2018-ம் ஆண்டு, மே மாதம், முதல் ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த, மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில், தமிழில் வழங்கப்பட்ட வினாத்தாளில் 49 கேள்விகளில் மொழி பெயர்ப்புக் குளறுபடி இருந்தது. இது தமிழ்வழியில் தேர்வு எழுதிய மாணவர்களை வெகுவாகப் பாதித்தால், சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் சி.டி. செல்வம் மற்றும் ஏ.எம். பசீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு (49 கேள்விகள் × 4 மதிப்பெண்கள்) என்ற அடிப்படையில் 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று ஆணையிட்டனர்.
நடுவண் தேர்வு வாரியம், இந்த ஆணையை எதிர்த்து மேல் முறையீடு செய்தது. இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் பொழுதே, பெரும்பகுதியான மருத்துவப் படிப்பு இடங்கள், அவசர அவசரமாக நிரப்பப்பட்டு விட்டன. தீர்ப்புக்கு இடைக்காலத்தடை, உடனடியாக வழங்கப்பட்டதால், தமிழ்வழி மாணவர்களுக்கு, எந்தக் கருணையோ / சலுகையோ கிடைக்காமல் போய்விட்டது.

தீர்ப்பு என்ன?
23-11-2018 தேதியிட்ட இந்து நாளிதழ், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் சுருக்கத்தை வெளியிட்டிருந்தது. 49 கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. கேள்விகள் ஆங்கிலத்திலும் வழங்கப்பட்டிருந்தன. (தமிழிலும் ஆங்கிலமும் சேர்ந்த வினாத்தாள்)
“மனிதன், வெளவால், சிறுத்தை போன்ற உயிரினங்களின் வேறுபட்ட வளர்ச்சி முறை பற்றிய கேள்வியில், ஆங்கிலத்தில் CHEETAH’s என உள்ளது. Cheetah என்பது சிறுத்தையைக் குறிக்கும் ஆங்கிலச்சொல். தமிழில் மொழி பெயர்த்த அறிஞர் (?) சிறுத்தையின், என்று மொழி பெயர்ப்பதற்குப் பதிலாக சீத்தாவின், என்று மொழி பெயர்த்துவிட்டார். (49 வினாக்களின் மொழி பெயர்ப்புக் குளறுபடியில் இதுவும் ஒன்று).
சீத்தா என்பது கடவுளின் பெயர். இச்சொல் இந்த கேள்விக்குப் பொருந்தாது என்பதைப் பொது அறிவுடன் சிந்தித்தால் மாணவர்கள் உணர்ந்துகொள்ள முடியும். மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்கள் ஆங்கிலத்தில்தான் படிக்கப் போகிறார்கள். சந்தேகம் வந்தால் ஆங்கிலத்தில் கேள்வியைப் படித்திருக்க வேண்டும். எனவே இதனை மாணவர்கள் புரிந்து கொள்ள முடியாது என்பதை ஏற்க முடியாது.
24000 மாணவர்கள் தமிழ் வழியில் தேர்வு எழுதினார்கள் இவர்கள் அனைவருக்கும் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. இப்படிக் கருணை மதிப்பெண்கள் 196 இனை வழங்கினால், தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மட்டும் முறையற்ற பெரும் சலுகை வழங்குவதாகிவிடும். அடுத்த ஆண்டு நுழைவுத் தேர்வினை Natural Testing Agency என்ற அமைப்பினை உருவாக்கி நடத்த ஆணையிடுகிறோம்.” இது உச்சநீதிமன்றத் தீர்ப்பு.

இப்பொழுது தமிழில் தேர்வு எழுதிய ஒரு மாணவனின் சிந்தனையைப் பார்ப்போம்.
தமிழ் நாட்டிலிருந்து இராஜஸ்தான் சென்று நான் நுழைவுத் தேர்வினை எழுதினேன். 2 நாள் தொடர்வண்டிப் பயணம். மே மாதம். இராஜஸ்தானில் கடும் வெயில். புதிய ஊர். புரியாத மொழி. உணவுப் பிரச்சினை. விடுதியிலிருந்து புறப்பட்டுத் தேர்வு மையத்தை அடைந்தேன். 10 மணித் தேர்வுக்கு 9 – 15 மணிக்கே தேர்வு மையத்துக்குச் செல்ல வேண்டும். 12 மணிக்கெல்லாம் பசிக்க ஆரம்பித்துவிடும்.
முதலில் இந்தி வினாத்தாளைத் தந்தார்கள். பின்னர் தவறை உணர்ந்து, தமிழ் வினாத்தாள் தந்தார்கள். 10 நிமிடங்கள் ஓடிவிட்டன. பதற்றம். தமிழ் வினாத்தாளைப் பார்த்தால் மொழி பெயர்ப்புக் குளறுபடி. சீத்தா என்பது கடவுள் பெயர். பொது அறிவோடு மாணவர்கள் புரிந்து கொள்ளலாம் என்ற பதில் சரியல்ல. போட்டித் தேர்வு எழுதுகிறேன். 3 மணிநேரம் (180நிமிடங்கள்) 180 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். 1 வினாவுக்கு 1 நிமிடம் மட்டும். 60 வயது அளவில் உள்ள நீதிபதிகள், இதை, நீதி மன்றத்தில் பேசிப்புரிவது வேறு. 18 வயது மாணவன், தேர்வுப் பரபரப்பில் “சீத்தாவின்” என்பது சிறுத்தைப் புலியைக் குறிக்கிறது என்று உணர முடியாது. ஒவ்வொரு கேள்விக்கும் ஆங்கிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் நேரம் ஓடிவிடும். 49 கேள்விகளுக்கு, ஆங்கிலத்தைப் பார்த்தால், 180 கேள்விகளுக்கும் விடை எழுத முடியாது. 120 கேள்விகளுக்குச் சரியான விடை எழுதிய ஒரு தமிழ்வழி மாணவன் பெறும் மதிப்பெண் 120 × 4 = 480. மொழிபெயர்ப்புக் குளறுபடியால், தமிழ் வழியில் எழுதிய, இதே மாணவன் 49 கேள்விகளுக்கும் தவறான விடை எழுதியிருந்தால், நிகர மதிப்பெண் (480 – 196) 284 ஆகிவிடும். (தவறான விடைக்கு மதிப்பெண் கழிக்கப்படும்)
பழிவாங்கலின் உச்சம்
இந்தக் குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட தமிழ்வழி மாணவர்களுக்கு ஒரு நிவாரணமும் வழங்கப்படவில்லை. போட்டித் தேர்வுகள், சமவாய்ப்புடன் நடத்தப்பட வேண்டும். மொழி பெயர்ப்புக் குளறுபடிகளை ஒத்துக்கொண்ட நீதியரசர்கள், தமிழ்வழி மாணவர்கள் பாதிக்கப்படவில்லை என்பதுபோல் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். நடுவண் கல்வி வாரியம் தகுதியற்ற நபர்களிடம் தமிழ்மொழி பெயர்ப்புப் பணியைக் கொடுத்துத் தமிழ் மாணவர்களைப் பழி வாங்கியிருக்கிறது.
நடுவண் கல்விவாரியம் எந்தவிதக் குற்ற உணர்வும் இன்றி கருணை மதிப்பெண்ணுக்கு எதிராக வழக்காடியது. மருத்துவப்படிப்பில் சேர்ந்தால், ஆங்கிலத்தில் தானே படிக்க வேண்டும். எனவே ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வாதமும் சரியல்ல. தேர்வு நேரத்தில் மாணவனின் மனநிலையைக் கணக்கில் கொள்ள வேண்டும். மருத்துவப் படிப்பில் சேர்ந்த பிறகு செய்ய வேண்டியவற்றை, தேர்வு நேரத்தில் புகுத்தக்கூடாது.

என்ன தண்டனை?
தமிழ்வழியில் தேர்வு எழுதிய மாணவர்கள் பல வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்வழி மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்குவது முறையற்ற பெரும் சலுகை என்பதும் சரியல்ல.
மொழி பெயர்ப்புக் குளறுபடி செய்தவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டுள்ளது? Natural Testing Agency அடுத்த ஆண்டு தேர்வு நடத்தட்டும். இப்பொழுது தமிழ்வழியில் தேர்வு எழுதி மருத்துவக் கனவு உடைந்து போனவர்களுக்கு என்ன நீதி வழங்கப்பட்டுள்ளது? தமிழ்வழியில் எழுதிய 24000 மாணவர்களில், இந்த 49 கேள்விகளுக்கு, எத்தனை பேர் சரியாக விடை எழுதியுள்ளார்கள் என்பதைக் கணக்கெடுத்து, பெரும்பாலானவர்கள் தவறாக விடை எழுதியிருந்தால், அதைக் கருத்தில் கொண்டு, 196 கருணை மதிப்பெண்கள் இல்லாவிடினும் இதில் பாதியாவது வழங்கி, பாதிப்புக்குள்ளான மாணவர்களைப் பாதுகாத்திருக்கலாம்.
போனது போகட்டும் இனிமேலும் இது போன்ற தவறுகள் நடக்காது என்பதை உறுதி செய்ய வேண்டியது நடுவண் அரசு தான். எளிய தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்புக் கனவுகள் காற்றோடு கரைந்து விடாமல் இருக்க அரசு இனிமேலாவது மொழி பெயர்ப்புக் குளறுபடிகள் நடக்கா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்!!!