உலகக்கோப்பை தொடரின் 33 வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த தொடரில் இதுவரை தோல்வியே பெறாத நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பிற்கு போராடும் பாகிஸ்தான் அணியினை எதிர்கொண்டது. மழை காரணமாக இப்போட்டி ஒருமணிநேரம் தாமதமாக துவங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

திணறிய நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள்
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய மார்டின் குப்தில், 5 ரன்களிலும் கோலின் முன்ரோ 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். மறுபுறம் கேப்டன் வில்லியம்சன் நிதானமாக ஆடிய நிலையில், ரோஸ் டெய்லர் 3 ரன்களிலும் டாம் லதாம் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதனையடுத்து வந்த ஜேம்ஸ் நீஷம் மற்றும் காலின் டி கிராண்ட்ஹோம் இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினர். 150 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகிவிடும் என நினைக்கப்பட்ட நியூசிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர் இருவரும். கிராண்ட்ஹோம் 64 ரன்களில் ரன் அவுட்டில் வெளியேற, ஜேம்ஸ் நீஷம் ஆட்டத்தின் இறுதி வரை நிலைத்து ஆடி 97 ரன்கள் சேர்த்தார். 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் சேர்த்து தந்து இன்னிங்ஸை நிறைவு செய்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷாஹீன் அஃப்ரிடி 10 ஓவர்கள் வீசி 3 ஓவர்கள் மெய்டன் செய்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி நியூசிலாந்து அணியை கட்டுக்குள் கொண்டு வந்தார்.

சதமடித்த பாபர் ஆசம்
இலக்கு எளிமையானதுதான் என்றாலும் நியூசிலாந்து அணி திறமையான பந்துவீச்சாளர்களை வைத்துள்ளது என்பதால் ஆட்டம் எந்த நேரத்திலும் எப்படி வேண்டுமென்றாலும் மாறலாம் என்ற பரபரப்பு ரசிகர்களிடையே தொற்றிக்கொண்டது. அதைப்போலவே ஒப்பனர்களாக களமிறங்கிய இமாம் உல் ஹக் 19 ரன்னிலும் பக்கர் சமான் 9 ரன்களிலும் வெளியேறி அதிர்ச்சியளித்தனர். பின்னர் வந்த ஹபீஸ் 32 ரன்களில் நடையைக்கட்ட, ஹாரிஸ் சொஹைல் பாபருடன் கைகோர்த்தார். இந்த இணை 126 ரன்களைக் குவித்தது அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்டது. அரைசதமடித்த சொஹைல் 68 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அபாரமாக ஆடிய பாபர் சதமடித்து அசத்தினார். பின்னர் கேப்டன் சர்பராஸ் அகமது வின்னிங் ஷாட்டை அடித்து மேட்சை முடித்தார். சதமடித்த பாபர் ஆசம் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
