சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அண்ணா பல்கலைகழகம் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு பெற்ற இடங்களுக்கு கலந்தாய்வை நடத்தி வந்தது. கடந்த ஆண்டு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடந்த நிலையில் இனி அண்ணா பல்கலைகழகம் கலந்தாய்வை நடத்தாது என உயர்கல்வித்துறை வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைகழகத்திற்கு மாற்றாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் இனி கலந்தாய்வை நடத்தும் என உயர்கல்வித்துறை தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. அப்படியென்றால் நேரடி கலந்தாய்வு நடைபெறுமா? அல்லது ஆன்லைன் மூலமாக நடைபெறுமா? என்னும் குழப்பம் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே பரவிவருகிறது.
ஏன் இந்த மாறுதல்?
அண்ணா பல்கலைகழகம் நடத்தும் கலந்தாய்விற்காக ஒவ்வொரு வருடமும் ஒரு குழு அமைக்கப்படுவது வழக்கம். அதில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தலைவராகவும், பேராசிரியர்கள் உறுப்பினர்களாகவும், உயர்க்கல்வித்துறைச் செயலர் உள்ளிட்ட பிற அதிகாரிகள் உறுப்பினர்களாக இடம்பெறுவர்.
இந்த வருடம் சில மாற்றங்களை உயர்கல்வித்துறை ஏற்பாடு செய்தது. இதனால் அதிருப்தியடைந்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, தன்னிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் உயர்கல்வித்துறைச் செயலர் சிலர் உறுப்பினர்களை நியமித்திருப்பதாகக் கூறினார். இதையடுத்து, அந்தக் குழுவில் இருந்தும் விலகினார். இப்படியான நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வு நடைபெறுமா? என்பதில் உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கே சந்தேகம் இருக்கிறது.
நீடிக்கும் குழப்பம்
தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக அரசு ஒதுக்கீட்டிற்கான பொறியியல் கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் தர அடிப்படையில் கலந்தாய்வு தேதியானது ஒதுக்கப்படும். சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இது நடைபெற்று வந்தது.
ஆனால் கடந்த வருடம் இதில் மாற்றம் கொண்டுவரப்பட்டு ஆன்லைன் மூலம் கலந்தாய்வானது நடத்தப்பட்டது. தமிழகத்தில் தற்போது ப்ளஸ் டூ மாணவர்கள் தேர்வு முடிவிற்காக காத்துக்கொண்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு சிக்கல் வந்திருக்கிறது.
இந்த முறை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தான் நடத்தும் என்றும் தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அப்படி தொழில்நுட்ப கல்வி இயக்ககம் இம்முறை கலந்தாய்வை நடத்தினால் பழைய முறையில் நேரிடியாக நடத்துமா? அல்லது ஆன்லைன் மூலமாகவா? என்பது குறித்தும் தகவல் இல்லை. இதுகுறித்து உயர்கல்வித்துறை சார்பில் இதுவரை எவ்வித அறிக்கையும் வெளிவரவில்லை.
லட்சக்கணக்கில் மாணவர் சேர்க்கை நடைபெறும் பொறியியல் கலந்தாய்வில் வந்திருக்கும் குழப்பத்தினால் மாணவர்களும் பெற்றோர்களும் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.