தமிழகத்தின் பள்ளிகல்வித்துறை இயக்கம் சார்பில் புதிய தொலைக்காட்சி ஒன்று துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகைத் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் பற்றிய செய்திகள் மற்றும் அவற்றிற்கான விண்ணப்பிக்கும் முறைகள் குறித்தும் மாணவர்கள் எளிதில் அறிந்துகொள்ளும் பொருட்டு இந்த ஏற்பாடானது தமிழக அரசின் சார்பில் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

பொங்கல் முதல்
கல்வித் துறையில் நடைபெறும் அனைத்து தேர்வுகள் தொடர்பாக மாணவ மாணவியருக்கு ஆலோசனைகளை உடனுக்குடன் வழங்கிட தொலைக்காட்சி சேனல் ஒன்று உருவாக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் அதுதொடர்பாக குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அதன்படி சேனல் துவங்குவதற்கான முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. வரும் பொங்கல் தினத்தன்று இப்புதிய சேனல் ஒளிபரப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கோட்டூர்புரம் பகுதியில் அமைந்திருக்கும் அண்ணா நூலகத்தின் 8 வது தளத்தில் இந்த சேனல் இயங்க இருக்கிறது. கேமரா, ட்ரோன் (ஆளில்லா பறக்கும் கருவி) போன்ற சாதனங்கள் வாங்கப்பட்டு வருகின்றன. இதற்கு ஆகும் செலவுகளுக்காக முதற்கட்டமாக ரூபாய் 1.35 கோடி தமிழக அரசின் சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சில மாநிலங்களில் மட்டுமே இம்மாதிரியான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன்மூலம் தமிழக ஏழை எளிய மாணவர்களுக்கு அரசின் சார்பில் நடைபெறும் கல்வி நலத் திட்டங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்படும். மேலும் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வித்துறை குறித்த சந்தேகங்களுக்கு நிபுணர்கள் மற்றும் உரிய அதிகாரிகள் மூலம் ஆலோசனைகளும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கான சுற்றறிக்கைகள், புது கண்டுபிடிப்புகள், போட்டித்தேர்வுகள் குறித்த பல்வேறு தகவல்களை இனி வீட்டில் இருந்தபடியே தெரிந்துகொள்ளலாம்.