தமிழக அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் நலச்சங்கமான ஜாக்டோ ஜியோ கடந்த இரண்டாண்டுக்களுக்கு மேல் போராட்டம் நடத்தி வருகிறது. தமிழக அரசும் பேச்சுவார்த்தை நடத்தி சிக்கல்களை தற்காலிகமாக தீர்த்து வைக்கிறது. ஆனால் சில மாதங்களில் மறுபடியும் வேலைநிறுத்தம் அமலுக்கு வருகிறது. இதற்கு நிரந்தரத்தீர்வே கிடையாதா? ஜாக்டோ ஜியோ முன்வைக்கும் கோரிக்கைகள் என்ன? ஏன் அரசால் அவற்றைத் தீர்த்துவைக்க முடியவில்லை? விரிவாக விரிவாகப் பார்க்கலாம்.

ஜாக்டோ ஜியோ
தமிழக அரசின் பணியாளர்கள் மற்றும் அரசு ஆசிரியர்களின் நலக்கூட்டமைப்பு தான் இந்த ஜாக்டோ ஜியோ ஆகும் (JACTO-GEO – Joint Action Committee of Tamil Nadu Teachers Organisation – Government Employees Organisation) இந்த அமைப்பின் கீழ் 50 ஆசிரியர் சங்கமும், 125 அரசு தொழிலாளர் சங்கங்களும் உள்ளன. இந்தியாவின் அரசுப் பணியாளர்களுக்கான மிகப்பெரிய இயக்கம் இதுதான்.
- பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
- மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ஏழாவது ஊதிய உயர்வின் அடிப்படியில் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கவேண்டும்.
- அதைச் செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டால் இடைக்கால நிவாரணம் வழங்குவது.
- சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
- மத்திய அரசின்கீழ் இயங்கும் பள்ளி ஆசிரியர்களின் ஊதிய அளவையே, தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும்.
போன்ற காரணங்களை முன்வைத்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
என்ன சம்பளம்?
சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் அளித்த (விஜய்நாராயண்) தகவலின் படி, பணியில் சேரும்போது தொடக்கல்வி ஆசிரியர்களுக்கு ரூ.56 ஆயிரம், நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.60 ஆயிரம், உயர்நிலை பள்ளி ஆசியர்களுக்கு ரூ.62 ஆயிரம், மேல் நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.66 ஆயிரம் என ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
2003 ஆம் ஆண்டிற்குப்பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் இல்லை என்று அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அரசு அறிவித்த ஊதிய உயர்வும் கிடைக்கவில்லை. இரண்டாண்டுகளாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தொடர் போராட்டங்களை நடத்திவரும் வேளையில் சாதகமான எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை.

தமிழக அரசு
2018 – 19 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் 27,205.88 கோடியை பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கியது. இதுபோக அதற்கு முந்தய ஆண்டில்(2017, அக்டோபர்) 30% ஊதிய உயர்விற்கு அனுமதியளித்தது தமிழக அரசு. மத்திய அரசின் ஏழாவது ஊதிய உயர்வினை அமுல்படுத்தவும் தமிழக அரசு ஒப்புக்கொண்டது. ஆக ஒதுக்கீடுகள் குறித்து எவ்வித சிக்கல்களும் இல்லை. அவற்றை நடைமுறைப்படுத்துவதே இங்கு பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை ஆராய நிபுணர்குழு ஒன்று தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டும் சிக்கல்களை தீர்க்க முடியவில்லை என்பதே உண்மை.
அரசிற்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் சிக்கித்தவிப்பது மாணவர்களே. தமிழக மாணவர்களுக்கு ஏற்கனவே நீட் மாதிரியான குழப்பங்கள் நீடித்துவரும் வேளையில் இம்மாதிரியான செயல்கள் அவர்களுடைய எதிர்காலத்தை மோசமாக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 1,14,602 ஆகும். இதில் `அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த 1,337 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர்’ என்ற விவரத்தை, பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது.

தனியார் கல்வி நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணங்களை செலுத்தமுடியாமல் தான் அரசுப்பள்ளிகளில் பல குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். மருத்துவக்கனவோடு பள்ளிக்கு வரும் எத்தனை குழந்தைகளின் நம்பிக்கையை எத்தனை ஆசிரியர்கள் காப்பாற்றுகிறார்கள்? சம்பளப் பிரச்சினைகள் ஒருவேளை இந்த மாதமோ இல்லை இந்த ஆண்டுக்குள்ளாகவோ சரி செய்யப்படலாம். அப்போது ஆசிரியர்களின் தேவைகள், எதிர்பார்ப்பு பூர்த்தியடைந்துவிடும். இடைப்பட்ட காலங்களில் கனவுகளைத் தொலைத்த மாணவர்கள் என்ன செய்வார்கள்? மறுபடியும் ஒருவருடம் பயிற்சிக்கு தனியார் பயிற்சி மையங்களுக்கு செல்லவேண்டிவரும்.
இன்றைய தேதியில் அரசு பள்ளிகளில் நீட், JEE போன்ற தேர்வுகளுக்கு என்ன மாதிரியான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன? இதனாலேயே நீட் பயிற்சி வகுப்புகள் பெருகிவருகின்றன. இதில் கொடுமை என்னவென்றால் அரசு ஆசிரியர்கள் பலபேர் இப்படி தனியார் பயிற்சி மையங்களை நடத்திவருகின்றனர். இதனை ஏன் அரசுப்பள்ளிகள் மேற்கொள்ள இயலவில்லை. மாணவர்களின் மேல் அக்கரை கொண்ட எத்தனை ஆசிரியர்கள் இதற்கென போராடினார்கள்? இப்படி ஏராளமான கேள்விகள் விடைகள் தெரியாமல் இருக்கின்றன. முன்பே சொன்னதுபோல எப்படியும் சில மாதங்களில் இதற்கென முடிவுகள் எடுக்கப்படும். சந்தேகமே இல்லாமல் மாணவர்கள் இதனால் அவதியுருற இருக்கிறார்கள். அவர்களுடைய எதிர்காலத்தை கணக்கில்கொண்டு இப்பிரச்சினையை முடிவிற்குக் கொண்டுவர இருசாரரும் பரஸ்பர ஒத்துழைப்பை வழங்குவது இங்கே அவசியமாகிறது.