நம் ஊர்களில் அணில்கள் குறும்புத்தனம் செய்வதை தான் அதிகம் பார்க்க முடியும். அப்படி இருக்கையில், அணில் ஒன்று பாம்பு ஒன்றுடன் சண்டை போடும் காட்சி வெளியான போது தான் அவை இவ்வளவு ஆக்கிரோஷமானதா? என்று எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தோம். அது மட்டுமின்றி சமீபத்தில் அணில் ஒன்று வழிபோக்கர்களிடம் தண்ணீர் கேட்டு கெஞ்சுவது போன்ற காட்சியும் வெளியாகி வைரலானது.
இத்தகைய அணில்கள் பற்றிய ஆச்சரியமூட்டும் 10 தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
அணில் இனங்கள்
அணில் மிகப்பெரிய இனமாக கருதப்படுகிறது. இதில், இந்திய அணில்கள் 36 அங்குலம் வரை வளருகின்றன. ஆப்பிரிக்காவை சேர்ந்த பிக்மி வகை அணில்கள் மிகவும் சிறிய அளவை கொண்டவை. இது 7 லிருந்து 13 செ.மீ வரை வளரும். அணில்களுக்கு நான்கு முன் பற்கள் உள்ளன. அது வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்கும். இந்த பற்களை, கொட்டைகளை உடைத்து உண்ண பயன்படுத்துகின்றன. அணில்களை மூன்று வகையாக வகைப்படுத்தலாம். அவை, தரை அணில், மர அணில், பறவை அணில். பறவை அணில்கள், தோலின் மடிப்புகளால் காற்றில் மெல்ல பறக்க முற்படுகின்றது.

கைகளால் எடுத்து உண்ணும் அணில்கள்!
அணில்கள் உணவு உண்ணும்போது இரண்டு கால்களால் மட்டுமே உட்கார்ந்திருக்கும். அவற்றின் கால் நகங்கள் வளைந்து இருக்கும். அந்த அமைப்பு, மரங்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டிருக்கும். கைகளை உணவு எடுத்து உண்ண பயன்படுத்துகின்றன.

அணில்களின் மோப்ப திறன்!
அணில்களால் வாசனை உணர்வைப் பயன்படுத்தி பழுத்த கொட்டைகளை அடையாளம் காண முடியும். அதே போல், பூச்சி தாக்கிய கொட்டைகளையும் அணில்கள் எளிதில் கண்டுபிடித்துவிடும். மண்ணில் புதைக்கப்பட்ட விதைகளை வாசனையைக் கொண்டும் மற்றும் மண்ணில் கலைந்துள்ள காட்சிகளை கொண்டும் கண்டுபிடித்துவிடுகின்றன அணில்கள்.
அணில்களின் வாழ்விடம்
மரங்களில் வாழும் அணில்கள் கூடுகளில் வாழ்பவை. கூடுகள் கால்பந்து போட்டியில் அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்பை கொண்டிருக்கும். இதில், சிறிய குச்சிகள், இலை தழைகள் கொண்டு அணில்கள் சொந்தமாக கூடுகளை அமைத்துக்கொள்கின்றன. இந்த கூடுகளை குட்டிகளை பாதுகாக்க மட்டுமே பயன்படுத்துகின்றன.

அணில் சத்தம்
அணில் எழுப்பும் ஒலியை கீச்சிடுதல் எனலாம். இது ஆங்கிலத்தில் ‘squeak‘ எனப்படுகிறது. இந்த ஒலியின் சமிக்ஞை மூலம் மற்ற அணில்களை தொடர்பு கொள்கின்றது. இதன் மூலம் ஆபத்து நெருங்குகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. அது மட்டுமின்றி ஆபத்தை வெளிப்படுத்தும் ஆயுதமாக வாலை அணில் பயன்படுத்துகிறது.
அணில்கள் ஓடும் வேகம்
அணில்கள் 32 கிமீ வேகத்தில் ஓடக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளன. அதேபோல் 20 அடி உயரத்திலிருந்து கூட கீழே குதிக்கின்றன. அதிக உயரத்திலிருந்து அணில் குதிக்கையில், அதன் பஞ்சு போன்ற வால்கள் பாராசூட் போன்று செயல்படுகிறது.
பிற விலங்குகள் செய்யாததை செய்யும் அணில்கள்!
அணில்களால் செங்குத்தாக மரத்தில் இறங்கவும் ஏறவும் முடியும். 180 டிகிரி கோணத்தில் அணிலால் சுழல முடியும். இதை மற்ற விலங்குகள் செய்வதை நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள். இனி அணில்களை பார்க்கையில் இதை கவனித்துப் பாருங்கள்.

மரங்கள் வளர காரணமாகும் அணில்கள்!
வெளிநாடுகளில் ஓக் வகை மரங்கள் விதைப்பில் அணில்களின் பங்கு மிக முக்கியமானதாகும். அணில்கள் ஓக் மரத்தின் விதைகளை தரையில் சேமித்து வைக்கின்றது. அதில் 70 சதவீதம் விதைகளை மட்டும் மீட்டெடுக்கின்றன. மறந்து போன 30 சதவீத விதைகளினால் பெருமளவில் மரங்கள் வளருகின்றன.

அணில் என்ன சாப்பிடும்?
அணில்கள் எலி, சிறிய ஊர்வன, பறவைகள், பழங்கள், கொட்டைகள், முட்டை போன்றவற்றை உண்ணுகின்றன. இவற்றாலும், மனிதர்களைப் போலவே செல்லுலோஸை ஜீரணிக்க இயலாது. உலகம் முழுவதும் பரவலாக காணப்படுவது தரை அணில்கள் தான். அதில் கைபாப் அணில் தூய வெள்ளை வால் கொண்டவை. இது அரிசோனாவில் Grand Canyon பகுதியில் மட்டுமே வாழ்கிறது. இந்தியாவில் உள்ள பழுப்பு மற்றும் வெள்ளை நிற கோடுகளை கொண்டுள்ள அணில்கள் இந்திய புராணக்கதைகளிலும் இடம்பெற்றுள்ளன.
இந்திய அணில்கள்!
இந்தியாவில், இந்திய பனை அணில்கள் தவிர மற்றொரு இனம் பரவலாக காணப்படுகிறது. அது வடக்கு பனை அணில் என்று அழைக்கப்படுகிறது. அந்த அணில்களின் முதுகில் 5 கோடுகள் இருக்கும். இந்திய பனை அணில்களின் முதுகில் 3 கோடுகள் உள்ளன. அதேபோல், இந்திய இராட்சத அணில்கள் மற்றும் மலபார் அணில்கள் இந்தியாவில் உள்ளன. இந்த இனம் இந்திய பனை அணில்களை விட 15 மடங்கு எடையுள்ளதாகவும் 1 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியதாகவும் உள்ளது. இதன் மயிர்கள் வானவில் போன்ற நிறத்துடன் காணப்படுகிறது.
நம் ஊர்களில் முதுகில் மூன்று கோடுகள் இருந்தால்தான் அது அணில் வகை என்று நம்புகிறோம். ஆனால், அணில்கள் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு விதத்தில் தோற்றமளிக்கிறது. எல்லா நாட்டு, அணில்களுக்கும் இயல்பான ஒரு பழக்கம் உள்ளது. அது மரங்களை விதைப்பது. நம் ஊர்களிலும், பல காடுகளில் மரங்கள் பெருக அணில்கள் ஒரு முக்கிய காரணமாகவே இருக்கிறது. எனவே நாம் விதைக்க மறந்தாலும், அணில்களை அழிக்க நினையாமல் இருப்போம்.