தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பெற்றோர்களுக்கு பெரிய தலைவலியாக இருப்பது காலை வேளையில் குழந்தைகளை பள்ளிக்கு செல்ல தயார் செய்வதுதான். பல பெற்றோர்களுக்கும் அதை விட பெரிய தலைவலி, ஒரு மாத கால கோடை விடுமுறையில் பின்பற்றிய கால நேரத்தை மாற்றுவது தான். சில குழந்தைகள் விடுமுறை முடிந்து பள்ளி செல்ல விரும்பாமல் அழுது அடம் பிடிக்கவும் செய்வார்கள்.
அனுபவமுள்ள பெற்றோர்கள் நிலையே இப்படி இருக்க, Playschool / Pre-KG / LKG போன்ற வகுப்புகளில் குழந்தைகளை சேர்த்திருக்கும் பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி மகிழ்ச்சியாக, தினந்தோறும் பள்ளிக்கு அனுப்புவது?
முதன்முதலாக பள்ளி செல்லும் உங்கள் குழந்தையை எப்படி தினந்தோறும், மகிழ்ச்சியாக பள்ளிக்கு அனுப்புவது என்பது பற்றி 15 – டிப்ஸ் காண்போம்.
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை பெற்றோர் சரியான நேரத்திற்கு தூங்க வைக்க வேண்டும். குழந்தைகளை இரவு 7 மணிக்கே சாப்பிட வைத்து 8 மணிக்குள் தூங்க வைத்து விட வேண்டும். குழந்தைகள் நன்கு தூங்கினால் தான் வளர்ச்சியைத் தூண்டும் மெலனின் சுரக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சீக்கிரம் தூங்கும் குழந்தைகள், காலை சீக்கிரமே (காலை 6 மணிக்குள்) எழுந்திருக்க பழகி விடுவார்கள். இல்லையேல் நீங்கள் தொடர்ந்து 3 நாட்கள் ஒரே நேரத்தில் எழுப்பி விடுங்கள். பிறகு அவர்களுக்கு அது பழக்கமாகிவிடும். தானாகவே எழுந்துவிடுவார்கள்.
பள்ளி பற்றிய சரியான புரிதலை பெற்றோர் குழந்தைகளுக்கு சொல்லவேண்டும். புதிய நண்பர்கள், நல்ல ஆசிரியர்கள், பள்ளியில் இருக்கும் விளையாட்டு பொருட்கள் பற்றி உற்சாக எண்ணங்களை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும்.
குழந்தையின் பை (Bag), தண்ணீர் குடுவை (Water Bottle), சிற்றுண்டி பெட்டி (Snack Box) இவை அனைத்தும் குழந்தையின் விருப்பத்தின் படி தேர்வு செய்வது அவசியம்.
புதிய சீருடை, காலணி (Shoes), தண்ணீர் குடுவை, சிற்றுண்டி பெட்டி போன்றவைகளை எடுத்துக் கொண்டு முதல் முறையாக பள்ளி செல்வதைப் பற்றி ஆர்வத்துடன் கூறுங்கள்.
காலையில் எழுந்ததும் காலைக்கடன்களை முடிக்கவும், பல்துலக்கவும், குளிக்கவும் பழக்க வேண்டும்.
குழந்தைக்கு உணவை தானாக எடுத்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். ஏனெனில் பள்ளியில் சில நாட்களுக்கு பிறகு அவர்களே நண்பர்களுடன் கூடி உணவை எடுத்து உண்ண வேண்டும்.
புதிதாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தாயை விட்டு இருக்க மாட்டார்கள். அதனால் அவர்களை தினமும் 2 மணி நேரமாவது மிகவும் நெருக்கமான, நம்பகமான உறவினர் வேறு யாருடனாவது விட்டு பழக்குவது நல்லது. வேலைக்குச் செல்லும் அம்மாக்களுக்கு இப்பிரச்சினை இல்லை. குழந்தை ஏற்கனவே தாயை விட்டு பிரிந்து இருக்க பழகி இருக்கும்.
டயபர் அணியும் குழந்தைகளை, டயபரில் சிறுநீர் கழிக்க பழக்குங்கள். பள்ளியில் இருக்கும் போது பல குழந்தைகள் டயபரில் சிறுநீர் கழிப்பதில்லை. நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காத குழந்தைகளுக்கு சிறுநீர் தொற்று (Urinary Infection) ஏற்பட வாய்ப்பு அதிகம். தாய்மார்கள் இந்த விஷயத்தில் அதிக அக்கறை எடுத்து குழந்தைகளை கவனிக்க வேண்டும்.
முதல் 10 நாட்கள் குழந்தையுடன் பள்ளியில் இருங்கள். குழந்தையின் செயலை ஆசிரியரிடம் தினமும் கேளுங்கள்.
குழந்தை பள்ளியில் இருந்து வெளியே வந்தவுடன் குழந்தையை கட்டியணைத்து முத்தம் கொடுங்கள். அது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்குமான உறவை வலுப்படுத்தும்.
குழந்தையிடம் ஆசிரியர் என்ன சொல்லி கொடுத்தார் என்று தினமும் கேளுங்கள், ஆசிரியருக்கும் குழந்தைக்குமான நெருக்கம் அதிகரிக்கும்.
குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஊக்குவிக்கவும், பாராட்டவும் செய்யுங்கள்.
குழந்தைகளுக்கு பிடித்தமான உணவுகளை கொடுப்பது நல்லது. 2 சிற்றுண்டி பெட்டி தரலாம். ஒரு பெட்டியில் இட்லி போன்ற எளிதில் செரிக்கும் உணவு, மற்றொரு பெட்டியில் பழங்கள் தரலாம்.
மாற்று உடை(Spare Dress) கண்டிப்பாக குழந்தையின் பையில் வைக்க வேண்டும். ஏனெனில் குழந்தை தண்ணீரை கொட்டினாலோ அல்லது சாப்பிடும் உணவு ஆடையின் மேல் ஊற்றினாலோ மாற்ற தேவைப்படும். கைக்குட்டை(Kerchief or Napkin) கொடுத்துவிடுங்கள்.
இவை அனைத்தும் 1 வாரத்திற்கு முன்பே தொடங்குவது நல்லது. குழந்தைக்கு பள்ளி, விளையாட்டு பொருட்கள், ஆசிரியர் பற்றிய நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்துங்கள். இது மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்ல உதவும்.