இந்தியாவில் உள்ள பொறியியல் மாணவர்களின் நிலைமையினைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். அந்த அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் இந்தியாவில் இருக்கிறது. இந்தியாவின் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் பொறியியல் மட்டுமே நேரடி வேலைவாய்ப்பிற்கான பாலமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் பல கல்வித் துறைகளிலும் வேலைவாய்ப்பு கணிசமாகக் குறைந்துள்ளன. ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் மேலாண்மைக் கல்வி (MBA) மாணவர்கள் அதிகமாக வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொள்வதாகத் தெரியவந்துள்ளது.

அதிகரிக்கும் எண்கள்
ஆய்வின் முடிவு சில அதிர்ச்சி தரத்தக்க தரவுகளைப் பட்டியலிட்டிருக்கிறது. மேலாண்மைக் கல்வி மாணவர்களின் வேலைவாய்ப்பு விகிதம் ஆண்டுதோறும் 3 % குறைந்து வருகிறது. அதேபோல் தொழிற்கல்வியான ITI கடுமையான வேலைவாய்ப்பின்மையை சந்தித்து வருகிறது. கல்வியின் தரம் மற்றும் திறமை ஆகியவை காரணமாக இப்பிரச்சினை பூதாகரமாக வடிவெடுக்கிறது.
இந்த ஆண்டில் கணிப்பொறி பொறியியலில் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
ஆனால் பொறியியல் கல்வியைப் பொறுத்தவரை ஆய்வு முடிவுகள் ஆசுவாசமளிகின்றன. இந்தியாவில் பொறியியல் கல்வி முடிக்கும் 52 % மாணவர்களுக்கு வேலை கிடைக்கிறது. மேலும் ஆண்டுதோறும் மூன்று லட்சம் மாணவர்கள் 100 பெரிய நிறுவனங்களில் பணியில் சேருவதாகவும் ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டை விட இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது சற்றே மகிழ்ச்சியளிக்கிறது.
காத்திருக்கும் சவால்கள்
இந்த ஆண்டில் கணிப்பொறி பொறியியலில் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். எதிர்காலத்தில் Automation எனப்படும் தானியங்கி இயந்திரங்களின் ஆதிக்கம் அதிகரிக்க இருக்கிறது. இதனால் கணினி சார் வேலைகளில் உள்ள 50 % பேர் Automation காரணமாக வேலையே இழக்க இருக்கிறார்கள். ஆகவே இப்போதுள்ள கல்வி மற்றும் தொழிநுட்பக் கட்டுமானங்களைப் பற்றிய தெளிவான பார்வையை மாணவர்களுக்கு அளிப்பதே இதிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் பல்வேறு நடவடிக்கை மூலம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் கல்வி நிறுவனங்கள் தொழிநுட்ப பெருநிறுவனங்களுடன் இணைந்து இயங்குவதற்கான சூழலை ஏற்படுத்தவேண்டும். எதிர்காலம் குறித்த பார்வையும் காத்திருக்கும் சவால்களும் தெரிந்தால் மட்டுமே வெற்றியினை எட்டிப்பிடிக்க முடியும்.