இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரியான ஐ.ஐ.டி டெல்லியில் (IIT – Delhi) பேராசிரியராக இருந்த அலோக் சாகர் (Alok Sagar) தற்போது பழங்குடியினருடன் விவசாயம் செய்து வருகிறார்.
சாகர் ஐ.ஐ.டி டெல்லியில் இளங்கலைப் பொறியியலும், உலகப்புகழ் பெற்ற ஹவுஸ்டன் (Houston) பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டமும் பெற்றவராவார்.

பேராசிரியர்
சாகர் டெல்லியில் பேராசிரியராகப் பணிபுரியும் போது கிராமப்புற மக்கள் படும் கஷ்டங்களைக் குறித்துத் தொடர்ந்து படித்து வந்திருக்கிறார். மாணவர்களிடம் இது குறித்த அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறார். விவசாயிகளின் துயர் துடைக்கத் தானே களத்தில் இறங்குவது என முடிவு செய்த அன்றே தன் வேலையை ராஜினாமா செய்து விட்டார்.

32 வருட விவசாயம்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பல பழங்குடியினருடன் வசிக்கத் துவங்கிய சாகர் கடந்த 24 வருடங்களாக கோச்சாமு என்னும் கிராமத்தில் 750 பழங்குடி மக்களுடன் வாழ்ந்து வருகிறார். இதுவரை 50,000 திற்கும் அதிகமான மரங்களை நட்டு வளர்த்திருக்கிறார் சாகர். சுற்றியுள்ள எல்லா பழங்குடியின மக்களின் மொழியையும் இவர் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.

விவசாயம் செய்ய இயலாத மக்களுக்கு விதை நெல்களை இலவசமாகக் கொடுத்து வருகிறார். சமீபத்தில் இவரைப்பற்றித் தெரிந்து கொண்ட மக்கள் இவரை வீட்டிற்குப் போகும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் சாகர் அதை மறுத்து விட்டார்.
கல்வி என்பது பணம் ஈட்டுவதல்ல!!
“கல்வி என்பது சக மனிதரின் துன்பத்தைப் போக்குவது மற்றும் எளிய மக்களுக்குச் சேவை செய்வதே” என சாகர் அடிக்கடி கூறுவதுண்டு. தொழில்நுட்ப வளர்ச்சியோ, பொருளாதார, கட்டமைப்பு வளர்ச்சியோ ஏழைகளைச் சென்றடைவதில்லை. அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதன் மூலமே உண்மையான வளர்ச்சியை அடைய முடியும் என்கிறார் சாகர்.

எளியவர்களைக் காப்போம் என வெற்றுக் கூச்சலிடுவோர் மத்தியில் சாகர் ஒரு மகத்தான மனிதர். அவரிடம் இருக்கும் சொத்துக்கள் ஒரு சைக்கிள், மூன்று ஜோடி உடைகள் மட்டுமே. கல்வி என்பது வியாபாரப் பொருளென மாறிவிட்ட நிலையில் இம்மாதிரியான மனிதர்களைப் பார்ப்பது அபூர்வம் தான். ஆனாலும் ஏழைகளை, வறுமையில் வாடுபவர்களை நாம் நினைத்தால் மீட்டெடுக்க முடியும் என்பதற்கு சாகரின் வாழ்க்கையே சான்று.