிருந்து கீழிறக்கி, குல்பதின் நயிப்பை புது கேப்டனாக நியமித்தார்கள். இது மனரீதியாக குழப்பங்களை அந்த அணிக்கு கொடுத்தது. ஆனாலும் அதற்கெல்லாம் அப்பால் சிறப்பான ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

குல்பதின் கேப்டன்சியில் சொதப்புகிறார் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. எந்த தொடருக்கும் கேப்டன்சி செய்யாமல் உலகக்கோப்பை போன்ற தொடரில் நேரிடையாக செப்டன் பொறுப்பை வகிப்பதெல்லாம் சாதாரண காரியமா? வீரர்களைப் போலவே அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் தங்களது அனுபவமின்மையை வெளிப்படுத்திவருகிறது. நயிப்பின் கேப்டன்சி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தான் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. கையில் இருந்த வெற்றியை அப்படியே சர்பராசிடம் தாரைவார்த்தார். வெற்றிக்கு மிக அருகில் இருந்தும் அனுபவின்மையினால் அல்லது தவறான முடிவுகளால் அதனை அந்த அணி தவறவிட்டது. இதற்கான பதிலடியைத் தான் கிரிக்கெட் வாரியம் தற்போது தந்திருக்கிறது.
குல்பதின் நயிப்பை கேப்டன் பதவியிலிருந்து விலக்கி இருக்கிறது ஆப்கன் கிரிக்கெட் வாரியம். அவருக்கு பதிலாக ரஷித் கான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல T20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த ரஹ்மத் ஷாவின் பதவியும் பறிக்கப்பட்டு ரஷித்திடம் கொடுப்பட்டிருக்கிறது. இதனால் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கான ஆப்கானிஸ்தான் கேப்டனாக ரஷித் தொடர இருக்கிறார். அந்த அணியின் முன்னாள் கேப்டன் அஸ்கார் ஆப்கன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்து மேற்கு இந்தியத்தீவுகள் உடனான தொடருக்கு ரஷித் கானே அணியை வழிநடத்துவார். 20 வயதே ஆன ரஷித் இதுவரை சிறப்பான ஸ்பின்னராக வலம்வருகிறார். ஆனால் அவரால் சிறந்த கேப்டனாக இருக்க முடியுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.