வட அட்லாண்டிக் கடலில் ஏற்படும் அதீத வெப்பநிலை மாற்றத்தினால் அப்பகுதியில் புயல்கள் அடிக்கடி ஏற்படுவதுண்டு. அதே போல் இந்த ஆண்டு உருவாகியிருக்கும் புயலிற்கு ஃபுளோரன்ஸ் (Florence) எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் புயல் வரலாறு காணாத சேதத்தை விளைவிக்கும் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. மணிக்கு 250 கிலோமீட்டர் வரை காற்று வீசும் என்பதனால் சுமார் 15 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

50 வருடங்களில் இல்லாத பேரழிவு
அமெரிக்காவின் கடந்த 50 வருடங்களில் இதுவே அபாயகரமான புயல் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலால் அமெரிக்காவின் தென்கிழக்குக் கடற்கரை பகுதியில் பலத்த சேதம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, மற்றும் விர்ஜினியா பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். 50 செ.மீ க்கும் அதிகமாக மழை பெய்யும் என்பதால் வெள்ள அபாயமும் விடப்பட்டுள்ளது. மேலும், தற்போது கடலில் 30 அடிக்கு கடலலை மேலெழும்பி வருகிறது.

புயல் பாதை
வடக்கு அட்லாண்டிக்கில் இருந்து பெர்முடா தீவு மற்றும் பஹாமாஸை வழியாக அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியைக் கடக்க உள்ளது இப்புயல். முதலில் வடக்கு கரோலினாவின் வில்மிங்டன் நகரை இந்த ஃபுளோரன்ஸ் புயல் தாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரையைக் கடந்த பின்னரும் புயலின் பரப்பு அதிகமாக உள்ளதால் தாக்குதலின் வீரியம் குறையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
15 லட்சம் மக்கள் வெளியேற்றம்
புயலின் பாதிப்புக் கருதி சுமார் 15 லட்சம் மக்கள் வீடுகளை விட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு நகரத் தொடங்கியுள்ளனர். கரோலினாவின் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளும் வேறு சிறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். உணவு, உடை, அத்தியாவசியப் பொருட்களை காரில் எடுத்துக்கொண்டு மக்கள் கிளம்பியுள்ளனர். கரோலினா, விர்ஜினியாவின் பெரும்பாலான மக்கள் கார்களில் கிளம்பியுள்ளதால் பெட்ரொல், டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனிடையே நிலைமையைச் சமாளிக்க பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் உதவிப்பொருட்கள், விமானங்கள் தயார் நிலையில் உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
