உலகிலேயே மிக சிறந்த கல்வி அமைப்பை கொண்ட நாடு ஃபின்லாந்து (Finland) தான். இந்த நாட்டு கல்வி அமைப்பை பலரும் ஆஹா..ஓஹோ என்று புகழ காரணமிருக்கிறது. அவர்கள் முன்னேறிய கதையை தெரிந்துகொண்டாலே போதும். கல்வியில் இந்தியா செய்ய வேண்டியது என்ன என்றும் தெரியவரும்.
சர்வதேச மாணவர் மதிப்பீட்டின் படி, ஃபின்லாந்து நாட்டு மாணவர்கள் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் சிறந்து விளங்குகிறார்கள். ஃபின்லாந்து நாட்டு மாணவர்கள் இந்த பாடங்களை படிப்பதில் மற்ற நாடுகளை விட அதிக நேரம் செலவிடுகிறார்கள்.
இன்று இப்படி இருக்கும் ஃபின்லாந்து நாட்டில் ஒரு காலத்தில் (1960 களின் இறுதி வரை) வெறும் 10 சதவீத ஃபின்லாந்து மாணவர்கள் மட்டுமே மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்திருந்தனர். ஃபின்லாந்து நாட்டவர்கள் இன்று இந்த நிலையை அடைய அங்கு ஏற்பட்ட கல்வி சீர்திருத்தம் தான் காரணம்!
பின்லாந்தில் ஏற்பட்ட கல்வி சீர்திருத்தங்கள்!
அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய கல்வி அவசியம் என்பதை உணர்ந்த அந்நாட்டு அரசு செய்த இந்த சீர்திருத்தம் தான் இத்தனைக்கும் முதற்படி. ஃபின்னிஷ் மொழியில் பெருஸ்கூலு (peruskoulu) அதாவது Preschool என பொருள்படும் கட்டாயக் கல்வித் திட்டம் இவ்வளவு பெரிய அசாத்திய முன்னேற்றத்தை சாத்தியமாகியுள்ளது. ஆரம்பப்பள்ளிகள் என 1970 களின் முற்பாதியில் தொடங்கப்பட்டது இத்திட்டம்.

ஃபின்லாந்தின் இந்த அற்புதமான கல்விமுறையைக் குறித்துத் தெரிந்து கொள்ள பல நாடுகளும் முனைப்பு காட்டிவருகின்றன. உயர்தர கல்விமுறைக்குக் காரணமாக இருப்பது மற்றும் வெளிநாட்டினர் தெரிந்து கொண்டு வருவது கல்விக் கொள்கைகள் மட்டும் அல்ல பயனுள்ள சமூகக் கொள்கைகளும் தான். அந்நாட்டு கல்விமுறை வெற்றி பெற்றதற்கு காரணமாக ‘Finnish Lessons 2.0‘ என்ற புத்தகத்தை எழுதிய ஆசிரியர் மற்றும் கல்வி கொள்கை ஆலோசகரான பசி சல்பர்க் (Pasi Sahlberg) கூறுவதும் இது தான்.
மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை சிறப்பாக வழங்குகிறது ஃபின்லாந்து அரசு. மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் ஏற்ற சூழலை ஃபின்லாந்து அரசு உருவாக்கித் தருகிறது. இங்கு குழந்தைகள் 7 வயதில் தான் பள்ளிக்குச் செல்ல தொடங்குகின்றனர்.
அனைவருக்கும் கல்வி மற்றும் சமத்துவம்
சமத்துவமின்மை தான் தரமற்ற கல்விக்கு காரணம் என்றும், சமநிலை உள்ள சமூகங்களில், கல்வி அமைப்பு சிறப்பாக இருப்பதாகவும் என தான் பசி சல்பர்க் தான் எழுதிய Finnish Lessons 2.0 புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சமத்துவம் உள்ள சமூகங்களில், பள்ளிகளில் மாணவர்கள் நன்றாகப் பயில்கிறார்கள்
பின்லாந்தில், கல்வி ஒரு அடிப்படை உரிமையாகக் கருதப்படுகிறது மற்றும் பின்னிஷ் கல்வி கொள்கை அனைவருக்கும் சம வாய்ப்புகளை வலியுறுத்துகிறது. சமத்துவம் உள்ள சமூகங்களில், பள்ளிகளில் மாணவர்கள் நன்றாகப் பயில்கிறார்கள் எனவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஃபின்லாந்து செய்யும் வேறு பல புதுமைகள்
- ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் ஒரே தரமான கல்வி வழங்கப்படுகிறது. பள்ளிகளில் பணக்காரர்கள் மற்றும் ஏழை தொழிலாளர்களின் குழந்தைகள் என எல்லோரும் ஒன்றாக அமர்ந்து கற்கின்றனர். இது போல இந்தியாவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் சத்தான மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. இது அவர்களின் ஊட்டச்சத்து தேவையை சரிசெய்கிறது. இது தமிழ் நாட்டில் காமராஜர் காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது.
- மாணவர்களுக்கு இலவச மருத்துவ மற்றும் பல் மருத்துவ உதவிகளும் உண்டு. இவை உளவியலாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவோடு நடக்கிறது.
குழந்தைகளின் மனநிலையை கருத்தில் கொண்ட கல்வி
- ஃபின்லாந்து பள்ளிகளில் ஆசிரியர்கள் நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் பாடம் நடத்துவார்கள்.
- ஃபின்லாந்தில் 15 வயதிலான மாணவர்கள் பள்ளிக்குப் பிறகு வாரத்திற்கு சுமார் 2.8 மணி நேரங்கள் பணி புரிகின்றனர்.
- மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் இல்லை. மாணவர்கள் கற்க வேண்டியதை வகுப்பறையில் கற்கிறார்கள். பிறகு பெரியவர்கள் எப்படி ‘Work/Life Balance’ என்று வாழக்கையை நடத்துகிறார்களோ அதே போல் குழந்தைகளும் ‘Education/Life Balance’ என்ற முறைப்படி பள்ளிக்கு வெளியே நண்பர்கள், பிற வேலைகள் என வேறு முக்கியமான செயல்களுக்கு நேரம் ஒதுக்க வழிவகுக்கிறது.
- மாணவர்கள் எந்த வித பதற்றம் இல்லாமல் படிக்க உதவ வேண்டும் என்பதை ஆசிரியர்கள் விரும்புகிறார்கள். தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது மட்டும் கல்வி / கற்றல் கிடையாது என்பது தான் இந்த அமைப்பின் நடைமுறை.
- கற்றலுக்கு இயற்கையாகவே ஆர்வத்தை தூண்ட வேண்டும் என்று ஆசிரியர்கள் நம்புகிறார்கள். மனப்பாடம் செய்வது ஒன்றுக்கும் உதவாது என்று அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.
- அந்நாட்டு ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு போதிய ஆதரவும், வாய்ப்பும் கொடுத்தால், எதையும் கற்றுக் கொள்வதற்கான ஆற்றல் இருப்பதாக நம்புகிறார்கள்.
கற்றலுக்கு ஏற்ற சூழல்
பள்ளி சீருடைகள் கிடையாது. பள்ளிகளுக்கு ஷூ அணிந்துவர தேவையில்லை. ஃபின்லாந்து மாணவர்கள் தேர்வுகள் குறித்து கவலைப்பட தேவையில்லை. படிப்பை தொடங்கிய முதல் 5 ஆண்டுகளில் தேர்வுகளே கிடையாது. மாணவர்கள் அவர்களின் திறனை வைத்து மட்டுமே மதிப்பீடு செய்யப்படுகிறார்கள்.

ஃபின்லாந்து எப்படி செய்கிறது?
கல்வியில் இவ்வளவு நுணுக்கத்தோடு செயல்பட்டு மக்கள் அனைவரும் கற்று முன்னேற ஃபின்லாந்து அரசின் சமூகத் திட்டங்களும் காரணம். அந்நாட்டுக் கல்விக் கொள்கைகளும் மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு வகுக்கப்படுகின்றன. மேலும் இது சாத்தியமாக ஃபின்லாந்து வசூலிக்கும் அதிகளவு வரியும் ஒரு காரணமாகும். உலகில் அதிக வரி வசூலிக்கும் நாடு ஃபின்லாந்து (51.6 % வரி). அதனால் இத்திட்டங்கள் சாத்தியாமாகின்றன.
இவ்வளவு வரி வசூலித்தும் அந்நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆம்! 2018-ல் உலகின் மிக மகிழ்ச்சியான நாடு என ஐ.நா தேர்ந்தெடுத்த பட்டியலில் முதலிடம் ஃபின்லாந்துக்கு தான். வருமானம், சுதந்திரம், ஆரோக்கியம், நம்பிக்கை, சமூக ஒத்துழைப்பு மற்றும் பெருந்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த பிரம்மாண்ட கணக்கெடுப்பில் ஃபின்லாந்து முதலிடம் பிடித்திருக்கிறது.
Also Read: உலகின் மகிழ்ச்சியான 10 நாடுகளின் பட்டியல்!!
கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் அறிவை வளர்த்துக் கொள்ளாமல் பிறமொழிகளை கற்றுக்கொள்வதே அறிவு என்று தமிழ்நாட்டில் சில பெற்றோர்கள் அறியாமையில் இருக்கின்றனர். ஒரே சொல்லை பிற மொழிகளில் கூறுவது எப்படி என தெரிந்துகொள்வதால் எந்த பயனும் இல்லை என்பதை தமிழக பெற்றோர்கள் உணரவேண்டும். அவர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஹிந்தி போன்ற மொழியையும் புகுத்துகின்றனர். அதையும் மனப்பாடம் செய்யும் குழந்தை அறிவியல், கணிதம் போன்றவைகளில் கோட்டை விட்டுவிடவே வாய்ப்புகள் அதிகம். ஆனால், ஃபின்லாந்து நாட்டு மாணவர்கள் இந்த பாடங்களை படிப்பதில் மற்ற நாடுகளை விட அதிக நேரம் செலவிடுகிறார்கள். அவர்களே கண்டுபிடிப்பாளர்களாவும், ஆராய்ச்சியாளர்களாகவும் வர வாய்ப்புகள் அதிகம்.