பொறியியல் மாணவர்களுக்கு வரும் அடுத்த சோதனை!!

0
127

இந்தியாவில் வருடந்தோறும் 3000 தொழில்நுட்பக்கல்லூரிகளில் இருந்து சுமார் ஏழு லட்சம் மாணவர்கள் தங்களது பட்டப்படிப்பை முடித்து வெளியே வருகிறார்கள். இந்தியாவில் தற்போது இருக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. வேலையில்லாமல் கல்விக்காக வாங்கிய கடனை அடைக்கவும் முடியாமல் திணறும் லட்சக்கணக்கான மாணவர்கள் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் தங்களது வாழ்க்கையை நடத்திவருகின்றனர். இதனைத் தடுக்கும் விதத்தில் தேசிய தொழிநுட்ப கல்வி இயக்கம் (AICTE) புதிய முடிவு ஒன்றினை எடுத்துள்ளது. அதாவது இறுதியாண்டில் மாணவர்களுக்கு பொறியியலுக்கான திறனாய்வுத் தேர்வை (GATE) கட்டாயமாக்க உள்ளது.

AICTE
Credit: AICTE

புதிய விதிமுறை

பொறியியல் கல்லூரியில் படிப்பினை முடிக்கும் மாணவர் பொறியியலுக்கான திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே கல்விச் சான்றிதழைப் (Degree Certificate) பெற முடியும். தவறும் பட்சத்தில் மறுடியும் GATE தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும். தேர்வில் வெற்றி பெறும்வரை சான்றிதழ்கொடுக்கப்படமாட்டாது.

இது குறித்து டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்தும் வழிகள் பற்றி விவாதம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலானோர் இந்த புதிய விதிமுறையை ஆதரித்ததாகவும் சிலர் எதிர்த்ததாகவும் தெரிகிறது. மாணவர்களின் கல்விசார் திறமை இந்ததேர்வின் மூலம் பன்மடங்கு அதிகரிக்கும். இதனால் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என்கிறார்கள் இதனை ஆதரிக்கும் கல்வியாளர்கள். அதேசமயம் நடைமுறைப்படுத்துவது மிகக் கடுமையான காரியம் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

ஆதரவும் எதிர்ப்பும்

தேசிய தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் இந்த புதிய முடிவுகள் குறித்து பேசிய விஸ்வேஸ்வரய்யா தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தின் தாளாளர் ஜெகன்நாத் ரெட்டி,” விதிமுறை குறித்த தெளிவான முடிவுகள் எடுக்கப்பட்டவுடன் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்” என்றார்.

GATE EXAM
Credit: INJNTU

மேலும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளில் இதற்கு தீர்வு காணப்படும் பட்சத்தில் 2019-2020 -ஆம் கல்வியாண்டில் சேரும் மாணவர்களுக்கு இந்த விதிமுறை பின்பற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மத்தியில் இந்த விதிமுறை குழப்பத்தை உருவாக்கியுள்ளது.

நீளும் குழப்பம்

AICTE வகுத்திருக்கும் பழைய விதிகளையே இன்றைக்கு பல தனியார் கல்லூரிகள் பின்பற்றுவதில்லை. அடிப்படை கட்டமைப்பு மற்றும் ஆய்வக வசதி இல்லாத கல்லூரிகளை தரம் உயர்த்துவதற்கு இதுவரையிலும் எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் AICTE எடுக்கவில்லை.

கல்லூரிகளில் உட்கட்டமைப்பு விஷயங்களை சரி செய்தாலே பல சிக்கல்களுக்கு விடை காணமுடியும். கழிப்பறை மற்றும் தரமான குடிநீர் வசதி இல்லாத கல்லூரிகள் கூட தமிழ்நாட்டில் இன்றுவரை செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அதை விடுத்து புதிய புதிய விதிமுறைகளை புகுத்துவது மாணவர்களிடையே பதட்டத்தையும் பயத்தையும் மட்டுமே அதிகரிக்கும்.

100 % வேலைவாய்ப்பு என விளம்பரம் செய்யும் எந்தக் கல்லூரி உண்மையில் அப்படி நடந்துகொள்கிறது? இப்படி முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை கூறி மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் கல்லூரிகளின் மீது என்ன நடவடிக்கை இதுவரை எடுக்கப்பட்டிருக்கிறது? இதுவும் ஒருவகையில் ஏமாற்றும் வித்தையே.

20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் பணியமர்த்தப்பட வேண்டும் என்ற ஒரு விதி ஏற்கனவே இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் எந்தக் கல்லூரியும் இதனை பின்பற்றுவதில்லை. இத்தனைக்கும் வருடத்திற்கு ஒரு முறை AICTE எல்லாக் கல்லூரிகளுக்கும் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கிறது. இப்படி பொறியியல் கல்லூரிகளில் மாற்றம் செய்யவேண்டிய விஷயங்கள் ஆயிரம் இருக்கின்றன. இந்நிலையில் கொண்டுவர இருக்கும் இப்புதிய விதிமுறையை எப்படி கல்லூரிகள் செயல்படுத்தப் போகின்றன, தவறும் பட்சத்தில் என்ன நடவடிக்கையை AICTE எடுக்கும் என்பதும் சந்தேகம் தான்.

மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வைபோல் பொறியியலுக்கு GATE தேர்வு கட்டாயமாக்கப்பட்டால் தனியார் பயிற்சி வகுப்புகள் ஆங்காங்கே முளைக்கும். அதற்கு கட்டணம் கட்ட முடியாமல் நடுத்தர மற்றும் ஏழை மாணவர்கள் தவிக்கும் நிலை உருவாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.