கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள குரிசியா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் – கமலம் தம்பதியர். மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த இவர்களின் ஒரே மகள் ஸ்ரீ தன்யா சுரேஷ். கரையான் அரித்த வீடு. வாட்டும் வறுமை. கலங்கடித்த பசி ஆகியவற்றிற்கு மத்தியிலும் தனது அயராத உழைப்பினால் இன்று ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றியை எட்டிப்பிடித்து சாதனை படைத்திருக்கிறார் ஸ்ரீ தன்யா.
நாடுமுழுவதும் இன்று யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 759 பேர் தேர்ச்சியாகியுள்ளனர். அவற்றுள் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவர் ஸ்ரீ தன்யா மட்டுமே. மேலும் இந்திய வரலாற்றிலேயே பழங்குடியினப் பெண் ஒருவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெறுவது இதுவே முதல்முறை.
வறுமையை கல்வியால் மாய்த்த பெண்
ஸ்ரீ தன்யாவின் பெற்றோர்களுக்கு கூலி வேலை. அதனால் பொருளாதார கஷ்டங்களில் குடும்பம் பலகாலம் சிக்கித் தவித்திருக்கிறது. தன்யாவின் படிப்புச் செலவிற்காக அவரது பெற்றோர் அக்கம்பக்கத்து வீடுகளில் கடன் வாங்கியுள்ளனர். இந்நிலையில் அவர் தேர்வில் வெற்றிபெற்றது அந்த வட்டார மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை விதைத்திருக்கிறது.
தேர்வில் வெற்றிபெற்ற பின்னர் பேசிய தன்யா,” நான் கேரளாவில் மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைச் சேர்ந்தவள். இந்தப் பகுதியிலிருந்து இதுவரை யாரும் ஐ.ஏ.எஸ் தேர்வில் வென்றதில்லை. என்னுடைய இந்த வெற்றி என்னைப்போல வறுமையில் இருக்கும் பலருக்கு உத்வேகம் அளிக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
குவியும் பாராட்டுகள்
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ” ஸ்ரீ தன்யாவின் இந்த வெற்றி மற்றவர்களுக்கு தூண்டுகோலாக அமையும் என பாராட்டியுள்ளார். பின்தங்கிய வகுப்பிலிருந்து மிகவும் கஷ்டப்பட்டு படித்து இந்த நிலைக்கு முன்னேறிய தன்யாவிற்கு வாழ்த்தையும் தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தியும் ஸ்ரீ தன்யாவைப் பாராட்டி ட்விட்டரில் வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளார். அதில், ஸ்ரீ தன்யாவின் கடின உழைப்பு தான் இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம். அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் எனது வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
லட்சியமும் தீரா கனவும் மட்டும் இருந்தால் போதும் எத்தகைய வறுமையையும் வீழ்த்திக்காட்டலாம் என்பதற்கு சாட்சியாய் நிற்கிறார் ஸ்ரீ தன்யா சுரேஷ்.