ஜேகே ரௌலிங் எழுதிய ஹாரி பாட்டர் நூல் உலக அளவில் அதிகமாக விற்பனையாகும் நூல்களில் ஒன்று. இதுவரை 7 பாகங்கள் வெளிவந்து இமாலய சாதனைகளை நிகழ்த்தியிருக்கின்றன. அவை படமாகவும் எடுக்கப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் அந்நூலினை கல்லூரியில் ஒரு பாடமாக்க இருக்கிறது கொல்கத்தாவைச் சேர்ந்த சட்டப் பல்கலைக்கழகமான NUJS (National University of Juridical Sciences). உலகில் நடக்கும் தவறுகளைப் புரிந்து கொள்வதற்கு இம்மாதிரியான திட்டங்கள் தேவை என்கிறார் அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர். இதற்கென ஒரு ஆசிரியரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதற்காக ?
ஹாரி பாட்டரின் உலகத்தில் நிகழும் எல்லா காரியங்களுக்கும் பின்னால் நியதி ஒன்று இருக்கும். ஒரு விதியைச் சார்ந்தே ஹாக்வார்ட்ஸ் இயங்கும். இதனை மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதன் மூலமாக குற்றங்களை அணுகும் போது முன்வரைவாக எந்த எல்லைகளுக்குள்ளும் நின்று அதனைப் புரிந்துகொள்ளாதவறு வகை செய்யலாம் என்கிறார்கள் ஆசிரியர்கள்.
அதோடு மட்டுமல்லாமல் நம் நாட்டில் நடக்கும் குற்றங்களைப் புரிந்து கொள்வதற்கு சிறு கற்பனைத்திறனும் வேண்டும். குற்றம் நடப்பதற்கான வழிகளைக் கற்பனை இல்லாமல் கண்டு கொள்ள முடியாது. எளிதாகச் சொல்வதென்றால் மாயாஜால உலகமோ மந்திர உலகமோ மனிதர்களிடத்தில் உள்ள குரூரம் ஒன்று தான். அவை ஏற்படுத்தும் விளைவுகள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் இருந்திருக்கின்றன. மேலும், இந்தப் படிப்பில் ஹாரி பாட்டர் நூலில் வரும் மந்திர அமைச்சர்கள், மன்னிக்கமுடியாத சாபங்கள் பற்றியும் பாடங்கள் இருக்கிறதாம்.
20 மதிப்பெண்கள்
மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக ஒரு மாயாஜால வித்தையைக் கற்றுக்கொண்டு தேர்வின் போது செய்து காட்ட வேண்டுமாம். எழுத்துத் தேர்வு வேறு தனியாக நடத்தப்பட இருக்கிறது. மேலும், இது குறித்த விரிவான கட்டுரைகளை ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாக எழுதிச் சமர்பிக்க வேண்டுமாம்.

மாயாஜால வித்தைகளுக்குத் தகுந்தபடி அதிகபட்சமாக 20 மதிப்பெண்களுக்குள் வழங்கப்படும். 80 மதிப்பெண்கள் எழுத்துத் தேர்விற்கு. மாணவர்கள் ஆர்வத்துடன் இந்தப் பிரிவில் சேர்ந்து வருகிறார்களாம். துர்ஹாம் பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம் மற்றும் இண்டியானா பல்கலைக்கழகம் போன்றவை ஹாரி பாட்டர் நூலினைப் பாடத்திட்டத்தில் ஏற்கனவே சேர்த்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மந்திரக் கோல்கள் கொடுப்பார்களா என்று தான் தெரியவில்லை.