தமிழக இளைஞர்களில் முக்கால்வாசிப்பேர் இன்ஜினியர்கள் தான். தெருவுக்கு ஒரு கல்லூரி. வீட்டிற்கு ஒரு இன்ஜினியர் என்ற நிலைக்கு தமிழகம் எப்போதோ மாறிவிட்டது. ஆண்டிற்கு லட்சக்கணக்கான மாணவர்கள் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு வெளியே வருகிறார்கள். அத்தனை பேருக்கும் வேலை கிடைக்கிறதா? என்றால் பெரிய சுழியம் தான். படிப்புக்கேற்ற வேலையும் இல்லாமல், கிடைக்கும் வேலைக்கு ஏற்ற திறமையும் இல்லாமல் ஒரு சமூகமே பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதெல்லாம் ஒருபுறமிருக்க பொறியியல் கல்விக் கட்டணத்தை 3 மடங்கு உயர்த்த இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவும் இன்ஜினியரிங்கும்
உலக அளவில் இந்தியாவில் இருந்து மட்டும் தான் ஆண்டுக்கு அதிக பொறியாளர்கள் உருவாகிறார்கள் அதிலும் தென்னிந்தியாவில் தான் இந்த எண்ணிக்கை மிக அதிகம். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அங்குள்ள இளைஞர்களின் எண்ணிக்கையைப் பொருத்து கூடவோ குறையவோ செய்யும். எண்பதுகளில் சீனாவில் ஏற்பட்ட அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணம் அந்த காலகட்டத்தில் அங்கிருந்த இளைஞர்களின் எண்ணிக்கை தான். அதேபோல் 2020ஆம் ஆண்டுவாக்கில் இந்திய மக்கள் தொகையில் படித்த இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும். இதன் காரணமாகவே அதிக கல்லூரிகளை நிறுவி அதன் மூலம் கல்வியை அடித்தட்டு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க நினைக்கிறது அரசு.
இதில் கல்வி வசதியை பரவலாக்கிய அரசு, வேலைவாய்ப்பில் கோட்டை விட்டு விட்டது. தமிழகத்தில் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் நிலையை நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கல்வியறிவும் வேலைவாய்ப்பு வசதியும் ஓர் தொடர் கண்ணிகளைப் போன்றவை. அரசு முதல் கட்டத்தில் வெற்றியும், அடுத்த கட்டத்தில் படுதோல்வியும் அடைந்திருக்கிறது.
சரி கல்லூரிகளே வேண்டாமா?
இன்றும் கிராமப்புறங்களில் முதல் தலைமுறை பட்டதாரி இளைஞர்கள் இந்த கல்லூரிகளில் மூலமாகத்தான் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர். அரசு கல்லூரிகள் போக எத்தனையோ தனியார் கல்லூரிகள் தங்களது சுயலாபத்திற்காக அதிக கட்டணங்களை வசூலித்து வருகின்றன. ஒருபுறம் போதிய அடிப்படை வசதிகள் கூட இல்லாத கல்லூரிகளின் வளர்ச்சி, இதன் காரணமாக துறைசார் திறமை இல்லாமல் உருவாக்கப்படும் பொறியாளர்கள், புதிய வேலைவாய்ப்பின்மை ஆகிய சிக்கல்கள் இருக்கும்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு ஏழை மற்றும் நடுத்தர வர்க்க குடும்பத்தினரிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. அரசு கல்லூரிகளில் தற்போது 8,500 ரூபாய் கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனை 20,000 ஆக மாற்ற பல்கலைக்கழகம் தமிழக அரசிடம் அனுமதி கோரியுள்ளது. விலைவாசி உயர்வு பேராசிரியர்களின் சம்பள உயர்வு, செலவினங்கள் அதிகரிப்பு ஆகியவற்றை காரணம் காட்டி இந்த கல்விக் கட்டண உயர்வை அண்ணா பல்கலைக்கழகம் நியாயப்படுத்துகிறது.

இந்தக் கட்டண உயர்வு அரசு கல்லூரிகளுக்கு மட்டும்தானா அல்லது தனியார் கல்லூரிகளுக்குமா என்பதை பல்கலைக்கழகம். அபராதம் போட்டு பிழைப்பு நடத்தும் பல தனியார் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தால் தங்களது தரப்பிலும் நிச்சயம் கல்விக் கட்டணத்தை உயர்த்த போராடும். எப்படி இருந்தாலும் தமிழக ஏழை எளிய மாணவர்களுக்கு அடுத்த சோதனை காலம் துவங்கி விட்டது என்றே சொல்ல வேண்டும்