சாதுவான விலங்கினமாக கருதப்படும் முயல்கள், வீட்டிலும் வளர்க்கப்படும் செல்லப்பிராணியாகும். முயல்கள், பொதுவாக இயற்கையோடு ஒன்றி வாழும் உயிரினம். பொதுவாக, காடுகளில் வாழும் முயல்கள் மனிதனை கண்டதும் ஓடிவிடக்கூடியவை. ஆனால், வளர்ப்பு முயல்களால் எளிதில் மனிதர்களுடன் இணைந்தும் வாழ முடியும்.
தாவரங்களை மட்டுமே முயல்கள் உண்ணுகின்றன. ஆனால், சில பெண் முயல்கள் தனது சொந்த குட்டிகளை விழுங்கி விடும். மேலும், முயல்கள் பற்றிய பல ஆச்சரிய தகவல்களை பார்க்கலாம்.
முயல்கள் கேரட் தான் விரும்பி உண்ணும் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. ஆனால், உண்மையில் காட்டு முயல்கள் கேரட் உண்பதில்லை. அவை பொதுவாக நிலத்திற்கு அடியில் விளையும் காய்கறிகளை தவிர்க்கின்றன. புற்கள், இலை, தழைகள் போன்றவை தான் அதிகமாக உண்ணுகின்றன. வளர்ப்பு முயலுக்கு கேரட் தரப்படுவதால் அதுவும் வேறு வழியின்றி உண்கிறது.

முயல் இனங்கள்
முயல்களில் நாம் குறிப்பிட்ட வகை மட்டுமே பார்த்திருப்போம். 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகெங்கிலும் 70 நாடுகளில் குறைந்தது 305 இனங்கள் உள்நாட்டு முயல்கள் இருந்தன. அதில் சிலவற்றுக்கு காது மடித்து வைத்தது போன்று காணப்படும். மற்ற சில முயல் இனங்கள் பெரிதாக வளரும். முயல்கள் லெபோரிடே(Leporidae) என்ற குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய முயல் இனங்கள்
இந்தியாவின் காடுகளில் காணப்படுவது இந்திய குழிமுயல் ஆகும். இது தெற்காசியா முழுதும் பரவலாக இருக்கும் இனம் என்பது குறிப்பிடத்தக்கது. குழிமுயல்களின் காதுகள் மற்றும் பின்னங்கால்கள் பெரியதாகவும் இருக்கும். இவை காட்டு முயல் எனவும் அழைக்கப்படுகிறது. இவற்றை வீட்டில் வளர்க்க தடை உள்ளது.
முயல் பற்கள்
முயல்களின் பற்கள் வளர்ந்துக் கொண்டே இருக்கும். அவை, புற்கள், காட்டுப்பூக்கள் போன்றவை உட்கொள்ளும் போது பற்கள் உடைய நேரிடும். எனவே அவற்றுக்கு பற்கள் மீண்டும் முளைக்கிறது.
முயல் இனப்பெருக்கம்
முயல்கள் 3 மாதத்திலிருந்து 8 மாதத்திற்குள் இனச்சேர்க்கை பருவத்தை அடைகின்றன. இனச்சேர்க்கை அடைந்த பின் கருவுற்று 30 நாட்களில் குட்டியிடும். ஒரு முறை நான்கு முதல் 12 குட்டிகள் வரை முயல்கள் இடுகின்றன. முயல்களின் ஆயுட்காலம் பொதுவாக 9 முதல் 12 அப்படி என்றால் 9 முதல் 12 ஆண்டு ஆயுட்காலத்தில் எத்தனை குட்டிகள் இடும் என்று கணக்கிட்டுப் பாருங்கள்! சில வகை காட்டு முயல்கள் 2 ஆண்டுகள் மட்டுமே வாழ்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read: நீங்கள் கேள்விப்பட்டிராத 7 அதிசய உயிரினங்கள்!
குட்டிகளை உண்ணும்
சில தாய் முயல்கள் தன் சொந்த குட்டிகளை அச்சத்தின் காரணமாக உண்ணுகின்றன. வேட்டையாடுபவர்களுக்கு பயந்து தாய் முயல் குட்டிகளை பாதுகாக்கும் நோக்கில் உண்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதை அனைத்து முயல்களும் செய்வதில்லை.

தன் மலம் உண்ணும் முயல்
முயல்களின் செரிமானத்திற்கு ஹிண்ட்கட் நொதித்தல் உதவுகிறது. எனவே அவை தனது சொந்த மலத்தை மீண்டும் உண்டு செரிமானமடையச் செய்கின்றன. மேலும், அவற்றுக்கு போதுமான ஊட்டச்சத்து பெற முயல்களின் மலத்தை அவைகளே உண்ண வேண்டும்.
முயல்கள் சுத்தம் பேணுபவை. அவற்றை குளிக்க வைக்க தேவையில்லை. தனது சொந்த வாயில் உள்ள உமிழ் நீரால் உடலை சுத்தம் செய்துக் கொள்ளும்.
வாந்தி எடுப்பதில்லை
முயல்களால் வாந்தி எடுக்க இயலாது. அவற்றின் செரிமான அமைப்பால் உணவை வெளியில் கொண்டு வர இயலாது. உடலில் உள்ள ரோமங்களை விழுங்கினால் செரிமான அமைப்பின் மூலம் சமாளிக்கின்றன.
Also Read: வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட 3 கண்களை உடைய அதிசய பாம்பு
360 டிகிரியில் பார்வை
முயல்களின் கண்கள் 360 டிகிரி கோணத்தில் தெரிகிறது. அவற்றின் கண்கள் இரு பக்கமாக இருப்பதால், பார்ப்பது எளிதாக இருக்கும். தலையை திருப்பாமலேயே சுற்றி இருப்பதை அவை அறிந்து கொள்கின்றன. அதேபோல் முயல்களுக்கு முன்பகுதியில் குருட்டு புள்ளியும் உள்ளது.

குதிக்கும் முயல்கள்
முயல்கள் உயரத்தில் குதிக்கும் திறன் கொண்டுள்ளது. வேட்டையாடுபவர்களிடம் தப்பித்து ஓடுகையில் முயல்கள் 3.26 அடி உயரத்தில் குதிக்கின்றன. அதேபோல் 10 அடியில் நீளமாகவும் தாவி தப்பிச் செல்கின்றன. காட்டு முயல்கள் வளர்ப்பு முயல்களை விட மிக விரைவானவை! முயல்கள் வாழும் இடம் அவற்றின் குணத்தையும் தீர்மானிக்கிறது. முயல் இனங்கள் மணிக்கு 40-72 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை!
முயல் காதுகள்
முயல்களின் காதுகள் நீளமாக இருக்கும். அவற்றின் மூலம், இரண்டு தேவைகளை பூர்த்தி செய்கிறது. முக்கியமாக காதுகள் நீளமாக இருப்பதால் நெருங்கி வரும் ஆபத்தை முன்னரே உணர்கின்றன. இரண்டாவதாக அதிக வெப்பதை தணிக்க காதுகளை முயல்கள் பயன்படுத்துகின்றன.
முயல்களின் இயல்பை பற்றி அறியாமல், நாம் கேரட்டுகளை உணவாக போடும் வழக்கம் கொண்டிருக்கலாம். ஆனால், நிச்சயம் இனி நீங்கள் அதை தவிர்ப்பீர்கள் என்று நம்புகிறோம்.